Home Blog Page 5656

ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் கார் உடைப்பு

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக.,வின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, ஆர் கே நகர் தொகுதி 38-வது வட்டம் நேதாஜி நகரில் வேட்பாளர் மதுசூதனன் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் சோதனை

சென்னை:
வெள்ளிக்கிழமை இன்று காலை முதல் அதிமுக., நிர்வாகிகள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற பணம் வாங்கியதாக பதவியை இழந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதுபோல்,  எம்.ஜி.ஆர். பல்கலை துணைவேந்தர் கீதா லெட்சுமி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரத்குமார், விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல அதிமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

முன்னதாக, வியாழன் நேற்று சரத்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருந்தார். தொகுதியில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் பணப் பட்டுவாடா செய்யப் படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார்.

அம்ரிஷ் இசையில் 3 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் 2 பாடல்கள் கதையோடு அமைத்திருக்கிறேன். மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கர்ஜனை’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்’. என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இசை : அம்ரிஷ், ஒளிப்பதிவு : சிட்டி பாபு, படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, சண்டைக்காட்சி : சுப்ரீம் சுந்தர், பாடல்கள் : விவேகா, சொற்கோ, கருணாகரன், நடனம்: நோபல், படங்கள்: சீனு, மக்கள் தொடர்பு: இரா.குமரேசன்

நிர்வாகத் தயாரிப்பு: ஹேபாஸ்கர்,

தயாரிப்பு: ஜோன்ஸ்,

எழுத்து-இயக்கம்: சுந்தர்பாலு.

மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய்!

குற்றம் 23″ வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் இந்தர் குமார் – அருண் விஜய் இணையும் புதிய படம்
 
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கின்றார்.
முன் தினம் பார்த்தேனே, தடையறத்தாக்க, மீகாமன் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார்.
என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய் இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த தடையறத்தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதுதான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி என்று அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து
பேசினார்.

மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியது:

எழுத்துலகில் நல்லெழுத்து வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக்கிடந்தது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை.

நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. கரைந்த நிழல்கள் என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார்.

“படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடிப்பாள். எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டுக் கடைசியில் தயாரிப்பாளர், ’தயவு செய்து வந்துவிடம்மா உன்னை இழிமொழியில் திட்ட விரும்பவில்லை ஏனென்றால் நீ என் மகளாகக்கூட இருக்கலாம்’” என்று சொல்வார். இப்படி நகையோடு கூடிய வலியும், வலியோடு கூடிய நகையும் அவர் எழுத்தில் இழையோடிக்கொண்டேயிருக்கும்.

அவரது புலிக்கலைஞன் என்ற சிறுகதையைச் சிறந்ததாகச் சொல்வார்கள். அதைவிட அவரது ‘பிரயாணம்’ என்ற சிறுகதையைத்தான் ஆகச்சிறந்தது என்று அடையாளம் காட்டுவேன்.

“40 ஆண்டுகளாக எழுதும் என்னை எந்த அரசியல் கட்சியும் அழைக்கவில்லை. ஏனென்றால் என்னைப்போன்ற எதார்த்தவாதிகள் அரசியலுக்குத் தேவையில்லை. நாங்கள் எதிர்த்தும் கோஷமிடமாட்டோம். அவர்களுக்கும் பயன்படமாட்டோம் என்று அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது” என்று எழுதியிருக்கிறார். வாழும்போது எழுத்தாளர்களைத் திண்டாடவிடுவதும் வாழ்ந்த பிறகு கொண்டாடுவதும் எழுத்தாளனுக்குத் தரப்படும் இரண்டு தண்டனைகளாகும்.

