Home Blog Page 5649

மலையக தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி உறுதி

நுவரா எலியா:

இந்தியா, இலங்கை வாழ் மலையக மக்களுக்கு என்றும் துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா – இலங்கையின் முக்கிய இணைப்பாக மலையகத் தமிழர்கள் விளங்குகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது. 700 இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இந்தியா – இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவது நம் கடமை. இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது.

மலையகத் தமிழர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தியா ஒத்துழைப்பு தரும். தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசியத் தலைவராக விளங்கியவர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், மலையக மக்கள் உலகுக்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று! என்று புகழாரம் சூட்டினார்.

இலங்கை பயணத்தை ஒட்டி, தனது டிவிட்டர் பதிவுகளில் தமிழில் டுவிட்டிய மோடி, மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய போதும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பேசினார்.

தமிழ்த் தாயின் பிள்ளைகளான நீங்கள் பழைமையான தமிழ் மொழியைப் பேசுவதில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்ட மோடி, இந்திய, இலங்கை அரசுகளுக்கு இணைப்பு மலையக மக்கள் என்றார். நான் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், வளர்ச்சிக்கான செய்தியை காந்தி தெரிவித்தார். காந்தி இலங்கை மலையகப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். காந்தி சர்வதேச மையம் மாத்தளையில் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை, தஞ்சை நாயக்கர்களுடன் இலங்கை அரசர்கள் திருமண உறவு கொண்டிருந்தனர். மலையக மக்களின் உறவினர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர். மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பேசினார்.

க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிறிஸ் கெய்ல்

 

இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், “க்ளிக் ஆர்ட் மியூசியத்தை” சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில்தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை தொடர்ந்துகலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. அங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை, கலிபோர்னியாவைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் பெங்களூரு நகரத்தின் வொய்ட் ஃபீல்ட், வெர்ஜினியா மால்ஸில் ஏ.பி.ஸ்ரீதரின் ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியத்தை பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். பெங்களூர் அணிவீரருமான கிறிஸ் கெய்ல் வண்ணம் தீட்டி துவக்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியத்தில் உள்ள ஓவியங்களுடன் மிகவும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

க்ளிக் ஆர்ட் மியூசியம் அனுபவம் பற்றி, கிறிஸ் கெயில் பேசுகையில், ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள் எனக்குரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. சிறகுகள் ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்தபோது, நான் ஒருஏஞ்சல் போலவே என்னை உணர்ந்தேன், என்று சிலாகித்தார்.

இங்கே இருக்கிற 27 ஓவியங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தேடுக்கப்பட்டு புதிதாக வரையப்பட்டஓவியங்களாகும். அதனால் உறுதியாக ரசிகர்களை மகிழ்விப்பதோடு, ஒரு புதிய அனுபவத்தையும் நிச்சயம்தரும் என்கிறார், ஓவியர் ஏ.வி.ஸ்ரீதர்.

ஜாதி மோதலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை!

நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய விக்ரமன், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.,யாக மதுரை மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த டாக்டர் அருண் சக்தி குமார் நெல்லை எஸ்.பியாக பொறுப்பேற்றார்.
எஸ்.பி.,அருண்சக்திகுமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2010ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 2012ல் ஐ.பி.எஸ்.,தேர்வானார். தொடர்ந்து நெல்லையில் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தூத்துக்குடியில் உதவி எஸ்.பியாகவும், மதுரையில் துணைகமிஷனராகவும் இருந்துள்ளார். 
இது குறித்து எஸ்.பி அருண்சக்தி குமார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். ஏற்கனவே இருந்த எஸ்.பி மேற்கொண்ட அனைத்து நல்ல அம்சங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஹலோ போலீஸ் எனப்படும் வாட்ஸ்அப் முறையில் புகார் அளிக்கலாம். 
மணல் கொள்ளையர்கள், சாராயம் காய்ச்சுவோர், ஜாதி ரீதியாக மோதல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ராம்கோ ராமசுப்ரமணிய ராஜா மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல்

சென்னை:
ராம்கோ நிறுவனத் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்…

தொழில் அதிபர் ஆன்மீகச் செம்மல் ராமசுப்பிரமணிய ராஜா மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது..

