spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகோவிட்டை வெல்ல... யோகா செய்வோம்: பிரதமர் மோதி பேச்சு!

கோவிட்டை வெல்ல… யோகா செய்வோம்: பிரதமர் மோதி பேச்சு!

- Advertisement -
modi yoga day

சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

  • யோகாவின் முக்கியத்துவமும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.
  • லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
  • கொரோனாவால் 2 ஆண்டுகளாக யோகா நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்படாமல் போனாலும் யோகா மீதான ஆர்வம் குறையவில்லை.
  • மனதை ஒருமுகப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது
  • கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக யோகா ஆசனங்கள் உள்ளன.

இன்று ஜூன் 21ம் தேதி. இன்று, 7 ஆவது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதை முன்னிட்டு, யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து மோடி தொலைக்காட்சியில் பேசினார்.

‘ஜூன் 21ம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‛ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பது தான் இந்த ஆண்டின் கருப் பொருள்.

அனைவரும் உடல் நலம் மற்றும் மனநலம் பெற வாழ்த்துகிறேன். கோவிட் நேரத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. கோவிட் தொற்று நம் அனைவரையும் யோகாவை மறக்கச் செய்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியான கோவிட்டை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். யோகா நமக்கு உள் வலிமையை கூட்டுகிறது. உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் அடிப்படை நோக்கமாக யோகா கொண்டுள்ளது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராட உதவுகிறது

நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல்’, என்ற திருக்குறள் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள கோவிட் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் முன்பு போல் பெரிய அளவில் நடத்தப்பட முடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் யோகாவை தங்களின் பாதுகாப்பு ஆயுதமாக கடைப்பிடித்து வந்தனர். யோகா பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நம் முன்னோர்களும், சாதுக்களும் யோகாவை ஆரோக்கியத்தின் அளவீடாகக் கருதி வந்தனர். நாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம்கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும். யோகா செயலியின் மூலம் இது உலகம் முழுவதும் பிரபலமடையும்… என்றார்.


7th International Day of Yoga 2021
7வது சர்வதேச யோகா தினத்தில், பிரதமர் மோதி பேசியதன் முழு வடிவம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன் (AIR, Chennai)

வணக்கம், உங்கள் அனைவருக்கும், 7ஆவது சர்வதேச யோகக்கலை தினத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இன்று நமது,  உலகம் முழுவதும்,  கொரோனா பெருந்தொற்றோடு போராடிக் கொண்டிருக்கும் வேளையிலே,  யோகக்கலையானது,  ஒரு நம்பிக்கைக் கீற்றாக ஒளிவீசுகிறது.  ஈராண்டுகளாக உலகம் நெடுக உள்ள நாடுகளிலும்,  பாரத நாட்டிலும்,  பொது நிகழ்ச்சி என்ற வகையில் எதுவும் நடக்கவில்லை,  என்றாலும், யோகக்கலை தொடர்பாக,  சற்றும் கூட,  உற்சாகம் குறையவே இல்லை.  கொரோனாவைப் பொருட்படுத்தாது,  இந்த முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு,  yoga, for wellness,  என்பது கோடிக்கணக்கான நபர்களிடத்தில்,  யோகம் மீது, இருக்கும் ஆர்வத்தை, மேலும் அதிகரித்திருக்கிறது.  நான் இன்று,  யோகக்கலை தினத்தன்று, என்ன விரும்புகிறேன் என்றால்,  ஒவ்வொரு நாடும்,  ஒவ்வொரு சமுதாயமும்,  ஒவ்வொரு தனிநபரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  அனைவரும் ஒன்றாக இணைந்து,  பரஸ்பர பலமாக இருப்போம். 

நண்பர்களே,  நமது ரிஷிகளும் முனிவர்களும்,  யோகக்கலைக்கு,  சமத்வம்,  யோகஉச்சதே,  என்ற பொருளை அளித்திருக்கின்றார்கள்.   அவர்கள்,  சுகதுக்கங்களில் சமநிலையோடு இருப்பதை,  நிதானத்தை, ஒருவகையிலே,  யோகக்கலைக்கான அளவுருவாக ஆக்கினார்கள்.  இன்று,  இந்த உலகளாவிய பெருஞ்சோக வேளையிலே,  யோகக்கலையானது,  இதை மெய்யென நிரூபணம் செய்திருக்கிறது.  கொரோனாவின் இந்த ஒண்ணரை ஆண்டுக்காலத்தில்,   பாரதம் உட்பட,  அநேக நாடுகளும்,  இந்த சங்கடத்தை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. 