அவருக்கு இனி பூப்போட வேண்டாம்; பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வதுதான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

தமிழர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! நல்ல நூல்களை, இதழ்களை, ஆரோக்கியச் சிந்தனைகளை வளர்க்கும் பதிவுகளை படித்து, அறிவை வளர்த்துக் கொள்வதும் ஞானம் கூடப் பெறுதலும் அருகி வருகிறது. உலகியல், ஆன்மிக அறிவு மங்கி… அரசியல், மதத் துவேஷ வெறி மதி மயக்கத்தால் கூடப் பெற்று வருகிறது!
விளைவு- விலை கொடுக்க வேண்டிய நிலை!
மக்கள் இப்படி இருக்க, அரசு அதற்குச் சளைத்ததா என்ன?
நூலகங்களுக்கான இதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டன.

இந்த நிதியாண்டில் இருந்து தமிழ் இதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. 6 தமிழ் நாளிதழ்கள், 4 ஆங்கில செய்தித்தாள்கள், 12 வார மாத இதழ்கள் வாங்கும் நூலகங்களில் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாம்!

மேலும், கடந்த ஒன்றரை வருடங்களாகவே நூலகங்களுக்கு வழங்கப்பட்ட இதழ்களுக்கான தொகை, வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்களுக்கும் ஒரு வருட, ஒன்றரை வருட பாக்கி வைக்கப்பட்டிருப்பதும், காசு கமிஷன் கொடுத்து சரிக்கட்டினால் அப்படி இப்படி வளைந்து கொடுத்து காசோலையை வறண்டு போன பசுஞ் சோலையாய் கண்ணில் காட்டுவதும் எழுதப்படாத விதி ஆகியுள்ளது!
இதுதான் தமிழக அரசின் செயல்படாத லட்சணம்!

அதுபோல், நூல்கள் வாங்கப் பெறுவதும், நூல் பதிப்பாளர்களுக்கு பாக்கியைக் கொடுப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளதால், திண்டாட்டம் என்று சிலர் காதுபடவே சொல்கிறார்கள்!

அரசும் மக்களும் இவ்வளவு மோசமான மன நிலைக்குச் செல்வது, தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன என்று அன்று ஒருவர் சொன்னதன் இன்றைய கண்மேல் பலன் காட்சிகள்தான்~!

இதைச் சொன்னபோது, நண்பர்கள் சிலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஆனால், ”இது இன்று தோன்றிய நிலைமை அல்ல. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பலன் இப்போது தெரிகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன. நல்ல, தரமுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அதே சமயத்தில்தான் தரம் கெட்ட வார இதழ்களும் வரத்துவங்கின. ஒரு காலத்தில் அற்புதமாக வந்து கொண்டிருந்த தினமணி, ஹிந்து பத்திக்கைகள் காலப்போக்கில் தரம் தாழ்ந்து போயின. ஆனந்த விகடனின் கதியும் இப்படியே. போதாக்குறைக்கு பாழாய்ப்போன டி.வி. சேனல்கள். காலை பத்து மணிக்கே சீரியல்களைத் துவங்கி விடுகின்றன. இதனால் குடும்பப் பெண்களுக்கிடையில் வார இதழ்கள் படிக்கும் வழக்கம் முற்றிலும் போயி விட்டது. ஒரு காலத்தில் கல்கியில் வெளிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருப்போம். நூலகம் செல்லும் வழக்கம் குறைந்து போனதற்கு இப்போதுள்ள செல்போன், வாட்ஸ் அப், முக நூலகளும் காரணம். அதேபோல எழுத்தாளர்களிலும் தரமானவர்கள் குறைந்து விட்டார்கள்.” என்றார் நண்பர் கே.வி.சிவராமன்~!

”இதில் மற்றுமொரு விடுபட்ட விஷயமும் உள்ளது. பொதுக்காரணிகள் அடிப்படையிலான cartel கள் இயங்குவதும், அவற்றின் குழு உறுப்பினர்கள் எழுதிய சுமாரான புத்தகங்கள் கூட பொது நூலகங்களிலும், பல்கலைக்கழக/கல்லூரி நூலகங்கள் மீதும் வலிந்து திணிக்கப்படுவதும் வாடிக்கையாகிப் போன சோகமும் இங்கு தான் நிகழ்ந்துள்ளது.” என்றார் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன்!

எங்கே போகிறது தமிழகம்!?