பாரம்பரியமிக்க குடும்பத்தில் தோன்றி, அரும்பெரும் சாதனைகள் புரிந்த ராம்கோ குழுமத்தின் தலைவரான பி.ஆர். ராசுப்பிரமணிய ராஜா, நேற்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவால் துயரரும் அவரது குடும்பத்தார், நிறுவன ஊழியர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ராமசுப்பிரமணிய ராஜா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரை தொழில் நகரமாக வளர்ச்சி பெற பெரும் பணிகளைச் செய்தவர். ஆன்மீகத்திலும், கல்வி வளர்ச்சியிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழக இளைஞர்களிடம் நல்ல மாற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கோயில் திருப்பணிகளைச் செவ்வணே நிறைவேற்றியவர். அவரது இழப்பு தொழில் துறைக்கும், ஆன்மிகப் பணிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

– என்று தெரிவித்துள்ளார்.

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: வழக்கத்தை நிகழ்த்திக்காட்டிய மாணவியரின் அபார தேர்ச்சி விகிதம்!

சென்னை:

பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று, தங்கள் திறமையை நிரூபித்தனர். மேலும் 1,813 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 292 அரசுப் பள்ளிகள் 100 சத தேர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளன.

புதுச்சேரியில் தேர்வு எழுதிய 15,583 பேரில் 13,508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 5, 994 பேர். மாணவிகள் 7,514 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 86.68 சதவிகிதம்.

தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரம்:

தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவகித மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட 0.7 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நகராட்சிப் பள்ளிகள் 87.20 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பழங்குடியினர் பள்ளிகள் 86.65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 97.77 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது என்றும் கிரேடுமுறை பின்பற்றப்படும் என்றும் அரசு கூறியிருந்தது. அதன்படி, 1,180 மதிப்பெண்களுக்கு மேல் ஏ கிரேடு பெற்றனர்.
1,151- 1180 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடு பெற்றனர்.
1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சி கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகள் 90.06 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.06 சதவிகிதம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86 சதவீதம் .
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் எடுக்கவில்லை.

வேதியியல் பாடத்தில் 1123 பேரும், இயற்பியல் பாடத்தில் 187 பேரும், வணிகவியல் பாடத்தில் 8301 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 5597 பேரும், கணிதம் பாடத்தில் 3656 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இனி மாவட்ட வாரியாக தேர்ச்சி:

97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 33 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 84 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 31,527 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 14,649 பேர். பெண்கள் 16,878 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 26.589 பேர். ஆண்கள் 11,658 பேர். பெண்கள் 14,931 பேர். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 84.33 சதவிகிதம். இதில் பெண்கள் 88.46 சதவிகிதம். ஆண்கள் 79.58 சதவிகிதம். 11,658 பேர் மாணவர்களும், 14,931 பேர் பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.30 சதவிகிதம் குறைவு.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 42,066 பேரில் 36,076 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85/76 சதவிகிதம். இது கடந்த ஆண்டை விட 3.71 சதவிகிதம் குறைவு.

நெல்லை மாவட்டத்தில் +2 தேர்வில் 95.51% தேர்ச்சி . நெல்லை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 38,271 பேரில் 36,551 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.76% கூடுதலாகும். நெல்லை மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகள், 20 அரசு உதவி பெறும் பள்ளிகள், 58 மெட்ரிக் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் மாவட்டத்தில் 305 பள்ளிகள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 15,934 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில், 96.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கடந்த ஆண்டு 9வது இடத்திலிருந்து இம்முறை 2- ம் இடத்திற்கு ராமநாதபுரம் முன்னேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,411 மாணவர்களில் 20468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.44 சதவிகிதம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 92 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளர்.

தேனி மாவட்டத்தில் 14,918 பேர் தேர்வு எழுதினர். 14,311 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.93 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.11 சதவிகிதம். கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு .8 சதவிகிதம் அதிகம்.

கடலூர் மாவட்டத்தில் மந்தமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் 88 சதவிகிதம் தேர்ச்சி. அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகள் விவரம். அரியலூர் சி.எஸ்.ஐ பள்ளி மாணவன் சதிஸ் குமார் 1176 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கஸ்தூரி 1176 மதிப்பெண். ஆலத்தியூர் வித்யா மத்தீர் பள்ளி மாணவி சந்தோஷினி 1175 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி அன்பு மலர் 1168.

சிவகங்கை மாவட்டம், தேர்வு எழுதியவர்கள் 16,670 பேர். தேர்ச்சியடைந்தவர்கள் 16,033 பேர். தேர்ச்சி விகிதம் 96.17 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.07 சதவிகிதம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 155 பள்ளிகளைச் சேர்ந்த 20,457 மாணவ, மாணவிகள் பேர் தேர்வு எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டத்தில் மொத்தமாக 93.01 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 92. 16 சதவிகிதம் தேர்ச்சி. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேர்வு எழுதிய பள்ளிகளில் 37 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 199 பள்ளிகளில் பயின்ற 25,196 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 24,654 பேர் தேர்ச்சி பெற்றனர்.