நண்பர்களே,  உலகத்தின் பெரும்பாலான நாடுகளைப் பொறுத்த மட்டில்,  யோகக்கலை தினம்,  அவர்களுடைய கலாச்சாரத்தைத் தழுவிய ஒரு நாள் கிடையாது.  இந்தக் கடினமான வேளையிலே,  இத்தனை சிரமங்களுக்கு இடையே,  மக்கள்,  இதை எளிதாக மறந்தும் போயிருக்கலாம்.  இதைப் புறக்கணித்திருக்கலாம்.  ஆனால்,  இதற்கு மாறாக,  மக்களிடத்திலே,  யோகக்கலை தொடர்பான உற்சாகம் மேலும் அதிகரித்திருக்கிறது.  யோகக்கலையால் அன்பு வளர்ந்திருக்கிறது.  கடந்த ஒண்ணரை ஆண்டுகளிலே,  உலகின் அநேக மூலைகளில் எல்லாம்,  புதிதாக யோகக்கலை பயிலும் இலட்சக்கணக்கான உருவாகியிருக்கிறார்கள்.    யோகக்கலை எனும் போது,  முதல் நிலையிலேயே,  நிதானம்…… மற்றும் ஒழுங்குமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.   பலரும் இதனை,  தங்கள் வாழ்க்கையிலே கடைப்பிடிக்கும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். 

நண்பர்களே,  கொரோனா என்ற புலப்படாத வைரஸ் காரணமாக,  இந்த புலப்படாத வைரஸானது, உலகத்திலே,  கால் பதித்ததோ,  அப்போது எந்த ஒரு நாட்டினாலும்,  சாதனங்கள் வாயிலாகவோ,  வல்லமை மூலமாகவோ, அல்லது உளவியல் ரீதியாகவோ,   இதை எதிர்கொள்ளும் நிலையில் இல்லவே இல்லை.  நாமனைவருமே பார்த்திருக்கிறோம்,  இத்தகைய கடினமான சூழ்நிலையினிலே,  யோகக்கலை,  ஆன்மபலத்திற்கான, ஒரு பெரிய சாதனமாக விளங்கியது.  யோகக்கலையானது,  மக்களிடத்திலே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது,  இந்த நோயை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று உணர்த்தியது.  நான் முன்கள வீரர்களோடும்,  மருத்துவர்களோடும் உரையாடும் போது,  அவர்கள் என்னிடத்தில் கூறுகிறார்கள்,  அதாவது கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அவர்கள்,  யோகக்கலையையும் தங்களுடைய பாதுகாப்புக் கவசமாக ஆக்கிக் கொண்டார்களாம்.   மருத்துவர்கள்,  யோகக்கலை பயின்று தங்களையும் பலப்படுத்திக் கொண்டதோடு,  தங்களுடைய நோயாளிகளையும்,  விரைவாக குணப்படுத்துவதில்,  இதைப் பயனும் படுத்தினார்கள்.  ஆம் இன்று,  மருத்துவமனைகளில் தான் இப்படிப்பட்ட எத்தனைஎத்தனை காட்சிகளைக்,  காண முடிகிறது!!  இவற்றிலே மருத்துவர்கள்,  செவிலியர்கள்,  நோயாளிகளுக்கு யோகக்கலை பயிற்றுவிப்பதைப் பார்க்கலாம்.  சில இடங்களிலே நோயாளிகள்,  தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.  பிராணாயாமம்,  அனுலோம-விலோமம்,  இப்படிப்பட்ட சுவாஸப் பயிற்சிகள் வாயிலாக,  நம்முடைய,  சுவாஸ அமைப்பிற்கு,  எத்தனை வலு கிடைக்கிறது என்றால்,  இதையுமே கூட,  உலகின் வல்லுனர்கள்,  தாங்களே ஒப்புக் கொள்கிறார்கள். 

