நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணைக்கு அழைத்த நிலையில், ஆவணங்களை வாங்காமல் ஒருதலைப் பட்சமாகப் பேசியதால் கூட்டத்திலிருந்து வெளியேறினார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் V.P.ஜெயக்குமார். இது குறித்து இந்து முன்னணியினர் கூறியதாவது…
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது.
கிறிஸ்தவ மதத்தைப் பெருமையாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்தியும் பேசி வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள், ஆலய பக்தர்கள் சார்பில் இந்து முன்னணி புகார் அளித்தது.
இந்நிலையில் பிப்.10 இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமாருக்கு சேரன்மகாதேவி சப் கலெக்டர் சம்மன் அளித்திருந்தார். அதன்பேரில், சப் கலெக்டர் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் சபாநாயகர் அப்பாவு கிறிஸ்தவர்களை உயர்வாகப் பேசியதையும் இந்து மதம் குறித்து இழிவாகப் பேசியதையும் ஒரு பென்டிரைவில் பதிவு செய்து சார் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துள்ளார். “இந்த வீடியோ பதிவு எனக்கு தேவையில்லை. இது பொது கோவில். யார் வேண்டுமானாலும் போகலாம்” என்று பேசினார்.
அதற்கு இந்து முன்னணி நிர்வாகி, “பொதுக் கோவில் என்றால் சமுதாய பாகுபாடின்றி இந்துக்கள் செல்லலாமே தவிர, வேற்று மதத்தவர்கள் செல்லக்கூடாது என்று அறநிலையத்துறை சட்டமே உள்ளது என்றும், பல கோவில்களில் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளே வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை ஏற்று நம்பிக்கையோடு வழிபடுவதாக அலுவலகத்தில் கையொப்பமிட்டால் தான் ஆலய மரபு படி விழாவில் பங்கேற்க முடியும்” என்று கூறியபோதும், அதை ஏற்றுக் கொள்ளாமல், “அவரை நீங்கள் தடுக்க கூடாது” என்பதை மட்டுமே சார் ஆட்சியர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நாங்கள் கொடுக்கும் ஆவணங்களைப் பார்த்தால் தானே இந்து மதம் பற்றி இழிவாகப் பேசியது தெரியும். அதை வாங்கவே மறுத்தால் இது எப்படி நியாயமான விசாரணையாக இருக்க முடியும்?” என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்டனர்.
இதை அடுத்து, சார் ஆட்சியரின் விசாரணையைப் புறக்கணித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நிர்வாகிகளுடன் வெளியேறினார். விசாரணை என்று அழைத்து விட்டு இந்துக்கள் தரப்பின் விளக்கத்தைக் கூட முறையாக கேட்காத சேரன்மகாதேவி சப்-கலெக்டரின் இச்செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது… – என்று இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி, சபாநாயகர் அப்பாவுவை நாளை தேர் இழுக்க அனுமதித்தால் இந்துக்களைத் திரட்டி இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் க.பிரம்ம நாயகம் , நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணா, கார்த்திக், கொம்பையா உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் இருந்தனர்.
பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள், அல்லது விசா காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியவர்கள். அவர்களில் நூற்றி நான்கு நபர்களை நாடு கடத்தி அண்மையில் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா.
அந்த நூற்றி நான்கு இந்தியர்களின் கைகால்களில் விலங்கு பூட்டி ஒரு அமெரிக்க ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவர்களை இறக்கியது அமெரிக்கா. அவர்களை விலங்கிட்டு அழைத்து வந்தது மனிதாபிமானம் அற்றது, அவர்களை அவமானம் செய்வது, என்று சில எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம் செய்தார்கள் – ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உட்பட. வேறு சில எதிர்க் கட்சிகளின் எம்.பி-க்களும் அவ்வாறு ஆட்சேபித்தார்கள்.
அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் தங்களின் கனவுலகம் கைவிட்டுப் போனது பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் மீது கோபம் வைத்திருப்பார்கள். நாடு கடத்தலாகி வரும்போது அவர்களுக்கு மனப் பதட்டமும் இருந்திருக்கும். அது இயற்கை.
நாடு கடத்தலான இந்தியர்களின் கைகளும் கால்களும் விமானத்தில் சுதந்திரமாக இருந்தால், அவர்களில் சிலர் நிதானம் இழந்து உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்களை வான் பயணத்தில் தாக்க மாட்டார்கள் என்பது நிச்சயமா? விரக்தியின் உச்சத்தில் அவர்கள் எதையாவது பிடுங்கி விமானத் தளத்திலோ கூரையிலோ எறியலாம். வான் களேபரம் பெரிதாகலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. எச்சரிக்கை அவசியம்.
பறக்கும் விமானத்திற்குள் கலகமும் தாக்குதலும் செய்பவர்களைக் கட்டுப்படுத்த, உடன் வரும் அமெரிக்கப் பாதுகாப்பு வீரர்கள் வீதியில் இருப்பது போல் மெலிதான துப்பாக்கிப் பிரயோகமும் செய்ய முடியாது. அதற்காக, நாடு கடத்தலாகும் ஒவ்வொரு இந்தியப் பயணிக்கும் தடியுடன் நாலைந்து பாதுகாப்பு வீரர்கள் விகிதம் ஒரு பெரும் பாதுகாப்புக் கூட்டத்தை அமெரிக்கா விமானத்தில் அனுப்ப முடியாது. விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்த வழி, நாடு கடத்தல் ஆகிறவர்களின் கை கால்களில் சங்கிலி போடுவது என்பது புரிந்துகொள்ளத் தக்கது, தவிர்க்க முடியாதது.
அமெரிக்கா செய்தது அமெரிக்காவுக்கு சரி. ஆனால் கைகால்களில் சங்கிலியோடு திருப்பி அனுப்பப் பட்ட இந்தியர்கள் நம் மனதுக்கு வருத்தமான காட்சி. அது இந்திய நாட்டின் கண்ணியம் வாங்கிய அடி. சக இந்தியக் குடிமக்களாக நாம் இப்படி நினைக்க, நாட்டின் கதி குறித்து வருத்தப்பட, நமக்கு அருகதை இருக்கிறது. ஆனால் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பெரிதும் சிறிதுமாக – சிலருக்கு மிகப் பெரிதாக, சிலருக்கு மிகச் சிறிதாக – அந்த அருகதை இல்லை.
நமக்குச் சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது மூன்று தலைமுறைக் காலம். மத்தியிலும் மாநிலங்களிலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சி செய்த லட்சணமும் நிர்வாகம் செய்த அழகும் எங்கெல்லாம் தெரிகிறது? நமக்குக் கிடைத்திருக்கும் குடிநீர் மற்றும் சாலை வசதிகளில் தொடங்கி, கல்வித் தரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கை வசதி என்று போய், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசுத் துறைகளின் அவலத்தில் அவை சிரிப்பாய்ச் சிரிக்கின்றன. இருக்கிற நிலைமையை அனுசரித்து இந்தியாவில் பிழைப்பவர்கள் பலர், சௌகரியம் காண்பவர்கள் சிலர், என்ற குடிமக்கள் உண்டு. ஆனால் வேறு சில குடிமக்களும் உண்டு. யார் அந்த வேறு சிலர்?
மற்ற பல நாடுகளில் கிடைக்கக் கூடிய நல்ல வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் விரும்பி அங்கு செல்ல எத்தனிக்கும் இந்தியர்கள் உண்டு, அவர்களில் சிலர் வளைகுடா நாடுகளில் பிளம்பர், கார் டிரைவராகப் போகிறார்கள். இன்னும் சிலர் அமெரிக்கா சென்று படித்து அங்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் சி.இ.ஓ-வாகவும் உயர்கிறார்கள். அதுவும் முடியாமல் இதுவும் முடியாமல் இருப்பவர்களில் பலர் முப்பது நாப்பது லட்சம் கடன் வாங்கிச் செலவழித்து, கடல் காடு வழியாகத் துன்பத்தில் பயணித்து, அமெரிக்காவுக்குள் ரகசியமாக நுழைக்கிறார்கள். அங்கு பிடிபட்டால் சங்கிலி அணிவிக்கப் பட்டு இந்தியாவுக்குத் திருப்பப் படுகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மெனி நாட்டு மனிதர்கள் இப்படி நாடு கடத்தப்டுவதை நாம் கேள்விப் படுகிறோமா? அப்படி நடப்பதில்லை. என்ன காரணம்?
