Home Blog Page 5993

கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சட்ட ஆணையர் சகாயம் பதவி காலம் வருகிற 15–ந் தேதியுடன் முடிவு

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கனிம முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் மற்றும் அவரது குழுவினரால் புலத் தணிக்கை செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரி சட்ட ஆணையர் சகாயம் பதவி காலம் வருகிற 15–ந் தேதியுடன் முடிவு

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் மனுதாரர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், இந்த ஆணையத்திற்கு புதிதாக கோரிக்கை மனுக்கள் ஏதும் பொதுமக்கள் அனுப்ப வேண்டாம் என்று சட்ட ஆணையர் சகாயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் : சரக்கு போக்குவரத்து பாதிப்பு

 

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தது. இதில் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தது. நேற்று மாலை மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மோட்டார் காங்கிரஸ் நடத்தி வருகிறது.

இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான லாரிகள் இயக்கப்படாமல், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், பால், காய்கனிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

இந்த போராட்டத்தால் தினமும் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு 1500 கோடி ரூபாய் வரையும், அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் இழப்பு ஏற்படும் என்று மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய சங்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில், அகில இந்திய டிரான்ஸ்போர்ட்டர்களை நல சங்கம் பங்கேற்கவில்லை. தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை சம்பந்தமாக டி.எஸ்.பி.மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையை தொடங்கியது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்செங்கோடு டி.எஸ்.பி. அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீசார் வரை விசாரணை நடத்தி தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

மேலும் என்ஜினீயர் கோகுல்ராஜ், கொலை வழக்கு, அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளிடமும், அவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள யுவராஜ் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் மாளவியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனவே அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இன்று காலை ஆஜர் ஆகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை டி.எஸ்.பி.மகேஸ்வரி சேலம் ஜங்சனில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த அவரிடம் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக சமத்துவப்படையின் நிறுவனத்தலைருவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுப்பிரியா, உயர் போலீஸ் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், இதை மூடி மறைக்க போலீஸ் அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

விவசாயிகளிடம் குறைகளை கேட்க ஆலமரத்தடியில் பட்டறையை போட்ட ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நமக்கு நாமே விடியல் மீட்பு நடைபயணம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருகே ஆலமரத்தடியில் அமர்ந்து அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். சென்னையை சேர்ந்த மறமடக்கி பகுதியில் விவசாய தொழில் செய்து வரும் வெங்கட் கூறியதாவது:–

இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை ஊக்குவிக்கவோ, காப்பாற்றவோ அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது என்றார்.

இதையடுத்து காமராஜ் என்ற விவசாயி பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கி விவசாயிகளின் குறைகளை போக்கியது தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். இங்கிருந்து வடகாடு பக்கம் சென்றால் ஏராளமான மிளகாய் மண்டியும், 250 கடலை மில்லும் உள்ளன. அவை அனைத்துமே இன்று செயல்படமுடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி ஆயிரம் ஆண்டு மரம் கூட பெயர்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு எந்தவித சலுகையும் தராத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு உள்ளது என்றார்.

இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பு தி.மு.க. தலைவர் கலைஞரிடம் கருத்து கேட்க சென்றேன். அப்போது நாளை கூறுகிறேன் என்று என்னை அனுப்பிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு மறுநாள் என்னை அழைத்து இந்த சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததோடு, பயணத்திற்கு நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் என்ற பெயரும் வைத்தார்.

தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சி தான், அதுவும் காணொலி காட்சி தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை, படுத்த நிலையில் உள்ளது. அதையும் தாண்டி கோமா நிலையில் உள்ளது. எனவே தான் தமிழக மக்களை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 3 கட்ட பயணத்தில் முதல் கட்டத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வந்துள்ளேன்.