நண்பர்களே,  மகத்தான தமிழ்த்துறவியான,  ஸ்ரீ,  திருவள்ளுவர் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்றால்,  நோய்நாடி,  நோய் முதல் நாடி,  அது, தணிக்கும்,  வாய்நாடி,  வாய்ப்பச் செயல்.  பொருள் என்னவென்றால்,  நோய் என்ற ஒன்று இருந்தால்,  அதை முதலில்,  என்னவென்று கண்டறிந்து கொள்.  அதன் ஆணிவேர் வரை சென்றுபார்.  நோயிற்கான காரணி என்ன,  என்பதைக் கண்டறிந்து கொள்.   பிறகு,  இதற்கான சிகிச்சையைத் தீர்மானம் செய்து கொள்.  யோகக்கலை,  இந்தப் பாதையைத் தான் காட்டுகிறது.  இன்று,  மருத்துவ விஞ்ஞானமும்,  சிகிச்சையோடு கூடவே,  குணப்படுத்தல் மீதும்,  அதே அளவு முக்கியத்துவம் அளிக்கிறது.  மேலும் யோகக்கலை,  குணப்படுத்தல் செயல்பாட்டில்,  உதவிகரமாக இருக்கிறது.  எனக்கு என்ன சந்தோஷம் என்றால்,  இன்று,  யோகக்கலையின் இந்தக் கோணம் பற்றி,  உலகெங்கிலும் இருக்கின்ற வல்லுனர்கள் எல்லாம்,  பலவகையான அறிவியல் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றார்கள்.  இது தொடர்பாகப் பணியாற்றி வருகின்றார்கள். 

நண்பர்களே, கொரோனா காலத்திலே,  யோகக்கலையால் நமது உடலுக்கு ஏற்படக்கூடிய பலன்கள் மீதும்,  நமது நோய் எதிர்ப்புசக்தியின் மீது ஏற்படக்கூடிய,  ஆக்கப்பூர்வமான தாக்கம் பற்றியும்,  பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இன்றைய தினங்களில்,  நாம் பார்த்து வருகிறோம், பல பள்ளிகளில்,  ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கும் போதே,  முதல் 10-15 நிமிடங்கள் வரை,  மாணவர்களை,  யோகம்-பிராணாயாத்தில் ஈடுபடுத்துகிறார்கள்.   இது,  கொரோனாவை எதிர்கொள்வதிலும் கூட,  குழந்தைகளை உடல்ரீதியான வகையிலே,  தயார் செய்து வருகிறது. 

நண்பர்களே,  பாரதத்தின் ரிஷிகள் எல்லாம், நமக்குக் கற்பித்திருக்கின்றார்கள், व्यायामात्,  लभते स्वास्थ्य।  दीर्घ् आयुषम्,  बलम सुखम्।  आरोग्यम परमम भाग्यम्,  स्वास्थम सर्वार्थ साधनम्॥  அதாவது,  யோகம்-உடற்பயிற்சி வாயிலாக,  நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கிறது, வல்லமை கிடைக்கின்றது,  மேலும்,  நீண்ட சுகமான வாழ்க்கை கிடைக்கிறது.  நம் அனைவருக்கும்,  உடல்நலம் மட்டுமே,  மிகப்பெரிய பேறாக விளங்குகிறது.  மேலும் நல்ல உடல்நலம் மட்டுமே,  அனைத்து வெற்றிகளுக்குமான ஆதாரமாக விளங்குகின்றது.  பாரதத்தின் ரிஷிமுனிகள்,  எப்போதெல்லாம் பாரதத்தின் நலன்பற்றிப் பேசினார்களோ,  இதன் பொருள், வெறும்,  வெறும் உடல்நலத்தை மட்டுமே பேசவில்லை.   ஆகையாலே,  யோகக்கலையில்,  உடல் ஆரோக்கியத்தோடு கூடவே,  மனோநலன் மீதும் நிறைய அழுத்தம் அளித்திருக்கிறார்கள்.   எப்போது நாம்,  பிராணாயாமம் செய்கிறோமோ,  தியானம் புரிகிறோமோ,  பிற யோக செயல்பாடுகளைச் செய்கிறோமோ,  அப்போது நாம்,  நமது உள்ளுணர்வை அனுபவித்து உணர்கிறோம்.  யோகக்கலையால் நமக்கு,  ஏற்படும் அனுபவம் என்னவென்றால்,  நம்முடைய சிந்தனா சக்தி,  நம்முடைய வல்லமை,  எத்தனை அதிகரிக்கிறது என்றால்,  உலகில் எந்த ஒரு சிக்கலும்,  எந்த ஒரு எதிர்மறை சக்தியாலும்,  நம்மை,  தகர்த்துவிட முடியாது.   யோகக்கலை நம்மை,  நெருக்கடியிலிருந்து, பலத்தை நோக்கி,  மேலும்,  எதிர்மறை எண்ணத்திலிருந்து,  படைப்புத்திறனுக்கான பாதையைத் துலங்க வைக்கிறது.  யோகக்கலை நம்மை,  மனவழுத்தத்திலிருந்து, உற்சாகம், மேலும் மயக்கத்திலிருந்து,  புனிதத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றது. 