திண்டுக்கல் அரசு பள்ளி மாணவர்கள் 88.02 % சதவீதம் தேர்ச்சி.

கரூர் மாவட்டத்தில் 11,404 பேர் தேர்வு எழுதியதில், 10,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த கல்வியாண்டில் 93.52 சதவிகிதத்தில் இருந்த தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் 94.95 சதவிகிதமாக உயர்ந்து, 1.43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 104 பள்ளிகளில் 39 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய 24,497 பேரில் 19,677 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மோடியைச் சந்தித்த ராஜபட்ச : மனமாற்றமா? ராஜதந்திரமா?

modi rajapakshe - 2026

கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். நேற்றிரவு (வியாழக் கிழமை) இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடியை, ராஜபட்ச சந்தித்துப் பேசினார்.

நேற்று கொழும்பு சென்றடைந்த மோடியை விமான நிலையத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இரு தினங்களும் இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தில் ராஜபட்சவை சந்திப்பது குறித்து திட்டமிடப்படவில்லை. என்றாலும் ராஜபட்சவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர், ராஜபட்சவின் ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கை வரும்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது கூற்றை மெய்ப் படுத்தும் விதமாக, மோடிக்கு எதிராக ராஜபட்சவின் ஆதரவாளர்களும் அவ்வப்போது, கொம்பு சீவிக் கொண்டிருந்தனர். மோடிக்கு எதிரான மனநிலையை ராஜபட்சவின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
இருப்பினும் இந்த எதிர்ப்புக் குரலுக்கு திடீர் திருப்பமாக, அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு ராஜபட்ச அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டினார். மேலும் மோடி தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அவரின் இத்தகைய மாற்றம், இலங்கை அரசியலில் மீண்டும் இந்தியத் துணையுடன் கோலோச்ச எடுக்கும் நடவடிக்கையா, அல்லது உண்மையான மனமாற்றம் தானா என்று பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், மோடியைப் பாராட்டிப் பேசிய நிலையில்தான், ராஜபட்சவை மோடி சந்தித்தார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

மோடியை மோசமாக சித்திரிக்கும் கூகுள் மீது உ.பி. போலீஸார் வழக்கு!

லக்னோ:
பிரதமர் மோடி குறித்து அவதூறு வெளியிட்டதாக ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலகின் முதல்நிலை இணைய தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியானது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்ததால், அது நீக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நந்த் கிஷோர் என்ற வழக்குரைஞர் ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நேற்று புகார் அளித்தார். பிரதமர் மோடி குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல் தனக்கும், மற்றவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு கமல் கிஷோர் உறுதி செய்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், எனவே இது குறித்து எதையும் தெரிவிக்க முடியாது எனவும் கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் சேவைக் கட்டண வதந்தி: உண்மை என்ன?

புது தில்லி:

ஒவ்வொரு முறை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்று உத்தரவு வந்ததால், அந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள், டிவி செய்திகள், என உலாவந்தது. ஆனால், இதில் உண்மையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது.

ஏடிஎம் சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றங்களுடன் கூடிய புதிய விதிகளை எஸ்பிஐ வங்கி வரும் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், எனவே ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் வெளியான தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி அளித்த விளக்கத்தில், ஏடிஎம் மூலம் பணம் பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை;
E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

கபாலி டீஸரின் சாதனையை முறியடித்த விவேகம்!

சென்னை:

12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்கள் என சாதனை படைத்துள்ளது விவேகம் பட முன்னோட்டம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன் என பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்ப விவேகம் டீம் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி விவேகம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் மே 11-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனைக் கண்டு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.

“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP” என்று அஜித் பேசியுள்ள வசனம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

12 மணி நேரத்தில் 50 லட்சம் விசிட்ஸ் என சாதனை படைத்த முதல் தென்னிந்திய பட டீஸர் என்ற பெருமை விவேகத்துக்குக் கிடைத்துள்ளது. முன்னர் ‘கபாலி’ 24 மணி நேரத்திலும், ‘கட்டமராயுடு’ டீஸர் 57 மணி நேரத்திலும், ‘பைரவா’ 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி

ஜம்மு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் அமைந்துள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தான் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டது. அத்துமீறல் தொடர்வதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் இந்திய எல்லையான அர்னியா பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இருப்பினும் வழக்கம்போல், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியது. இதற்காக, இந்திய தூதரை நேரில் அழைத்து, பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது.