மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘செர்ட்இன்’ எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவி அமைப்பு, கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த அமைப்பு தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ரேன்சம்வேர் எனப்படும் பிணைத்தொகை கேட்டு மிரட்டும் கம்ப்யூட்டர் வைரஸ் பலவகைப்பட்டது.
தற்போது புதிதாக டயவோல் எனப்படும் வைரஸ் வாயிலாக கம்ப்யூட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது.
இதன்படி, கம்ப்யூட்டரை பயன்படுத்துவோருக்கு இ – மெயில் மூலம் செய்தியை அனுப்புகின்றனர். குறிப்பாக, விண்டோஸ் மென்பொருள் மூலம் இயங்கும் கம்ப்யூட்டர்களே இவர்களது குறியாக உள்ளது.
அந்த இ – மெயில் செய்தியை திறந்து படித்த உடன், இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதை செயலிழக்கச் செய்துவிடும்.
இணைய திருடர்கள் தங்களுடைய இடத்தில் இருந்தே உங்களுடைய கம்ப்யூட்டரை இயக்க முடியும். கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான கோப்புகள், ஆவணங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும்.
கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க பயனாளியிடம் இருந்து பெரிய தொகையை பிணைத் தொகையாக செலுத்தும்படி கூறுவர்.
அவர்கள் கூறும் வழியில் பணத்தை அனுப்ப வேண்டும். பணத்தை அனுப்பாத பட்சத்தில், கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான தகவல்களை அவர்கள் அழித்து விடுவர்.
மென்பொருட்களையும் நீக்கி கம்ப்யூட்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த மோசடியில் இருந்து தப்பிக்க, நம் கம்ப்யூட்டருக்கு வரும் மற்றும் மற்றவருக்கு நாம் அனுப்பும் இ – மெயில்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
அடிக்கடி, புதுப்பிப்பு வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் மென்பொருளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல், கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருட்களையும் அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நிர்வாக உரிமையை அதிகமானோருக்கு அளிக்காமல் இருக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.