நண்பர்களே, யோகம் நமக்கு என்ன தெரிவிக்கிறது,  வெளியே ஏராளமான பிரச்சனைகள் இருக்கலாம்,  ஆனால்,  கணக்கே இல்லாத தீர்வுகள்,  நமக்குள்ளே இருக்கிறது என்பதை.  நாம் தான் இந்தப் பேரண்டத்திலே மிகப்பெரிய, ஆற்றலின் ஊற்றுக்கண்கள்.   நமக்குள்ளே இருக்கும், பல்வேறு பிரிவினைகள், இவை காரணமாக, இந்த ஆற்றலை நம்மால், உணர முடிவதில்லை.   சில வேளைகளில்,  மக்களின் வாழ்க்கையே தனிமையில் வீழ்ந்து கிடக்கிறது.  இந்தப் பிரிவினைகள்,  மனிதர்களின் முழுமையான ஆளுமையிலும் பிரதிபலிக்கின்றன.  தனிமையிலிருந்து ஒருங்கிணைவை உருவாக்குவது தான்,  யோகக்கலை என்பது.  ஒருமை என்ற உணர்வை  அனுபவரீதியாக, உணர வைக்கும், நிரூபிக்கப்பட்ட ஒரு வழி தான்,  யோகக்கலை.   குருதேவ் டகோரின் ஒரு, கவிதை வரி, என் நினைவுக்கு வருகின்றது.   அவர் கூறியதை நான்,  மேற்கோள் காட்டுகிறேன்.   நம் வாழ்க்கைகான பொருள், நம்மை நாம் கடவுளிடமிருந்தும், பிறரிடமிருந்தும், தனிமைப்படுத்தலில் கிடையாது.   மாறாக,  யோகக்கலையின், இடையறாத ஒருங்கிணைவின், உணர்தலில் தான், அது இருக்கிறது,  என்றார் அவர்.   மந்திரச் சொற்களான வசுதைவ குடும்பகம்,  இதை இந்தியா,  பல யுகங்களாகவே, பின்பற்றி வந்திருக்கிறது.  இது உலக அளவிலே,  ஏற்புத்தன்மையைப் பெற்றிருக்கின்றது.   நாம் பரஸ்பர  நலன்களுக்காக, பிரார்த்தனைகளைச் செய்து வருகிறோம்.  மனித சமூகத்துக்கு அச்சுறுத்தல்கள் இருந்தால்,  யோகக்கலை பல நேரங்களில் முழுமையான, நலத்துக்கான தீர்வுகளை அளிக்கிறது.  யோகக்கலை மேலும் நமக்கு, மகிழ்ச்சியான வாழ்வினைக் காட்டுகிறது.   எனக்கு நம்பிக்கை இருக்கிறது,  யோகக்கலை தடுப்பாற்றல் மற்றும், மக்களின் உடல்நல, தேவைகளை, நிறைவு செய்யும் பங்களிப்பை ……. தொடர்ந்து அளித்து வரும். 