டாஸ்மாக் ஒன்றே வெறியா? குடிப்பது ஒன்றே குறியா?

காரைக்குடியில் கம் பன் திருவிழா ஏப்ரல் 7இல் தொடக்கம்

  
காரைக்குடி கம்பன்கழகம் சார்பில் கம்பன் திருவிழா ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்குடி தாய்க்கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பேராசிரியர் தி. ராசகோபாலன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் ந. விஜயசுந்தரி தொடக்க உரையாற்றுகிறார்.
  இதில், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ப. பாண்டியராஜனுக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்படுகிறது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதிய மீனாட்சி- பழனியப்பா ஆய்வுச்சொற்பொழிவு நூலான “கம்பன் படைத்த கைகேயி‘ எனும் நூலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிடுகிறார்.
  ஏப்ரல் 8ஆம் தேதி மாலை எழுத்தாளர் பழ. கருப்பையா தனிப்பேருரையும், கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது.  ஏப்ரல் 9ஆம் தேதி மாலை சொற்பொழிவாளர் சுகி. சிவம் நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடை பெறுகிறது.
  ஏப்ரல் 10ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயில் என்று கூறப்படும் கம்பன் சமாதிக் கோயிலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகிக்கிறார். திருச்சி இரா. மாது, தேவகோட்டை வி. யோகேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர். முடிவில் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார்.
  மேலும், இந்த ஆண்டு கம்பன் கழகம் கூட்டும் நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கம் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோட்டையூர் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் நடைபெறுகிறது. விழாவை செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தொடங்கிவைக்கிறார். ராசா மணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசுகிறார். திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார். அழகப்பரின் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராஜன் எழுதிய அரிய மாமனிதர் அழகப்பர் என்ற கவிதை நூலை வெளியிட்டுப் பேசுகிறார்.
  இவ்விழாவில் செட்டிநாட்டைச் சேர்ந்த இலக்கியங்கள், தமிழ் வளர்க்கின்ற நிறுவனங்கள் மடங்கள், கலைகள் என பல்வேறு தலைப்புகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழறிஞர்கள் ஆய்வேடுகள் வழங்குகின்றனர்.   நிறைவு விழாவுக்கு தஞ்சாவூர் இளவரசர் பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகிக்கிறார். கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் நிறைவுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருவதாக தெரிவித்தார்.

கோடை நோய்களை எதிர்கொள்ள குளு குளு யோசனைகள்!

சென்னை
கோடை வெய்யில் இப்போது அதிகம் தலைக் காட்டி வருகிறது.
அண்மையில் சென்னையைப் புரட்டிப் போட்ட புயலில் மரங்கள் பல சாய்ந்து விட்டன. சென்னையை பசுமையாக்கி வைத்திருந்த மரங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்து கருகி விட்டதால், கோடை வெப்பத்தின் தாக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், சித்த மருத்துவரான திருநாராயணன் திருப்பதி, கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள சில வழிமுறைகளைத் தருகிறார்…

அவர் கூறுவது…

கோடையின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வேனல்கட்டிகள் , வேர்குருகள்,உடல் காங்கை என்று குழந்தைகளும் முதியவர்களும் வர ஆரம்பித்து விட்டனர்.

சென்னையை பொறுத்தவரை 100 ℉ தொடாவிட்டாலும் மரங்கள் விழுந்ததாலும் அதிக ஈரபதத்தினாலும் தாங்க முடியாதவாறு இருக்கிறது.

சந்தனாதி தைலம் தேய்த்து குளிப்பதுடன், வெட்டிவேர் ஊறிய நீர், எலுமிச்சை சாறு-சிறிது உப்பு சிறிது நாட்டு சர்க்கரை சேர்ந்து பருகவும்.

காலில் உப்பு சத்து குறைவினால் ஏற்படும் தசை பிடிப்பு வலி ஏற்படாமல் இருக்கும். திரிபலா சூரணத்தை தேய்த்து இரு முறை குளிக்க வேனல்கட்டிகள் , வேர்க்குருகள் கட்டுப்படும்.

