Home Blog Page 22

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியோராவது ஆட்டம் ஹைதராபாத் vs ராஜஸ்தான் – ஹைதராபாத் – ஏப்ரல் 13

          முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 216 ரன் எடுத்தது. அந்த அணியின் அணித்தலைவர் இஷான் கிஷன் 91 ரன் (44 பந்துகள், 8 ஃபோர், 6 சிக்சர்) எடுத்தார். ஹென்றி கிளாசன் (26 பந்துகளில் 40 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 28 ரன்), சலீல் அரோரா (13 பந்துகளில் 24 ரன்), ட்ராவிஸ் ஹெட் (18 பந்துகளில் 18 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்கம் மிக மிக மோசமாக இருந்தது. யசஸ்வீ ஜெய்ஸ்வால் (1 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம்), துருவ் ஜுரல் (பூஜ்யம்), பிரிட்டோரியஸ் (பூஜ்யம் ரன்), ரியன் பராக் (4 ரன்) ஆகிய ஐவரும் பெரிதாக எதுவும் செய்யாமல் ஆட்டமிழந்தார்கள். மூன்று ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 ரன்னுக்கு 5 விக்கட்டுகள் இழந்திருந்தது. அதன் பின்னர் ரவீந்தர் ஜதேஜா (32 பந்துகளில் 45 ரன்), டொனாவன் ஃபெரேரா (44 பந்துகளில் 69 ரன்), துஷார் தேஷ்பாண்டே (11 பந்துகளில் 25 ரன்) அடித்ததால் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஓவரில் மூன்று விக்கட்டுகள் எடுத்த ப்ரஃபுல் ஹிங்கே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்தியிரண்டாவது ஆட்டம் சென்னை vs கொல்கொத்தா – சென்னை – ஏப்ரல் 14

          இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 48 (32 பந்துகள் 4 ஃபோர், 3 சிக்சர்) ரன்னும் ஆயுஷ் மாத்ரே 38 (17 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் டிவால்ட் ப்ருவிஸ் 41 (29 பந்துகள், 4 ஃபோர், 2 சிக்சர்) ரன்னும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி தனது பேட்டிங் லைனப்பில் மாற்றம் செய்தது. தொடக்க வீரர்களாக ஃபின் ஆலனும் சுனில் நரேனும் இறங்கினர். ஆனால் ஃபின் ஆலன் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதனால் ஏறத்தாழ தொடக்க வீரராக அஜிங்க்யா ரஹானே இறங்க வேண்டியதாயிற்று. ஆனால் கொல்கொத்தா வீரர்களால் அதிரடியாக ஆடமுடியவில்லை. அந்த அணியின் சுனில் நரேன் (24 ரன்), அஜிங்க்யா ரஹானே (28 ரன்), ரகுவன்ஷி (27 ரன்), ரொவ்மென் போவெல் ஆட்டமிழக்காமல் (31 ரன்), ரமன்தீப் சிங் (35 ரன்) ஆகியோர் மட்டும் சுமாராக ஆடினர். இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் நூர் அகமது 3 விக்கட்டுகள் எடுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்திமூன்றாவது ஆட்டம் லக்னோ vs பெங்களூரு – பெங்களூரு – ஏப்ரல் 15

          முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கம் முதலே சரியாக விளையாடவில்லை. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் (32 பந்துகளில் 40 ரன்), ஆயுஷ் பதோனி (24 பந்துகளில் 38 ரன்), முகுல் சௌத்ரி (28 பந்துகளில் 39 ரன்) ஆகிய மூவர் மட்டுமே சற்று நிலைத்து ஆடினர். பிற வீரர்கள் வந்தார்கள் போனார்கள் ரகம். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 146 ரன் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் ரசிக் சலாம் 4 விக்கட்டுகளும் புவனேஷ் குமார் 3 விக்கட்டுகளையும் க்ருணால் பாண்ட்யா 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய பெங்களூரு அணி இந்த ஸ்கோரை 15.1 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து விரைவில் அடைந்தது. அந்த அணியின் விராட் கோலி (49 ரன்), ரஜத் படிதார் (27 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (23 ரன்) சிறப்பாக ஆடினர். ஜேசன் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இருபத்திநான்காவது ஆட்டம் மும்பை vs பஞ்சாப் – மும்பை வான்கடே மைதானம் – ஏப்ரல் 16