அந்த நாட்டுக் குடிமக்களுக்குத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், பிற வாழ்க்கை வசதிகள், சிறந்த அரசு நிர்வாகம் ஆகியவை அவர்கள் நாட்டிலேயே கிடைக்கின்றன. அதனால் பிழைக்கவும் பெரிய சம்பாத்தியத்தில் வாழவும் அவர்கள் அமெரிக்கா அல்லது வேறு வெளிநாடு போக வேண்டாம். அதுவும் ரகசியமாக அமெரிக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு அவசியமோ தூண்டுதல் காரணமோ கிடையாது.
இந்தியா எப்படி? நம் மக்கள் அனைவருக்கும் உள் நாட்டில் நல்ல வேலை வாய்ப்பும் சிறந்த வாழ்க்கை வசதிகளும் போதிய அளவில் இன்றும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் நமது நாடுதானே? நமது நாடு என்றால், நமது நாட்டை 1947-க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் தானே காரணம் – பெரிதும் சிறிதுமாக? முதல் ஒன்றிரண்டு, அல்லது மூன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது மக்கள் நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் கண்டிருக்க வேண்டும், இன்று அவை மேலும் பரந்து பெரிதாகி நம் மக்கள் அனைவரையும் வளப்படுத்தும் பெரிய உயரத்தில் நமது பொருளாதாரம் இருக்க வேண்டும். ஆனால் இல்லை.
ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சியில் இருந்தாலும் நமது அரசியல் கட்சித் தலைவர்களின் நேர்மைக் குறைவு, தன்னல மோகம் மற்றும் சுய-குடும்ப அக்கறை பிரசித்தமானது. இந்தியர்களின் நல்வாழ்க்கை ஆர்வத்தின் மீது, அதற்கான பிரயத்தனத்தின் மீது, கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளைப் போட்டு அவர்களை இடர்ப்படுத்தி முடக்கி வைத்திருப்பது இந்த அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளில் முக்கால் வாசிப்பேர் இப்படியானவர்கள் என்பதால், நல்லது செய்ய நினைக்கும் மற்ற அரசியல்வாதிகளும் செயல்டுவதற்குத் திணறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மெனி, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தப் பரிதாப நிலை இல்லை.
பெருவாரியான மக்களைப் பல சங்கிலிகளில் பிணைத்து வைத்து, எதற்கும் ஏக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களை வைத்து, சில வகுப்பு மக்களை எப்போதும் தாஜா செய்து, எல்லா மக்களிடமும் அரசாங்கப் பணத்தில் சில இலவசங்களை எறிந்து, அவர்களின் நன்றி கலந்த ஓட்டை வாங்குவது நமது அநேக அரசியல் தலைவர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஒரு கட்சியிலாவது மாறுதல் தெரிவது ஆறுதல்.
இந்தியர்களுக்குச் சொந்த நாட்டிலேயே பல இடர்ச் சங்கிலிகள் அணிவித்து – அதுவும் தடிமனான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சங்கிலிகளில் மக்களைப் பிணைத்து – அவர்களை நசுக்கி வைத்திருக்கிறார்கள் நமது அநேக அரசியல் தலைவர்கள். இந்த அவலச் சங்கிலிகள் எப்போது உடைபடும் என்ற ஏக்கம்தானே நாட்டில் விவரம் அறிந்த நல்லோர்க்கு இருக்கும்?
Author: R. Veera Raghavan Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாத சுவாமி, கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில். இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது. முன்னதாக காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
அதன் பின்பு சிறிய கோரதம் தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய தேரில் குலசேகரநாத சுவாமியும்- தர்மசம்வர்த்தினி அம்பாளும் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது.
இந்த விழாவில் அதிமுக., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய 4 ரத வீதிகள் வழியாகச் சென்று தேர் நிலையை வந்தடைந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி!