சிறு குழந்தைகளுக்கு சந்தனம் அரைத்து பூசலாம். நன்னாரி என்ற பெயரில் மலை நன்னாரிதான் கிடைக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை சந்தனம் இல்லாவிட்டால் அதனையும் அரைத்து வேனல்கட்டிகளின் மேல் பூசலாம். அதையே பானமாகவும் பருகலாம்.

நன்னாரியில் உள்ள வேதிப்பொருட்கள் மலைநன்னாரி எனும் மாகாளி கிழங்கிலும் உண்டு . அதே மருத்துவ குணமும் உண்டு விரல்களுக்கு மருதாணி பூசவும் . சிறுநீர் எரிச்சலுக்கு மிளகு அளவு நல்ல சந்தனத்தை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

மருதாணி இலையை TEA டீ போன்று சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். குழந்தைகளின் உடலில் சிறு சிறு சிவப்பான நிறமாற்றம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். பகல் நேர வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

தண்ணீர் விற்பனையை தடை செய்ய வேண்டும்!

எம்.லட்சுமிநாராயணன் (கட்டுரையாளர்: கட்டுமானப் பாதுகாப்பு ஆர்வலர்)

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இப்போது கோடைக்காலம் துவங்குகிறது. ஆனாலும்  கோடைக்காலம் முடிந்து பருவமழை நேரத்திலும் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியதை சென்ற வருடங்களில் பார்த்தோம். அப்படி இருக்கும்போது, இந்தக் கோடைக்காலத்தை எப்பாடி சமாளிக்கப் போகிறோம் என்பது நம்முன் உள்ள சவால்.

ஆடு மாடுகள் கால்நடைகள் குடிக்கக்கூட காசு கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டிய அவலம். பருவ மழை பொய்த்ததால் குடத்தால் தண்ணீர் விட்டாவது நெற்பயிரை காப்பாற்றிவிடமுடியுமா என்கிற பகீரத பிரயத்தனம். மணற்கொள்ளை, கழிவு நீர், இரசாயன விஷக்கழிவுகள், மனிதக்கழிவுகள் கலக்கும் கேடுகளால் இறந்து கொண்டிருக்கும் நதிகள்.

பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டாம். தீர்வைச்சொல்லும் பிள்ளாய், என்று அனைவரும் ஆத்திரப்படுவது அவசரப்படுவது தெரிகிறது. இதற்கு அருமையான ஒரு தீர்வை இரண்டே ஆண்டுகளில் எட்டிவிட முடியும் என்றால் யார் இப்போது நம்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எண்ணிய எண்ணியாங்கு செய்யும் திண்ணிய மனமுடையோர் நாம் என்பதை நிரூபிக்க, உலகிற்கே வழிகாட்ட இதுதான் தருணம்.

முதலில் நதிகள் கழிவுநீர்த்தடங்களாக மாறுவதை ஒரேயடியாக நிரந்தரமாக தடுப்பது எப்படி?