          முதலில் ஆடிய மும்பை அணியின் இன்று ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக க்விண்டன் டி காக் ஆடினார். இது அவரது இந்த சீசனின் முதல் ஆட்டம். முதல் ஆட்டத்திலேயே ஆட்டமிழக்காமல் அவர் சதம் அடித்தார். 60 பந்துகளில் 112 ரன், 8 ஃபோர், 7 சிக்சர். நமன் தீர் 50 ரன் அடித்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷதீப் சிங் 3 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 80 ரன்னும் ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்னும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்து வெற்றிபெற்றது. அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம். டெல்லி 5ஆம் இடம். குஜராத் 6ஆம் இடம். லக்னோ 7ஆம் இடம். சென்னை 8ஆம் இடம். மும்பை 9ஆம் இடம். கொகொத்தா 10ஆம் இடம்.

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

tejasvi surya - 2026

— தேஜஸ்வி சூர்யா
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971 இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம்.

இன்று ஒவ்வொரு உறுப்பினரும் சுமார் 26 லட்சம் பேர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்த கோணலுக்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினர் எண்ணிக்கையை அதே நிலையில் உறையச் செய்ததேயாகும். அப்போது அது தற்காலிகம் என்று கூறப்பட்டது. அதற்கான காரணமும் தெளிவாக இருந்தது.

தென்னக மாநிலங்கள் பெண் கல்வி , பொது சுகாதாரம் ஆகியவற்றில் அக்கறையுடன் செயல்பட்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. அப்போது மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை என்பது தென்னக மாநிலங்களை தண்டிப்பதாகவும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு பரிசளிப்பதாகவும் மாறி இருக்கும்.

உறுப்பினர் எண்ணிக்கையை உறையச் செய்தது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை நீடிக்கும் என்று பின்னர் முடிவெடுக்கப்பட்டது. தொகுதிகளின் எல்லையை 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருந்தது. 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் தொகுதிகளை மறு வரையறை செய்து, எண்ணிக்கையை அதிகரிப்பதை இனியும் தள்ளி போட முடியாது.

நாடாளுமன்றம் இந்த விஷயத்தில் எதையும் செய்யவில்லை என்றால் தென்னக மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். புதிய மக்கள் தொகை விவரங்கள் வெளியானால் அரசமைப்பு சட்டப்பிரிவு 81, 82 மற்றும் 330 அ ஆகியவற்றின்படி தொகுதி மறு வரையறை செய்ய வேண்டி வரும். இப்போதுள்ள 543 என்பது 550 தாக மாறும் . இது மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதனால் தென்னக மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வடமாநிலங்களுக்கு சாதகமாக முடியும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை செய்தாலும் கூட அது தென்னக மாநிலங்களுக்கு சாதகமாக அமையாது.

இத்துடன் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் . அதன்படி கேரளத்திற்கு கிடைக்கும் 12 உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 4 பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது வெறும் 8 தொகுதிகள் மட்டுமே மற்றவர்களுக்கு கிடைக்கும். இன்று கேரளத்திற்கு 19 ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 11 பேர்களுக்கு போட்டியிட தொகுதிகள் இருக்காது.

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார். இதனால் ஒரு பகுதி மாநிலங்களின் எண்ணிக்கை குறைவதும் வேறொரு பகுதி மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தடுக்கப்படும். மாநிலத்துக்குள்ளே 2011 மக்கள் தொகையின்படி தொகுதிகளின் எல்லை மாற்றி அமைக்கப்படும். அதே வேளையில் மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை இப்பொழுது உள்ளபடியே பாதுகாக்கப்படும்.

எண்ணிக்கைதான் விஷயமே. கர்நாடகத்தின் எண்ணிக்கை இப்போதுள்ள 28 ல் இருந்து 42 ஆக உயரும். தமிழ்நாட்டில் எண்ணிக்கை 39 லிருந்து 59 ஆகும். கேரளத்திற்கு 20 இருந்து 30 ஆக உயரும். ஆந்திர பிரதேசத்துக்கு 25 இருந்து 28 ஆகவும் தெலுங்கானாவிற்கு 17 லிருந்து 26 ஆகவும் மாறும். ஐந்து தென்னக மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 66 உறுப்பினர்கள் அதிகமாக கிடைப்பார்கள். அதே வேளையில் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் இப்போது உள்ள 23.7 சதவீத பங்கு அப்படியே நீடிக்கும். மத்தியில் அரசமைக்கும் விகிதாச்சார கணக்கில் மாற்றம் ஏற்படாது.

