
தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: பாரம்பரிய ‘கிளியாந்தட்டு’ என்ற சொல்லக்கூடிய அட்யா-பட்யா போட்டியில் வெண்கலப் பதக்கம்
தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: பாரம்பரிய ‘கிளியாந்தட்டு’ என்ற சொல்லக்கூடிய அட்யா-பட்யா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
தமிழர்களின் தொன்மையான பாரம்பர்ய விளையாட்டுகளுள் ஒன்றான ‘கிளியாந்தட்டு’ என்று சொல்லக்கூடிய அட்யா-பட்யா விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றன. அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நஜீம் என்ற மாணவனும், பொன்மாலா, பிருந்தா லட்சுமி, அஜித்தா ஆகிய மூன்று மாணவிகளும் கலந்துகொண்டனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் களமிறங்கிய இந்த நால்வரும், களத்தில் அபாரமான வியூகங்களையும் வேகத்தையும் வெளிப்படுத்தி தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.
தேசிய அளவில் பதக்கம் வென்று சொந்த ஊரான தென்காசிக்கு ரயில் மூலம் திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு, ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வைரமுத்து அவர்களுக்கும் மாலை அணிவித்தும், சால்வை, பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்துகள் வழங்கியும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