இன்றைய மனிதன் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 15 லிட்டர் நீரை இயற்கைக்கடன், குளியலுக்கு என்று கழிவு நீராக மாற்றுகிறான். ஆற்றில் குளத்தில் குளிப்பவர்கள் சற்று குறைவாகத்தான் மாசுபடுத்துவார்கள் என்று சிலர் கூறலாம். தூய நீருடன் ஒரு இடத்திலிருந்து புறப்படும் நதி, ஒரு குடியிருப்பு, கிராமம் அல்லது நகரத்தைத் தாண்டி வரும்போது அப்பகுதிகளின் மொத்த கழிவு நீரையும் உள்வாங்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது. இரசாயன தொழிற்சாலைக் கழிவுகள், உலோகத் தொழிற்சாலை விஷக் கழிவுகள், நகராட்சி, மாநகராட்சி, பெரு நகர மக்களின் மனிதக்கழிவுகளைக் கொண்டுவரும் பாதாள சாக்கடைக் கழிவுகள் நதிகளில் நேரடியாக கலக்கின்றன. சில இடங்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் வைத்திருக்கிறார்கள். சீனப்பெருஞ்சுவரைவிட நீளமான தடுப்புச்சுவர்கள் நாடெங்கிலும் கட்டினாலும் கூட தடுக்கமுடியாது என்பதுதான் நிஜம். கங்கை நதியை தூய்மையாக்க ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவானாலும் செய்யத்தயார் என்கிறது மத்திய அரசு. பல நாடுகள் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயார் என்று முன்வருகின்றன. கழிவுகள் கலந்தபின் மொத்த நதியையும் தூய்மையாக்குவது என்பது புராண கதையில் தேவர்களும் அசுரர்களும் வங்கக்கடலை கடைந்தது போலத்தான். ஒரு பகுதியில் சுத்தம் செய்தால் வேறொரு இடத்தில் நதி மாசடையலாம். ஊழல் மலிந்திருப்பதால் நதிகளைத் தூர் வாருகிறோம் என்று சொல்லி காசை வாரிவிடுவார்கள். வேறு என்ன தான் செய்வது?

நதிகளின் இரு கரைகளிலும் நதியின் போக்கிலேயே இரண்டு இரட்டைக் குழாய்களைப் பதிக்கவேண்டும். ரயில்வே தண்டவாளம் போன்று. நதிக்கு இணையாகவே செல்லும் இந்த இரட்டைக் குழாய்களுக்கு நடுவில் நதி பயணிக்கும்படி குழாய்கள் அமையவேண்டும். ஆற்றங்கரையைவிட குழாய் மட்டம் சிறிது தாழ்ந்து இருக்கவேண்டும். நதியில் கலக்க வரும் கழிவுகள் முதல் குழாயில் புகுவதற்கு வழி அமைக்கப்படும். எங்கெங்கெல்லாம் கழிவு நீர் வருகிறதோ, அது முதல் குழாயிலேயே புகும். ஆற்றின் போக்குப்படியே குழாய்கள் பதிக்கப்படுவதால் கழிவு நீர் தங்கு தடையின்றி குழாய் வழியாக பயணிக்க ஏதுவாகும். குழாயின் ஒருபுறத்தில் உள்ளே புகும் கழிவு நீர்  அடுத்த இடத்தில் புக இருக்கும் துவாரம் வழியாக  வெளியேறாமல் இருக்க, ஒருவழிப்பாதை வால்வு தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் பல இடங்களிலிருந்தும் குழாயில் புகும் கழிவு நீரை குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு அளவுள்ள வடிகட்டிகள் அமைத்து திடக்கழிவுகளை முதலில் அகற்றிவிடவேண்டும். இவ்வாறு திடக்கழிவு நீக்கப்பட்ட நீர் இணையாக இருக்கும் மற்றொரு குழாய்க்குள் செலுத்தப்பட வேண்டும். அந்த நீரை குறிப்பிட்ட மைல்கள் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ள சுத்தகரிப்பு நிலையங்களில் சுத்தப்படுத்தப்பட்டு ஏரிகள், குளங்கள், குட்டைகள், சிறிய நீர் நிலைகளில் தேக்கியது போக மீதியை பாசனத்திற்கு திருப்பி விடவேண்டும். இதன் மூலம் பெருவாரியான தரிசு நிலங்களைக்கூட விளைநிலங்களாக ஆக்க முடியும். சுத்தப்படுத்தப்பட்ட இந்த நீர் நமது பாசன தேவை அளவுக்கு நிகராக இருக்கும். கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுவதால், நதிகள் உடனடியாக தாமாகவே சுத்தமாகிவிடும்.  நதி நீரைவிட கழிவு நீர் அதிகம் இருந்தால் குழாய்களின் எண்ணிக்கையை அதிகமாகுவதன் மூலமோ, வடிவில் பெரிய குழாய்களைக்கொண்டோ அல்லது கூடுதல் சுத்தகரிப்பு நிலையங்களை அமைத்தோ சமாளித்து விடலாம். கழிவு நீர் கலந்த மொத்த நதி நீரையும் சுத்தமாக்குவதென்பது விழலுக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றதாகும். அதுமாதிரி முயற்சியில் நாம் இறங்கக்கூடாது. ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி மூலம் அழிக்கப்பட்டு வரும் விளை நிலங்களுக்கு ஈடாக அதைவிட அதிகமான தரிசு நிலங்களை பாசனம் மூலம் விளை நிலங்களாக மாற்றமுடியும். மிக முக்கியமாக நதி நீரை குடிநீர்த் தேவைக்கு மட்டும் பயன்படும்படி ஆக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி கொடுக்காமல் குட்டைகள், குளங்கள், ஏரிகளை 100 நாட்கள் வேலைத்திட்ட மக்கள் உதவியுடனும் அரசு மானியத்துடனும் அமைக்க வேண்டும்.

வெல்வதற்கு பகைவர்களோ வேறு அண்டை நாடுகளோ இல்லாமல் போனதால், இராஜேந்திர சோழன், படை வீரர்களைக் கொண்டு வீராணம் ஏரியை வெட்டி உருவாக்கியதாக அறிகிறோம். அது 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று மாபெரும் சென்னை நகருக்கே குடிநீர் தரும் அட்சய பாத்திரமாக திகழ்வதைக் காண்கிறோம். ஒரு மாநில அளவுள்ள பகுதியை மட்டுமே ஆண்ட சோழ மன்னன் செய்ததை மாபெரும் இந்திய சாம்ராஜ்யம் செய்ய முடியாதா? முடியும்! முடியும்!! முடியும் என்பதே உண்மை.

கழிவுநீர்த் தடுப்புக்குழாய்கள், சுத்தகரிப்பு நிலையங்கள் அமைப்பது நிரந்தரத் தீர்வு மட்டுமல்ல ஒருமுறை மட்டும் செய்யப்படும் செலவுதான். பராமரிப்பு + செயலாக்கத்திற்கு ஆகும் செலவை விட பயன் அதிகம். தரை நீர் மட்டம் உயரும். மின்சாரப் பயன்பாட்டளவு மிகவும் குறையும். சேமிப்பாகும் மின்சக்தி நாட்டின் உற்பத்தியை பெருக்க உதவும். விளை நிலங்கள் பெருகும். கூவம் நீரையே குடி நீராக்கமுடியும் என்றால் நமக்கு வேறென்ன வேண்டும்? அண்டை மாநிலங்களையே நம்பியுள்ள  நம் தமிழகம், ஏன் நாமே  நமக்கு என்ற கோட்பாட்டை உருவாக்கிக்கொள்ள முடியாது? குடி நீர்த் தேவை போக எஞ்சியுள்ள நதி நீரை அரபு நாடுகளுக்கு அனுப்பி பெட்ரோலியத்தை மாற்றாக பெறலாம். அரபு நாடுகள் கடல்நீரை குடி நீராக ஆக்க மிக அதிகம் செலவழிக்கிறார்கள்.

நாம் நம் உள்நாட்டில் காசுக்கு தண்ணீர் வாங்குவது என்ற அநியாயத்தை தொடரவிடக்கூடாது. பாட்டிலில், கேனில், லாரியில் எந்த உருவிலும் தண்ணீரைக் காசாக்க விட அனுமதிப்பது பாபகரமான செயலாக கருதப்பட வேண்டும். ஒரு காலத்தில் உணவையே தானமாகத்தான் கொடுக்க வேண்டும், விற்கக்கூடாது என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது நம் பாரத  நாட்டில்தான். பிரயாணிகள் வசதிக்காக குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவு விற்பனை தற்போது முன்னணி வியாபாரங்களில் ஒன்று. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தண்ணீர் வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

காசைத் தண்ணீராக வீணடிப்பதாக பெரியவர்கள் முன்பு கூறுவதைக் கேட்டிருப்போம். இன்று தண்ணீரை காசைப்போன்று பாதுகாத்து சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

Author email id: m_lakshyan@rediffmail.com