மோடி அரசின் இந்த இடையீடு இல்லாவிட்டால் தமிழ்நாடு 8 உறுப்பினர்களை இழக்கும் . ஆனால் புதிய திட்டத்தின் படி 20 உறுப்பினர்கள் அதிகம் கிடைப்பார்கள். கேரளம் மூன்றில் ஒரு பகுதியை இழப்பதற்கு பதிலாக பத்து இடங்கள் அதிகமாக பெறும். எனவே இந்த திட்டத்தை எதிர்ப்பது தென்னக நலன்களை எதிர்ப்பதாகும் . இந்த திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்காக தென்னக குரலை ஒடுக்கி கொள்வதல்ல. மாறாக அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதும் ,அதே வேளையில் விகிதாச்சார கணக்கின்படி தங்கள் பங்கை அப்படியே தக்க வைத்துக் கொள்வதும் ஆகும். தண்டிக்கப்படாமல் தப்புவதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது அரசாட்சியை மேம்படுத்தும். இன்று கர்நாடகத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 25 லட்சம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறார். விரிவாக்கத்துக்கு பிறகு இந்த எண்ணிக்கை 16 லட்சத்துக்கு ஒருவரென ஆகும். தமிழ்நாட்டில் இது 19 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக மாறும். சிறிய தொகுதி என்றால் மக்கள் தங்கள் பிரதிநிதியை சந்திப்பது எளிதாகும் . இது பிரதிநிதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் . வலிமையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும்.

எதிர்க்கட்சிகள் சில மாற்று யோசனையை முன் வைக்கிறார்கள். அவை எதுவும் வலுவாக இல்லை. மாநிலத்தின் மொத்த உற்பத்தியுடன் (GSDP) தொகுதி எண்ணிக்கையை இணைத்தால் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களின் கையில் அதிகாரம் அடைக்கலம் ஆகிவிடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே இருக்கும்.

விகிதாச்சாரப்படி எண்ணிக்கையை குறைக்கலாம் என்று சசி தரூர் கூறுகிறார். அவ்வாறு செய்வது ஒருவருக்கு ஒரு ஓட்டு ஒவ்வொரு ஓட்டும் சம மதிப்பு என்பது மாறி புவியியலுக்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டுக்கும் வெவ்வேறு மதிப்பு என்றாகிவிடும். இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும்.

சாரமாக பார்த்தால் இரண்டு விஷயங்களை ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று, எந்தவிதமான மாற்றமும் செய்யாவிட்டால் தென்னக மாநிலங்கள் இழப்பை சந்திக்கும். மற்றொன்று, ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கும். எந்த மாநிலமும் இப்போதுள்ளதை இழக்க வேண்டாம். அரசாட்சி மேம்படும் . மத்திய அரசு முன் வைத்துள்ள திட்டம் இதைதான் சொல்கிறது . இது தென்னகத்தை பாதுகாக்கும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும். மகளிர் இடஒதுக்கீட்டை எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் . இதுதான் நடைமுறைக்கு மிகவும் ஏற்புடையது . சீரியது. முற்போக்கானது. நான் இதை ஆதரிக்கிறேன். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நேர்மையாக அலசி பார்த்து என்னைப் போலவே ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்


கட்டுரையாளர் தெற்கு பெங்களூரு தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்


தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

File Picture
File Picture

இன்று, நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தின் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா தெளிவு படக் கூறினார். 

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543இல் இருந்து 816ஆக உயரும் என்றும், தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என்றும் குறிப்பிட்ட அமித் ஷா, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 எம்.பி.க்கள் (7.18%) உள்ள நிலையில் அது 59 எம்.பி.க்கள் (7.23%) ஆக உயரும் என்றார். 

மேலும் தென்மாநிலங்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், கேரளாவில், 20இல் இருந்து 30ஆகவும், கர்நாடகாவில் 28இல் இருந்து 42 ஆகவும், ஆந்திராவில் 25இல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17இல் இருந்து 26ஆகவும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும் என்றார். 

