மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், யாரையோ காப்பாற்ற, ஒன்றும் அறியாத எனது கணவரை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது, பல உயர் அதிகாரிகளைத் தப்பிக்க வைக்கவே என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர் என்பதே உண்மை என்று, கைது செய்யப்பட்ட முருகனின் மனைவி சுஜா இன்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் உதவி பேராசிரியர் முருகனின் பெயர் இடம் பெற்றது. அடிப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதில், முருகன் மீது நிர்மலாதேவி கூறிய தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநரால் விசாரணைக்கு நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானத்தை முருகனின் மனைவி சுஜா நேரில் சந்தித்து புகார் கடிதம் ஒன்றை இன்று வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசினார் சுஜா. அந்நேரம் அவர் தெரிவித்த தகவல்களும் எழுப்பிய கேள்விகளும்…
நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற எங்களை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது, புத்தாக்க பயிற்சி நடத்தியவர்களை முதலில் விசாரிக்க வேண்டும். நிர்மலா தேவியை ஆளுநருடன் புகைப்படம் எடுக்க வைத்தவரை விசாரித்தால் உண்மை தெரியவரும்.
மூன்று முறைதான் என் கணவர் நிர்மலா தேவியை சந்தித்துள்ளார். அதுவும் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அலுவலக ரீதியாகவே சந்தித்துள்ளார்.
எனது கணவர் உதவும் மனம் உடையவர். எனவேதான், புத்தாக்கப் பயிற்சிக்கு அறை வசதிகள் ஏற்பாடு செய்தார். இதில், நிர்மலா தேவியுடன் பெண் பேராசிரியர்கள் சிலரும் ஆண் பேராசிரியர் ஒருவரும் இருந்துள்ளனர்.
புத்தாக்க பயிற்சியில் பங்கேற்பது தொடர்பாக கருப்பசாமி மூலமாகவே முதன்முதலில் எனது கணவரை நிர்மலாதேவி சந்தித்தார். முதலில் என் கணவர் மறுத்தார். ஆனால் தங்குவதற்கு அறை கேட்பது தொடர்பாக என் கணவரிடம் கேட்டார் நிர்மலா தேவி. அதற்கு கிளர்க்கிடம் போய் அறை குறித்து கேட்டுக் கொள்ளுங்கள் என என் கணவர் அவரை அனுப்பி வைத்தார்.
கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை…
சி.பி.சி.ஐ.டி போலீஸார் என் கணவரைக் கைது செய்யும் முன்பே, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்தன.
குண்டர் சட்டத்தில் போட்டு விடுவார்கள். எனவே உடனே தலைமறைவாகி விடுங்கள் என்று மிரட்டல் வந்தது. தற்போதும் வருகிறது.
நிர்மலா தேவி என் கணவர் பெயரை விசாரணையில் குறிப்பிட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிர்மலா தேவியை புத்தாக்க பயிற்சிக்கு அனுமதித்தது யார்?
ஏசி அறைக்கு அவரை மாற்றியது யார்?
ஏன் இது குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்படவில்லை?
ஆளுநர் அருகில் நிர்மலா தேவியை நிற்கவைத்தது யார்?
தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தடயங்களை அழித்துவிட்டனர். தவறே செய்யாத நாங்கள் பலிகடா ஆகியுள்ளோம்.
– இவ்வாறு சுஜா கேள்விகள் எழுப்பினார்.