Home Blog Page 6333

பிரிட்டனில் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது: பிரதமர் கேமரூன்

Cameron பிரிட்டனில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில், பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்… பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், பல்வேறு அச்சுறுத்தல்களின் அடிப்படையிலும், யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தடைகளற்ற, வெளிப்படைத் தன்மை வாய்ந்த சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களை அரசால் மட்டுமே முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை

mangala-samaraveera இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை நேற்று தில்லி வந்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரா முதன்முறையாக இந்தியா வந்துள்ளார்.இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பி. பெரேரா, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியபோது, இந்தியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுப்போம். இந்தியாவுடனான எங்கள் தனிப்பட்ட நட்பை வலுப்படுத்துவோம். அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அரசாக இலங்கை அரசு இருக்கும் என்று தெரிவித்தார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த மாதம் வர உள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் 17 பேர் பலி

ஈராக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து அரசுப் படையினர் அண்மையில் 8 கிராமங்களைக் கைப்பற்றினர். இந்தக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில்தான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

சீனாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இந்தியர் உள்பட 22 பேர் பலி

சீனாவில் யாங்ட்ஸி ஆற்றில் 25 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்துக்கும், ஜாங்ஜியாகங் மாகாணத்துக்கும் இடையில் பாயும் யாங்ட்ஸி ஆற்றில், இந்தியர் உள்பட எட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 17 சீனர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது அந்தப் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட எஞ்சிய 22 பேர் உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். உயிரிழந்த இந்திய நபர், சிங்கப்பூரில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் மணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் 5 பேர் மீது பயங்கரவாத நடவடிக்கைக் குற்றச்சாட்டு

பெல்ஜியம் நாட்டில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நாடு முழுவதும் போலீஸார் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசு வழக்குரைஞரின் செய்தித் தொடர்பாளர் கூறியது… வேர்வியேர்ஸ் நகர சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, வேர்வியேர்ஸ், பிரஸல்ஸ் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புள்ளதாக 5 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிபந்தனைகளுக்குள்பட்டு இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரைக் குறி வைத்துப் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். வேர்வியேர்ஸ் போலீஸ் நடவடிக்கையில் பிடிபட்ட நபர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸ் நடவடிக்கைகளையடுத்து, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பிரான்ஸ் சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைக் கைது செய்து பெல்ஜியம் அழைத்து வர, நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது

திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் வீண் அரசியல்: ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி காட்டம்

arun-jaitley புதுதில்லி திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்து ராஜிநாமா செய்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள்… கடந்த 2004ஆம் ஆண்டு, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு முதன்முதலில் பதவியேற்றபோது, திரைப்பட நடிகர் அனுபம் கெர் தலைமையில் இருந்த தணிக்கைக் குழுவை, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட குழு என்ற ஒரே காரணத்துக்காக கலைத்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவை, அந்த அரசு அரசியலாக்கியது. ஆனால், அதுபோல் நாங்கள் செய்யவில்லை. இந்த விவகாரத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் வீண் அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது. திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் நாங்கள் (அவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ரத்தோர்) ஒருபோதும் தலையிட்டது கிடையாது. தற்போதிருக்கும் திரைப்படத் தணிக்கைக் குழுவானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டதாகும். எனவே, ஊழல் எதுவும் நடைபெற்றிருந்தாலும் கூட, அவர்களே அதற்குக் காரணமாவர். அந்த ஊழல் குறித்து, எனது கவனத்துக்கு திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் கொண்டு வரவில்லை. திரைப்படத் தணிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும், அவர்கள் மீது அவர்களே தெரிவிக்கும் குற்றச்சாட்டுதான். அந்த அமைப்பின் கூட்டத்தை மத்திய அமைச்சரோ அல்லது அமைச்சகச் செயலரோ கூட்டுவது கிடையாது. திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர்தான் கூட்ட வேண்டும். திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறாகும். அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை, திரைப்படத் தணிக்கைக் குழு பயன்படுத்தவில்லை. இதனால், அந்த நிதியானது மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.திரைப்படத் தணிக்கைக் குழுவால் ஒருபடம் நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் உரிமை திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர் பதவியில் கூட காங்கிரஸ் அரசியல் செய்கிறது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக முன்னாள் நீதிபதியை நியமித்து, அந்தப் பதவி மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தினோம்…

ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி: அமைச்சர் சுரேஷ் பிரபு

Suresh-Prabhu புதுதில்லி “ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். நாடு முழுவதும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக, 30,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ. தொலைவு வரையிலான ரயில் பாதைகள் விரிவுபடுத்தவேண்டும். உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அரசின் ஓய்வூதிய நிதியைக் கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இந்த நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ரயில்வே துறையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை, ரயில்வே துறை பங்களிப்பு செய்ய முடியும். ரயில்வே துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இல்லை என கூறப்படுவது சரியல்ல என்று அவர் பேசினார்/ புது தில்லியில், ஆங்கில நாளிதழின் சார்பில் உலக வர்த்தக மாநாடு சனிக்கிழமை நேற்று நடைபெற்றது. அதில் பேசியபோது, சுரேஷ் பிரபு இவ்வாறு கூறினார்.

2019க்குள் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும்: பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை

Prakash-Javdekar புதுதில்லி வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை தெரிவித்தார். “கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லி மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களின் மக்களும் வரவேற்றுள்ளனர். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கிரண் பேடியை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அங்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நிலையான ஆட்சியை அமைக்கும். ட்டு மக்கள் பாஜக ஆட்சிக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதனடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும்.” என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இவ்வாறு தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

NYHQ2011-0194 சென்னை: தமிழகம் முழுவதும் ஜன.18 இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் தவணையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதியான இன்றும், இரண்டாவது தவணையாக பிப்ரவரி 22-ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. அதன்படி இன்று காலை 7 மணிக்கு இந்த முகாம் துவங்கியது. இன்று மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 சொட்டு மருந்து மையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம். பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் 1,652 நகரும் மையங்கள் செயல்படுகின்றன. மேலும், தொலைதூரப் பகுதி, மலைவாழ் பகுதி, எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாத பகுதி மக்களுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் விடுபடும் குழந்தைகளைக் கண்டறிவதற்காக, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகின்றது. இந்தப் பணிகளுக்காக சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 2 லட்சம் பேர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

KEJRIWAL புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால், “தலைநகரில் உள்ள தனியார் மின் விநியோக நிறுவனங்களுடன் தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், பொதுச் செயலர் ஆசீஷ் சூட் ஆகியோர் கூட்டு வைத்துள்ளனர்; பல்வேறு தனியார் நிறுவனங்களில் அவர்கள் ஏராளமான பங்குகளை வைத்துக் கொண்டு மத்திய அரசில் காரியம் சாதித்து வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார். அத்துடன், பாஜக மதவன்முறையைத் தூண்டுவதாகவும் கேஜரிவால் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் சதீஷ் உபாத்யாய் வியாழக்கிழமை புகார் தெரிவித்திருந்தார். இதைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், அரவிந்த் கேஜரிவாலுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில்… “சதீஷ் உபாத்யாய் அளித்துள்ள புகாரில் அவர் மீதும், ஆசீஷ் சூட் மீதும் தனிப்பட்ட முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களையோ, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களையோ ஆதாரமின்றி விமர்சிக்கக் கூடாது. மேலும், உங்கள் பேட்டியின் போது திரிலோக்புரி, நந்த்நகரி பகுகளில் சதீஷ் உபாத்யாய் வன்முறையைத் தூண்டியதாகவும் நாங்க்லோய், பவானாவில் அதேபோன்ற வன்முறையை அவர் தூண்ட முயல்வதாகவும் கூறியுள்ளீர்கள். தில்லியில் தேவாலாயம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் சதீஷ் உபாத்யாய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது வெறுப்புணர்வையும் தூண்டும் வகையிலான செயல்பாடுகளாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, உங்கள் செயல்பாடு தொடர்பாக வரும் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்ளாக தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதி உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.