செங்கோட்டை அறம்வளா்த்த நாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாள்தோறும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரா்கள் சார்பில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு இரவில் அலங்கரிக்கப்ட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பம்சமான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் உலாத் திருமேனிகள் எழுந்தருளச் செய்யப்பட்டனர். தெய்வத் திருமேனிகள் ஆலயத்தில் இருந்து தேரில் எழுந்தருளச் செய்யப்பட, செங்கோட்டை சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த வேதபாடசாலை மாணாக்கர்கள் பெரிதும் உதவினர்.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 11.30 மணி அளவில் நிலையை அடைந்தது. சுவாமி, அம்பாள், விநாயக முருகர் தேர்களை ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, ஆர்வத்துடனும் பக்தியுடனும் வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை புனிதமாக கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வணங்கி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் ஆலயமும், அதனுடன் உள்ள மலை மற்றும் வீதிகளும் திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம் என்றும், மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை அகற்றாமல் மேற்கொண்டு எந்த கட்டுமானமும் கட்டக்கூடாது எனவும் லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சில இஸ்லாமிய அமைப்புகள் மேற்படி சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி அறுத்து கந்தூரி கொடுக்கப் போவதாக திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் பிரச்சனை செய்து வருகின்றன.
மேற்படி தர்காவில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி கொடுத்ததற்கான எந்தவிதமான ஆவணமும் 1920 முதல் நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்குகளில் தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட பல்வேறு அமைதி கூட்டங்களிலும் ஆடு, கோழி பலி கொடுத்து கந்தூரி கொடுக்கப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை என்பதே உண்மையாகும்.
இதன் அடிப்படையிலேயே முன்னதாக மலையில் கந்தூரி கொடுக்கப்படும் என தர்கா நிர்வாகத்தால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி கொடுக்க முயற்சித்த இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி மறுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று வருமாறு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையால் வலியுறுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட வகையில் மலைமீது பலி கொடுக்கும் எந்தவிதமான வழக்கமும் இல்லாத போது வலுக்கட்டாயமாக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப் போவதாக மீண்டும் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் செய்திகள் வெளி வந்துள்ளன.
மேலும் திமுக கூட்டணி கட்சிகள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு தந்தூரி விழா நடத்த ஆதரவாக செயல்படுவதுடன். இந்துக்கள் மீது அவதூறு பரப்பி அறிக்கைகள் வெளியிடுவது கண்டனத்துக்குரியது.
தற்போது அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு பதட்ட சூழலையை உருவாக்கி மதக்கலவரத்தை ஏற்படுத்த திமுக கூட்டணி கட்சிகளும், ஜமாத் நிர்வாகமும் இணைந்து செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகின்றது.
மத நல்லிணக்கம் என்னும் பெயரில், வேற்று மதத்தினர் நடைமுறைகளை முருக பக்தர்களிடம் திணிப்பதை திமுக கூட்டணி கட்சிகள் கைவிட வேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் வழிபாட்டுத்தலத்தை ஆக்கிரமித்து அதன் புனிதத்தை கெடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு திமுக மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் ஆட்டம் – கட்டாக் – 9 பிப்ரவரி 2025
ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம்; இந்திய அணி வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (49.5 ஓவர்களில் 304, ஜோரூட் 69, பென் டக்கட் 65, லியம் லிவிங்க்ஸ்டோன் 41, ஜாஸ் பட்லர் 34, ஹாரி ப்ரூக் 31, பில் சால்ட் 26, ஜதேஜா 3/35, முகம்மது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹார்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கட்) இந்திய அணி (38.4 ஓவர்களில் 251/6, ரொஹித் ஷர்மா 119, ஷுப்மன் கில் 60, ஷ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 52, அதில் ரஷீத், ஓவர்டன், லிவிங்க்ஸ்டோன் தலா ஒரு விக்கட்) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் மட்டையாடத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக விராட் கோலி ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது.
பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 77 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (29 பந்துகளில் 26 ரன்), பென் டக்கட் (56 பந்துகளில் 65 ரன், 10 ஃபோர்), ஜோ ரூட் (72 பந்துகளில் 69 ரன், 6 ஃபோர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் (52 பந்துகளில் 31 ரன்), ஜாஸ் பட்லர் (35 பந்துகளில் 34 ரன்), லிவிங்க்ஸ்டோன் (32 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடியபோதும் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் சற்றே ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினர் ரவீந்தர ஜதேஜா தன்னுடைய சுழல் ஜாலத்தில் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (52 பந்துகளில் 60 ரன், 9 ஃபோர் 1 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (90 பந்துகளில் 119 ரன், 12 ஃஃபோர், 7 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய விராட் கோலி இன்றும் சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் குறையாமல் ஆடினர்.
ஷ்ரேயாஸ் ஐயர் (47 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) அக்சர் படேல் (43 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 44.3 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 308 ரன் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் ஜொலித்தது நம்முடைய பழைய கவலைகளை மாற்றியது.
ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அடுத்த மூன்றாவது ஒருநாள் ஆட்டம் அகமதாபாத்தில், இரவுபகல் ஆட்டமாக பிப்ரவரி 12ஆம் நாள் நடைபெறும்.
திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா
திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 07.02.2025 வெள்ளிக்கிழமை அன்று 54-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் விவேகானந்த மேனிலைப்பள்ளியின் 46-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேனாள் உடற்கல்வி துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் அனைவரும் ஒலிம்பிக் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளைத் சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கயிறு இழுத்தல் போட்டியிலும், விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் லக்கி கார்னர் போட்டியிலும் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சியானது அன்று மாலை 6.00 மணிக்கு கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி வாழ்த்துப்பாடலுடன் இனிதே தொடங்கியது.
இறுதி ஆண்டு இயற்பியல் துறை மாணவர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ராமர் வரவேற்புரை நிகழ்த்தினார். விவேகானந்த கல்லூரி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் நிரேந்தன் மற்றும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர் திரு.பிரபாகரன் ஆகியோர் 2024-2025 ஆம் கல்வியாண்டின் விளையாட்டு ஆண்டு அறிக்கையைப் வாசித்தார்கள்.
விவேகானந்த கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சுத்தானந்த அவர்கள் தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி நியமானந்த அவர்கள் ஆசியுரை வழங்கினர்.
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் பொருளாளர் ஸ்ரீமத் சுவாமி ருத்ரானந்த, விவேகானந்த மேனிலைப்பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த மற்றும் விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. மாதவன், கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், திரு. ரகு, முனைவர் ராஜ்குமார், மற்றும் முனைவர் தினகரன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் முனைவர் சந்திரசேகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விவேகானந்த மேல்நிலைப்பள்ளியின் பன்னிரெண்டாம் மாணவர் குருசங்கர் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப்பன்னுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் திரு.முருகன் அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண தபோவன கிளை நிறுவன சுவாமிகள் மற்றும் அம்பாக்கள், பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தபோவனத்தைச் சார்ந்த பல்வேறு அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.
அருப்புக்கோட்டை அருகே பெண்கள் கல்லூரி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாகவும் போலியான ஹால் டிக்கெட் வழங்கியதாகவும் கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம்.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் அருகே தமிழ்நாடு கல்லூரி என்ற பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் BEMS – பேச்சுலர் ஆப் எலெக்ட்ரோ ஹோமியாபதி மெடிசன் Bsc MLT – பேச்சுலர் ஆப் சைன்ஸ் இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி DNA – டிப்ளமோ நர்சிங் DMLT – டிப்ளமோ லேப் டெக்னாலஜி என்ற நான்கு பிரிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரிவுகளில் 222 மாணவிகள் படித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்தும் கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தஞ்சாவூர் புதுக்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு மாணவிகள் அட்மிஷன் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் இன்று Bsc MLT பிரிவுக்கு செமஸ்டர் தேர்வு நடந்ததாகவும் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டில் எந்த கையெழுத்தும் இல்லை எனவும் மேலும் ஒரு சிலருக்கு கையால் எழுதப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரித்ததில் இந்த கல்லூரிக்கு முறையான எந்த அங்கீகாரம் இல்லை எனவும் போலியான ஹால் டிக்கெட் வழங்கி தங்களை ஏமாற்றம் முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டம் காரணமாக கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய புகார் அளிக்குமாறு போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளும் பெற்றோர்களும் தாங்கள் கல்லூரியில் சேர்க்கும்போது வழங்கிய மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பி வழங்வும் கட்டிய பணத்தையும் திரும்ப வழங்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை அடுத்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து தங்கள் வழங்கிய சான்றிதழ்களை பெற்று செல்லுமாறும் போலீசார் தெரிவித்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் உங்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க கோரி மனு அளித்தனர்.