நண்பர்களே,  பாரதம் ஐ.நா. சபையினிலே,  சர்வதேச யோகக்கலை முன்மொழிவை வைத்த போது,  இதன் பின்னணியிலே,  இருந்த உணர்வு என்னவென்றால்,  இந்த யோக விஞ்ஞானம்,  உலகம் முழுமைக்கும் எளிமையாகக் கிடைக்க வேண்டும் என்பதே.  இன்று இந்தத் திசையில்,  பாரத நாடு,  ஐக்கிய நாடுகள்,  மற்றும் WHOவுடன் இணைந்து,  மேலும் ஒரு மகத்துவமான படியை முன்னெடுத்திருக்கிறது.  இப்போது உலகிற்கு,  எம் யோகா,  எம் யோகா எஃப்பின் சக்தி கிடைக்கவிருக்கின்றது.  இந்த எஃப்பிலே,  பொதுவான யோகவழிமுறையின்படி,  யோகக்கலைப் பயிற்சியின் பல காணொளிகள்,  உலகின் பல்வேறு மொழிகளில் கிடைக்கவிருக்கின்றன.  இது நவீன தொழில்நுட்பம், மற்றும் பழமையான விஞ்ஞானத்தின் இணைவுக்குமான,  ஒரு சிறப்பான உதாரணமாகும்.  நான் முழ்மையாக நம்புகிறேன்,  எம் யோகா எஃப்,  யோகக்கலையின் பரவலாக்கத்தை,  உலகம் நெடுகிலும் செய்வதிலும்,  ஒரு உலகம்,  ஒரே உடல்நலம் தொடர்பான முயல்வுகளுக்கு,  வெற்றியைக் கூட்டுவதில்,  பெரும்பங்களிப்பை அளிக்கும் என்பதை.  

நண்பர்களே,  கீதையில் கூறப்பட்டிருக்கிறது,  तम विद्या दुख,  सँयोग वियोगम्,  सँग्न्यितम्।  அதாவது,  துக்கங்களிலிருந்து விடுபடும்,  முக்தியைத் தான்,  யோகம் என்று கூறப்படுகிறது.   அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடிய,  மனித சமூகத்தின் இந்த யோகப்பயணத்தை, நாம் இதைப் போலவே, இடையறாது,  முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.   அது எந்த இடமாக இருந்தாலும் சரி,  எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி,  எந்த வயதாக இருந்தாலும் சரி,  ஒவ்வொருவருக்கும்,  யோகக்கலையினிடத்திலே,  ஏதோ ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கின்றது.  இன்று உலகத்திலே,  யோகக்கலை பற்றிய,  ஆர்வத்தை உடையவர்களின் எண்ணிக்கை,  மிகவும் அதிகரித்து வருகின்றது.   நாட்டிலும் அயல்நாடுகளிலும்,  யோக அமைப்புகளின் எண்ணிக்கையிலும் கூட,  அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.   இந்த நிலையிலே,  யோகத்தின் அடிப்படையான தத்துவ ஞானத்தை,  அடிப்படையான கோட்பாட்டை,  இதை நிலைநிறுத்திக் கொண்டு,  யோகக்கலை,  ஒவ்வொரு மனிதனையும்,  சென்றடைய வேண்டும்,  தொடர்ந்து சென்றடைய வேண்டும்,  நிரந்தரமாகச் சென்றடைய வேண்டும்,  இந்தப் பணி அவசியமானது.  இந்தப் பணியை,  யோகக்கலையோடு தொடர்புடைய நபர்கள்,  யோகத்தின் குருமார்கள்,  யோகத்தின் பரப்பாளர்கள்,  ஒன்றுபட்டு மேற்கொள்ள வேண்டும்.   நாமுமே கூட,  யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  மேலும் நம்மவர்களையும்,  இந்த உறுதிப்பாட்டோடு இணைக்க வேண்டும்.   யோகம் முதல்….. ஒத்துழைப்பு வரை,  என்ற இந்த மந்திரம்,  நமக்கு புதிய வருங்காலத்திற்கான பாதையை வகுத்து அளிக்கும்.  மனித சமுதாயத்தை பலப்படுத்தும்.   இந்த நல்விருப்பங்களோடு, இன்று சர்வதேச யோகக்கலை தினத்தன்று,  ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும்,  உங்களனைவருக்கும்,  பலப்பல நல்வாழ்த்துகள்.  பலப்பல நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe