Home Blog Page 5982

பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்கு: மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை:

மும்பை பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்ற ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர். இவரது மகள் எஸ்தர் அனுயா (23). கணினி மென்பொருள் பொறியாளர். இவருக்கு மும்பை கோரேகாவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனால் மும்பை வந்த அவர் அந்தேரி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த எஸ்தர் அனுயா கடந்த 2014 ஜனவரி 4ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து மும்பைக்கு ரயிலில் திரும்பினார். மறுநாள் அதிகாலை மும்பை வந்த அவர் திடீர் மாயமானார்.

இதனால் பதற்றம் அடைந்த அவரது தந்தை சுரேந்திர பிரசாத் மும்பை வந்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் எஸ்தர் அனுயா மாயமான 11 நாட்களுக்கு பிறகு மும்பை பாண்டு பகுதியில் உள்ள ஓடை அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 மாதத்திற்கு பிறகு சந்திரபான் சனப் (29) என்பவர் பிடிபட்டார்.

இவர் துவக்க காலத்தில் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தவர். பின்னர் நாசிக்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

கைதான சந்திரபான் சனப் 3 திருமணங்களை செய்தவர். அவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2–வது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து 3–வது மனைவியுடன் நாசிக்கில் வசித்து வந்த அவர், அங்கு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்டு மும்பையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த அவர், லோக்மான்ய திலக் ரயில் நிலையம் சென்றார்.

அப்போது அங்கு ரயிலில் இருந்து இறங்கிய எஸ்தர் அனுயாவிடம் தன்னை டாக்சி ஓட்டுநர் என்று அறிமுகப்படுத்தினார்.

இதை நம்பிய எஸ்தர் அனுயா அவருடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு டாக்சி இல்லை. ரூ.300 தந்தால் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று விடுதியில் விடுவதாகத் தெரிவித்தார். இது எஸ்தர் அனுயாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்போது நைசாக பேசி எனது மோட்டார் சைக்கிள் நம்பரை வேண்டுமானால் குறித்து கொள்ளுங்கள், உங்களது தந்தைக்கு வேண்டுமானாலும் போனில் தகவல் சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்.

இதனால் அவர் மீது எஸ்தர் அனுயாவிற்கு நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் சந்திரபான் சனப்புடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை அவர் கிழக்கு விரைவுச்சாலையில் புறநகரான பாண்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்று அங்குள்ள ஓடை அருகே நிறுத்தினார்.

பின்னர் அங்கு புதருக்குள் அவரை கொடூரமாக கற்பழித்து விட்டு, துப்பட்டாவில் கழுத்தை இறுக்கிக் கொன்றார். உடல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மோட்டார் சைக்கிள் டேங்கரில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பினார்.

போலீஸாரின் விசாரணையில் சந்திரபான் சனப் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி விருஷாலி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்பதால், குற்றவாளி சந்திரபான் சனப்பிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி விருஷாலி தீர்ப்பு கூறினார்.

ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

மும்பை:

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

மும்பை சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 9.30 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு ராஜ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர். பின்னர் நடிகர் கமல்ஹாசன், ராஜ் தாக்கரேவுடன் சுமார் 25 நிமிடங்கள் தனியாக பேசினார். இதையடுத்து கமல்ஹாசன், ராஜ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து கமல்ஹாசன் புறப்பட்டுச் சென்றார்.

ராஜ் தாக்கரேவுடனான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட கால நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என்றார். இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார்.

விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் : பெண் உள்பட 23 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

 
விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்த்த சம்பவம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்று உள்ளது.
 
நாடு கடத்தப்பட்ட ஈரானிய குழுவின் முகாம் பாக்தாக் விமான நிலையத்தில் உள்ளது. அந்த முகாமை குறிவைத்து நேற்று ராக்கெட் வீச்சு நடந்துள்ளது. 15 ராக்கெட்டுகள் விழுந்ததில், முகாமில் தங்கி இருந்தவர்களில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ராக்கெட்டுகள், பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ. வட கிழக்கே உள்ள பாக்ரியா புறநகரில் இருந்து வீசப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் வீச்சு குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பலியானவர்கள் குறித்த விவரம் தரப்படவில்லை.
 
இந்த ராக்கெட் தாக்குதல் தொடர்பாக ஈராக் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, படுகாயம் அடைந்தவர்களுக்கு எல்லா மருத்துவ உதவியும் வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த முகாமுக்கு பாதுகாப்பினை அதிகரிக்கும்படி ஈராக் அரசிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.

மகள் இறந்த சோகம்: தாய், மகன் தற்கொலை

சென்னை:

சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கத்தின் மனைவி சகுந்தலா(50). இவர்களுக்கு சரவணன்(30) என்ற மகனும், கிருஷ்ணவேணி(27) என்ற மகளும் இருந்தனர். சங்கரலிங்கத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி. 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரலிங்கம் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்.

சகுந்தலா தனது மகன், மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கிருஷ்ணவேணிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவருக்கு திருமணம் ஆகாமலேயே இருந்தது. இதனால் சரவணனும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சகுந்தலாவின் வீடு பூட்டியே இருந்துள்ளது. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகுந்தலாவும், சரவணனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். கிருஷ்ணவேணி தரையில் பிணமாக கிடந்தார். அவரது உடலைச் சுற்றி எறும்பு வராமல் இருப்பதற்காக எறும்புப் பொடி போடப்பட்டு இருந்தது.

இதை அடுத்து மூவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாக கிருஷ்ணவேணி உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சகுந்தலாவும், சரவணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோரிய வைப்புத் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் தில்லி, அலகாபாத் உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

தேவர் சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயரை மறைத்து ஜெயலலிதாவின் பெயர் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து கூறுகையில், ‘‘மதுரையில் தேவர் சிலையை நிறுவிய தலைவர் கருணாநிதியின் கல்வெட்டை மறைத்து பராமரிப்பு என்ற பெயரில் ஜெயலலிதாவின் கல்வெட்டை பதித்துள்ளார்கள்.

கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் மறைக்கும் வகையில் அழிக்கப்பட்டுள்ளன. 1974ல் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்த சிலையை நிறுவி, இந்திய குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்து திறக்கச் செய்தார்.

இந்த வரலாற்று கல்வெட்டை மறைக்கும் வகையில் அரசியல் உள்நோக்குடன், காழ்ப்புணர்ச்சியுடன், நயவஞ்சகத்துடன் இந்த கல்வெட்டை மறைத்திருக்கிறார்கள்.இதற்கு முன் சென்னையில் கண்ணகி சிலையை இந்த ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டார்கள்.

அதே ரீதியில் ஒரு வேளை இந்த தேவர் சிலையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

பாலியல் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு, நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லீலாவதி கொலை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சந்திராவை போலீசார் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கு பின்னர் கைதான காவல் ஆய்வாளர் விஜயகுமார் உள்பட மூன்று போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மூவரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கும் ஜாமீன் வழங்குவதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நாள்தோறும் தலைமை குற்றவியல் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் கைதான போலீசார் மூவருக்கும் பத்தே நாட்களில் ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

 

ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

இன்று, (30-10-2015) ஆங்கில நாளிதழ் ஒன்றின் அதன் முதல் பக்கத்திலும், 7ஆம் பக்கத்திலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று ஆதாரங்களோடு வெளி வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தச் செய்தி வார ஏடுகளில் வெளி வந்து பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது என்ற போதிலும், அந்ந நாளிதழ் ஆதாரங்களோடு தொகுத்து இந்தச் செய்தியை புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்” மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள்” என்பது தான் முக்கிய செய்தியாகும்.

அந்தச் செய்தி பற்றி “இந்து” மேலும் அதாவது மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து அந்த இதழுக்குக் கிடைத்த தகவலின்படி, முன்னர் “ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது “ஜாஸ் சினிமா நிறுவனம்” என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ஹாட்வீல்ஸ் இஞ்கினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். 14-7-2014 அன்று வி.கே. சசிகலா மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் சிறப்புக் கூட்டத்தில் தான் பெயர் மாற்றம் பற்றி முடிவெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. பிறகு நடைபெற்ற கூட்டத்திற்கு, ஜெ. இளவரசி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்தார்.

மேலும் பதினோறு திரையரங்குகள் கொண்ட “லக்ஸ் சினிமா” என்பது உரிய சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதங்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது என்றும், கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி ஆகியோர் “ஜாஸ்” சினிமா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றும், அவர்கள் “மிடாஸ்” நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் ஆவணங்களிலிருந்து தெரிய வருவதாக அந்த நாளேடு விரிவாக எழுதியுள்ளது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம், இந்த “லூக்ஸ்” திரைப்பட அரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது

இதிலிருந்து சசிகலா, இளவரசி, கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தப்பார் சத்திய மூர்த்தி ஆகியோரெல்லாம் யார் என்பது ஒரு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதில் சசிகலா என்பவர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்ற அங்கீகாரத்தோடு, அவரது வீட்டிலேயே பல ஆண்டுக் காலமாக வாழ்ந்து வருபவர் என்பதும், இப்போது கூட கோடநாட்டில் ஜெயலலிதாவுடன் அவர் தான் உடன் இருந்து வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு, பிரபாவதி, அனுராதா என்று இரண்டு மகள்கள். பிரபாவதியின் கணவர் தான் டாக்டர் கே.எஸ். சிவக்குமார். இந்தச் சிவக்குமார் தான் ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர். மற்றொரு இயக்குனரான கார்த்திகேயன் கலியபெருமாள் யார் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் இந்தக் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.

சென்னை வேளச்சேரியில் “ஃபீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் “லூக்ஸ்” சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை “ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது. மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.

தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பிஎஸ்என்எல் தொலைபேசி சட்டவிரோத இணைப்புகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது :-

தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழும நிறுவனத்துக்காக அதிவேக இணைப்புகளை ஒருங்கிணைக்கும் வசதிகள் கொண்ட கருவிகளை அந்நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளது மூலம் அரசுக்கு சுமார் ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையின் போது சிபிஐக்கு தயாநிதி மாறன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் அவருக்கு முன்ஜாமீன் அளித்தால் வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவரை (தயாநிதி மாறன்) காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், வி.கோபால கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்கள் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பாக சில விளக்கங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிபிஐ மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த மனுவுக்கு தயாநிதி மாறன் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மீது வரும் நவம்பர் 27-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை தயாநிதி மாறனை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் லாரி – பஸ் மோதல்: 4 பேர் பலி, 15பேர் காயம்

 நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர்.

நெல்லை மாவட்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

வள்ளியூர் அருகே கோவநேரி பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பஸ் மோதியது. காயமடைந்தவர்கள் அப்பகுதின்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.