பயணம் தொடங்கிய நாள் முதல் காலை 8 மணி முதல் இரவு வரை மக்களை சந்தித்து வருகிறேன். அறந்தாங்கியில் இன்று காலை சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதல் அனைத்து தரப்பினரும் பல்வேறு குறைகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் குறைகள் போக்கப்படும் இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. அந்த வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஜாதி, கவுரவக் கொலைகளுக்கு எதிரான மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா வரவேற்றார். மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:

கடலூரைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பு வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும். இந்தப் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்புவோம். நாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மன்மோகன் சிங்கை சோனியா காந்தி இயக்குவதாக மோடி குற்றம் சாட்டினார். இப்போது மோடியை ஆர்எஸ்எஸ் நேரடியாகவே இயக்கு கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர் கள் தங்களது செயல்திட்ட அறிக் கையை ஆர்எஸ்எஸ் தலைமை யிடம் அளிக்க வேண்டியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டை மறு ஆய்வு செய்ய வேண் டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்து கிறது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் உறுதியாக உள்ளது. மோடி அரசுப் பதவியில் இருப் பதைப் பயன்படுத்தி சாதிய சக்திகள் தங்களை வலுப்படுத்தி வருகின்றன. கடந்த 14 மாதத் தில் 25 நாடுகளுக்கு மோடி சுற்றுப் பயணம் செய்துள்ளார். இங்கே விவசாயிகள் தற்கொலை செய் வதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை.

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ் வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங் குவோம் என்று கூறிய மோடி யையே தற்போது வெளிநாட்டில் இருந்து மீட்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு அளவுக் கான சொத்து 100 பேரிடம் மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில், 90 சதவீத இந்திய குடும்பத்தினரின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
சமூக நீதிக்காகவும், பொரு ளாதார நீதிக்காகவும் நாம் இணைந்து போராடினால்தான் சாதிய கொடுமைகளை ஒழிக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான மதிப்பு இருக்கும் நிலையை அடைய நாம் அனை வரும் இணைந்து போராட வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

 

தமிழகத்தில் திருகுதாள வேலை செய்யும் அதிமுக அரசு : கருணாநிதி குற்றச்சாட்டு

 

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு திருகுதாள வேலைகள் செய்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது. தங்களுக்காக உழைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரவையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பல்வேறு துறைகளிலிருந்து பதில்கள் வரவில்லை, வரவில்லை என்ற பதிலைத்தான் பேரவைத்தலைவர் தெரிவிக்கிறார். தொடர் கூட்டமே முடிந்து விட்டது. 48 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டதில், ஒன்று கூட அரசால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

300 கவன ஈர்ப்புத் தீர்மானங்களில் 14 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மட்டுமே பெயருக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்றால், எந்த அளவுக்கு மாநில மக்களின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியிலே முன்னுரிமை தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று டெல்டா மாவட்ட விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததைப் போல, கர்நாடக அரசு கை விரித்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 92 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா தர வேண்டும். கர்நாடக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் வரை 48 டி.எம்.சி. தண்ணீரை நமக்குத் தர வேண்டியுள்ளது. அக்டோபர் முதல் வரும் 2016 ஜனவரி வரை 47.5 டி.எம்.சி. தண்ணீரைத் தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் அங்கும் மழை இல்லாமல் வறட்சி நிலை நிலவுவதாகவும், தண்ணீர் தர இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவித்து விட்டார்கள். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

தமிழக அரசின் சார்பில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க தமிழக அரசு அதானி குழும நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்ததின் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை குறைந்த விலைக்கும், முறைகேடாகவும் இடைத் தரகர்கள் மூலமாக வாங்குகின்ற முயற்சி அங்கே நடைபெறுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆத்திரமடைந்து அதானி குழும ஊழியர்கள் இரண்டு பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகி மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பேரவையில் கடைசி நாளன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் ஒன்று பெண் எழுத்தாளருக்கு “அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் அளிக்கப்படவிருக்கிறதாம். அரசு என்ன, இவர்களுடைய சொந்தக்கட்சி உடைமையா? ‘அம்மா’ மாளிகை, ‘அம்மா’ மருந்தகம், ‘அம்மா’ தண்ணீர், ‘அம்மா’ உப்பு, ‘அம்மா’ சிமெண்டு, ‘அம்மா’ உணவகம், ‘அம்மா’ குடிநீர், ‘அம்மா’ அமுதம் பல்பொருள் அங்காடிகள், ‘அம்மா’ விதைகள், ‘அம்மா’ குழந்தை நலப்பரிசு பெட்டகம், ‘அம்மா’ முழு உடல் பரிசோதனை – என்ற வரிசையில் இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகளுக்குப் போட்டியாக, “அம்மா இலக்கிய விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் துணை மதிப்பீடுகள்கூட வெறும் 1,012.30 கோடி ரூபாய்க்குத்தான் கோரப்பட்டு ஒப்புதல் தரப்பட்டுள்ளது! மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது? இந்தத் தொடரில் அதாவது நான்கரை ஆண்டுகளில் முதல்-அமைச்சர் செய்த 181 அறிவிப்புகளுக்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? அந்தத்தொகையை எந்த நிதியிலிருந்து ஒதுக்கப் போகிறார்கள்? அந்த நிதிக்கு அவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? ஒப்புதல் பெறப்படா விட்டால் அவைகள் எல்லாம் நிறைவேறாத திட்டங்களா?