மாற்றுச் சான்றிதழ் கோரிய மாணவிகளுக்கு பெற்றோருடன் வந்த மாணவிகளுக்கு மட்டும் உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர் இல்லாத மாணவிகள் பெற்றோரை அழைத்து வந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, மதியம் 1.30 மணி அளவில், பாஜக., 11 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. பாஜக., 37 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. இதன் மூலம், 48 – 22 என்ற தொகுதிகளின் அடிப்படையில் பாஜக., முன்னிலை பெற்றிருந்தது.
தில்லியில் 70 சட்டசபைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
இந்தத் தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1998ல் பாஜக.,வின் முதலமைச்சராக இருந்த சுஷ்மா ஜ்வராஜ், வெங்காய விலை உயர்வைக் காரணம் காட்டி எழுந்த தீவிர பிரசாரத்தில் ஆட்சியை இழந்தார். அதன் பின் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் தில்லியில் ஆட்சி அமைத்தது. ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இந்நிலையில், ஊழல்கள் குறித்து போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்த சமூக சேவகர் அண்ணா ஹஸாரேயுடன் போராட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, காங்கிரஸை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எவரும் எதிர்பார்க்காத வகையில், பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பின்னாளில் ஊழல்களின் ஒட்டுமொத்தக் கூடாரம் ஆகிவிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஆடம்பரத்துக்குப் பெயர் பெற்றவராகிவிட்டார். அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர்கள், ஓட்டு வங்கி அரசியலுக்காக இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கங்களின் பின் சென்று, தில்லியில் நடைபெற்ற மதக் கலவரங்களில் பின்னணியில் இருந்தார்கள்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற 2025 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து, தோல்வியைத் தழுவியுள்ளது. முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
புதுதில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜக., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பாஜக., வேட்பாளர் பர்வேஷ் வர்மா, 30,088 வாக்குகள் பெற்றார். கேஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றார். சந்தீப் தீக்ஷித் 4,568 வாக்குகள் பெற்றார். இதன் மூலம், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக., வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.
கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுதில்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கேஜ்ரிவால் முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் அரசியல் குரு அண்ணா ஹஸாரே, கேஜ்ரிவாலின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த போது, “ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கை- யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள்தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை. – இதை நான் கேஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார்” என்று கூறியுள்ளார்.
ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பாஜக., சார்பில் தர்விந்தர் சிங்க் மார்வா போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பாஜக., வேட்பாளர் 38,869 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,184 வாக்குகள் பெற்று, 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்த போதிலும், தற்போதைய முதல்வரான அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அதிஷியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பாஜக., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் 52154 வாக்குகளைப் பெற்று, 3521 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வெற்றி பெற்றார்.
குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் கோவில் குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது
திருவிழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மயான பூஜை நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வைகை ஆற்றிற்கு சென்று மாசாணி அம்மன் சக்தி கரகம் எடுத்து கோவிலுக்கு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வைகை ஆற்றிற்கு சென்று சக்தி கரகம் எடுத்து கோவிலுக்கு வந்தனர் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூக்குழி ஏழாம் தேதி மற்றும் முளைப்பாரி கரைத்தல் எட்டாம் தேதி நடைபெறுகிறது. சக்தி கரகம் மற்றும் அம்மனுக்கு பூமாலை அலங்காரம் ஏற்பாடுகளை மன்னாடி மங்கலம் அதிமுக தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.