இந்தத்திருகுதாள வேலைகளையெல்லாம் புரிந்து கொண்டு தங்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்பதைக் கூர்ந்து கவனித்து, கணித்து, அதற்கேற்பச் செயல்பட முன்வர வேண்டுமென்பதுதான் மிகப்பெருவாரியான தமிழர்களின் விருப்பம். என கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில்கூறியுள்ளார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

 சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குரு (வயது 52). இவர், சென்னை மாநகராட்சியின் 86-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மக்ரீன். இவர்களுக்கு ஆண்டோ என்ற மகனும், செஸி என்ற மகளும் உள்ளனர்.

கவுன்சிலர் குரு, அம்பத்தூர் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களில் ஒருவர். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார்.

நேற்று மதியம் 1.20 மணி அளவில் குரு, தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் அவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்தபடி வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மின்னல் வேகத்தில் கவுன்சிலர் குருவை சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த குரு, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே அந்த கொலைவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். குருவின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் பதறி அடித்து ஓடிவந்தனர்.

அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த குருவை மீட்டு திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குரு ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்ணூர்பேட்டை பகுதியில் கூடுதல் போலீசார், குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட குருவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஜூலி’ வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

குருவை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக அவரை வெட்டிக்கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் குருவின் உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு டார்ச்சர் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

 

தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி தமிழகம் முழுவதும் அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் வறுமை இன்னும் ஒழிய வில்லை. இதனால் தான் நான் மக்களின் வறுமையை போக்கும் வகையில் சிறு,சிறு உதவிகளை செய்து வருகிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திற்கு பிறகு, தமிழகத்தை மாறி, மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. தமிழகத்தை சீரழித்து விட்டார்கள்.

இன்றைய தினம் மதுவிலக்கை அமல்படுத்த தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த கோரிக்கையை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. என்னை குடிகாரன் என்று விமர்சிப்பவர்களுக்கு நான் நேரடியாக சவால் விடுக்கிறேன்.

என்னை குறை கூறும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? இந்த கூட்டத்தின் மூலம் அவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறேன்.

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். எனது தொண்டர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதாக சிலர் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் தொண்டர்களிடம் நான் உரிமை எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு விமர்சிப்பவர்களை பெரிதாக கருதவில்லை. காய்த்த மரத்தில் தான் கல்லடி படும். இன்றைய தினம் எனது மனைவியை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவர் என்னை விட அறிவாளி. அவர் தான் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கிறார். இதனால் குடும்பம் நன்றாக உள்ளது.

 

சமீபத்தில் இறந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஆட்சியாளர்களின் டார்ச்சர்க்கு உள்ளானார். இதேபோல் தற்போது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு வகையில் நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது. ஏன் அமைச்சர்களுக்கு கூட இந்த நெருக்கடி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி ஆட்சியால் மக்களுக்கு நெருக்கடி அதிகமானால் இந்த ஆட்சியை மக்கள் மாற்றி விடுவார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும்ம் இல்லை என விஜயகாந்த் பேசினார்.

 

வடசென்னை அனல் மின்நிலைய விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை:

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வடசென்னை அனல் மின்நிலையம் அலகு 1-ல் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்தவர் பாபு. இவர் கடந்த 28ம் தேதி மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.