தற்போது தென் மாநிலங்களில் இருந்து 129 எம்பிக்கள் உள்ள நிலையில், அது 195 ஆக உயரும். அதாவது சதவிகித அடிப்படையில் 23.76இல் இருந்து 23.97%ஆக உயரும். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறை அமலுக்கு வராது என்றும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். 

இந்த விவாதத்தின் போது, தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பக் கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். 12 மணி நேரம் விவாதம் நடக்கும்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று அவைத்தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:

எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். தொகுதி மறுவரையறை என்ற சாக்கில், மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்காதீர்கள். அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் குறிப்பாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

வதந்திகளைப் பரப்பி தென் மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். மேலும், வேறு சில பிரச்னைகளை எழுப்பி, இந்த நல்ல நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது திரித்துக்கூறவோ வேண்டாம். மகளிர் இட ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு எந்த ஒரு காரணத்தையும் கூறாதீர்கள்

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு தோற்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் – என்றார் அவர்.

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

pm modiji in parliament rajyasabha - 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இம்மசோதாக்கள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையாற்றினார்.

திருஷ்டியை கழிக்க கருப்பு உடை!

தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ… யாருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதா தீங்கு விளைவிக்காது. அதற்கான உறுதிமொழி வேண்டும் என்றால், அதையும் தருகிறேன். தமிழில் இதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருந்தாலும் சொல்லுங்கள் அதனையும் பயன்படுத்தி நான் இந்த அவையில் பேசுகிறேன். ஒரு நல்ல காரியம் தடைபடக் கூடாது என்பதற்காக கருப்பு நிறத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள். மசோதா நிறைவேறும்போது, கருப்பு உடை அணிந்து வந்ததற்கு நன்றி. – என்று, நாடாளுமன்றத்திற்கு திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்த நிலையில் கிண்டல் செய்யும் விதமாக பிரதமர் மோடி பேசினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நேரம். இத்தகைய மசோதா நிறைவேற்ற நமக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மசோதாக்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். புதிய வலாறு படைக்க நாடாளுமன்றத்துக்கு பொன்னான நாள்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். நாம் அனைவரும் இணைந்து நாட்டுக்கு புதிய திசையை காட்டப் போகிறோம். 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காலத்தின் கட்டாயம். எதிர்க்கட்சிகள் அரசியல் காரணத்துக்காகவே இம்மசோதாக்களை எதிர்க்கின்றன. தனிப்பட்ட முறையில் ஆதரிக்கின்றன. ஆனால், பொது வெளியில் எதிர்க்கின்றன. இம்மசோதாவை நிறைவேற்றும் பெருமை ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமல்ல. இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களை கடந்த காலங்களில் பெண்கள் மன்னிக்கவில்லை. 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இந்த மசோதாக்களை கொள்கை அளவில் எந்த ஒரு கட்சியும் எதிர்க்கவில்லை.

இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் உள்ளவர்களுக்கு தங்களின் உரிமையைப் பெறும் நேரம் வந்துவிட்டது. 30 ஆண்டுகளில் ஊராட்சி பிரதிநிதித்துவம் காரணமாக பெண்கள் அரசியல் அனுபவம் பெற்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்துள்ளனர். முதலில் 33 சதவீத பெண்கள் மக்களவைக்குள் வர அனுமதிக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டை அவர்கள் முடிவு செய்வார்கள்.

மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீட்டால் தங்கள் பதவி பறிபோகும் என சிலர் நினைக்கிறார்கள். கையில் துடைப்பம் வைத்துள்ளவர்கள், நாளை நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அமரப் போகிறார்கள். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரும் போது மக்களவையிலும் ஏன் தரக் கூடாது. 

மகளிர் இட ஒதுக்கீடு என்பது நாட்டின் நலனுக்கான முடிவு. இதில் அரசியல் செய்ய வேண்டாம். அம்மசோதாவை எதிர்த்தால், அந்தத் தவறை உங்களால் எப்போதும் சரி செய்ய முடியாமல் போய் விடும். 

எல்லா வகையிலும் நம்மை மிஞ்சிய பெண்களின் உரிமையை நாம் ஏன் தடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் எண்ணங்களையும் பெண்கள் கவனித்து வருகின்றனர். இம்மசோதாக்களை எதிர்த்தால் நீண்ட காலத்திற்கு மோசமான விளைவுகள் ஏற்படும். நமது நோக்கத்தில் பிழை இருந்தால் நம்மை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்.  மகளிர் முன்னேற்றத்தை எத்தனை காலம் தடுப்பீர்கள். திறமைசாலியான பெண்கள் அதிகாரத்துக்கு வரத் தயாராக உள்ளனர். 

நாட்டின் ஒரு பகுதியின் நலன் மட்டுமே முக்கியம் அல்ல. இங்குள்ளவர்களில் சிலர் நாட்டின் ஒரு பகுதி வளர்ச்சி குறித்து மட்டும் சிந்திக்கக்கூடாது. விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இல்லை. எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதி இருக்காது. எந்த ஒரு விஷயத்துக்கும் எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதி இழைக்கப்படாது.

தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களுக்கு அமித்ஷா ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் யாருக்கும் பாகுபாடு ஏற்படாது என உறுதிமொழி வழங்கத் தயார். தமிழில் இதற்கு பொருத்தமான வார்த்தை இருந்தால் அதனை பயன்படுத்த தயார். மகளிர் இட ஒதுக்கீட்டை தடுத்தால், அதனால் எங்களுக்குதான் லாபம் கிடைக்கும். எங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக் கூடாது என நீங்கள் நினைத்தால் மசோதாவை ஆதரியுங்கள்.

வளர்ந்த இந்தியா என்பது, சிறந்த கட்டமைப்பு அல்லது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வளர்ந்த இந்தியாவின் கொள்கை முடிவுகளில் எதிரொலிக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர், கொள்கை முடிவுகளில் பங்கெடுப்பது இந்த நேரத்தில் தேவையானது. இந்த நேரத்தின் தேவையும் அதுவே. மகளிர் இட ஒதுக்கீட்டை 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தியிருக்க வேண்டும். இது குறித்த கொள்கை ஏற்பட்ட உடனே, அதனை சரியான நேரத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும்.

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது – என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

kadeswara subramaniam hindu munnani - 2026

தோல்வி பயத்தால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

பாராளுமன்ற தொகுதி வரன்முறை பற்றிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் என்ன இருக்கப்போகிறது? கற்பனையில் வன்முறையை தூண்டி திமுக மிரட்டல் விடுப்பது ஜனநாயக விரோதம். பாராளுமன்றத்தில் திமுக கூட்டணியில்தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு பொது இடத்தில் மசோதா நகலை எரிப்பது என்ற அநாகரீகமான செயலை மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் செய்வது சட்டவிரோதச் செயல் ஆகும்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்ட நகலை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் திமுகவின் தலைவரான கருணாநிதி அவர்கள் எரித்தபோது வழக்கை சந்திக்க வேண்டி வந்தது. அப்போது கருணாநிதி நாங்கள் சட்ட நகலை எரிக்க வில்லை என்று நீதிமன்றத்தில் கூறி தப்பினார்.

இப்போதும் மசோதா நகலை எரித்தார்களா? இல்லையா? என்பது ஒருபுறம். பாராளுமன்ற நடைமுறையை அவமதிப்பது சட்ட விரோதம் ஆகும். அதுவும் அரசியல் சாசன சட்டத்தை மதிக்க உறுதிமொழி எடுத்தவர் அதனை அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடைமுறையை அமல்படுத்தும் தேர்தல் ஆணையம் திமுக தலைவரின் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை, அறிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் இன்னமும் திமுகவை ஆளுங்கட்சியாகவே கருதுகிறார்களா? தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டு தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

சாதாரணமாக நிகழ்ச்சி நடத்த 48 மணிநேரம் முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் மனு அளித்து அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்வது தேர்தல் அதிகாரிகளின் உள்ளடி வேலையா?

பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு புதியது இல்லை. எப்படி மாநில அரசு மாவட்டங்களை பிரிக்கிறதோ அதுபோல இதனை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தியே வந்துள்ளது.

திமுக, மத்திய அரசின் கூட்டணியில் இருந்த போதே தமிழகத்தில் 41 எம்.பி.க்கள் என்பது 39 எம்பி ஆனது. அப்போது மௌனமாக ஏற்றுக்கொண்டது திமுக.

ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் சம அளவிலான எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் பலனாக பெண்களுக்கான ஒதுக்கீடு 33% தருவதற்கு வழிவகை காண்பதாக இம்மசோதாவில் கூறப்படுகிறது.

அதன் முழு வடிவமான மசோதா இன்று தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கற்பனையான பதற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவது, தேர்தல் தோல்வி பயமே காரணம் ஆகும்.

இந்து விரோத திமுகவின் தேச விரோத செயலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தல் இது. திமுக வன்முறையை தூண்டி, தற்கொலை நாடகங்களை நடத்தி தேர்தலை சீர்குலைக்க நடக்கும் நாடகத்தை தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இது குறித்து தேர்தல் ஆணையரிடம் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி சார்பில் புகார் மனு நேரடியாக அளிப்பார்கள்.

தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை நிலைநாட்ட இந்து முன்னணி முயற்சி செய்யும்.

எனவே பொது மக்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பரப்பும் பொய்யை நம்ப வேண்டாம்.

பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

stalin press meet - 2026
  • பி.ஆர். மகாதேவன்

தொகுதி மறு வரையறை

543 தொகுதிகளாக இருப்பது 850 சொச்ச தொகுதிகளாக அதிகரிக்கப்படவிருக்கிறது. மக்கள் தொகை அதிகரித்திருப்பதால் கூடுதல் எம்பிகள் தேர்வானால்தான் நிர்வாகம் செய்ய எளிதாக இருக்கும் என்ற எளிய கணக்குதான். ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் இருந்தபோது 50 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் மாணவர்கள் சேர்ந்துவிட்டால் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் நல்லது. இந்த அடிப்படையில்தான் இந்த மறு வரை செய்யப்படவிருக்கிறது. இதை அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் அதிகாரிகளும் சேர்ந்துதான் தீர்மானிக்கப் போகிறார்கள்.

எதிர்க்கட்சிகளென்றால் எல்லாவற்றையும் எதிர்க்கும் கட்சிகள் என்பதால் இதையும் எதிர்க்கின்றன.

இந்த மறுவரையினால் எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றச் செல்வாக்கும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாது. அதாவது இத்தனை ஆண்டுகாலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் (மாநில மக்களுக்கும்) என்னவிதமான பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறதோ அது அப்படியே தொடரப்போகிறது.

500 ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு பத்து சதவிகித உயர்வாக 550 ரூபாய் கிடைக்கும். ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு அதே 10% உயர்வாக 1,100 ரூபாய் கிடைக்கும். இரண்டுபேருக்கும் சதவிகிதக் கணக்கில் ஒரே சம்பள உயர்வுதான். ஆனால் முதலாமவருக்கு ரூ 50 மட்டுமே அதிகரிக்கும். இரண்டாமவருக்கு ரூ 100 அதிகரிக்கும்.

முரசொலியான்களுக்கு இந்த ஒன்றே போதும்; தமக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக நம்பி நடுத்தெருவில் உருளத் தொடங்கிவிடுவார்கள்.

யுனெஸ்கோ வளாகத்தில் இருக்கும் வாடகை அரங்கில் நடைபெற்ற விருந்தில் கிடைத்த விருதை உண்மையிலேயே யுனெஸ்கோ விருதாக நம்பும் கூட்டம் அது.

அவர்கள் இப்படிப் பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

இந்த மறுவரைவு நடவடிக்கை எடுக்க இது தோதாத காலமா..? தேர்தல் நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதைப் பயன்படுத்துவார்களே.

இப்படியெல்லாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எதிர்ப்பவர்களுக்கு இது இல்லையென்றால் இன்னொன்று.

எனவே, நாமே வாகான ஆயுதத்தை எடுத்துக் கொடுக்கவேண்டுமா என்ற கேள்வி தவறு.

உண்மையில் பாஜக பக்கம் நியாயம் இருக்கும் விஷயத்தை எதிரிகளின் பேசுபொருளாக்கியதென்பது பாஜகவின் சரியான தந்திரம் என்றே சொல்லவேண்டும்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து பாஜக செய்யும் சாகச விளையாட்டு.

உண்மையில் மக்கள் எதிர்க் கட்சியினரின் ஊடக அராஜகம், மிகை பயத்தை உருவாக்குதல், அவதூறு செய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இன்னொரு வாய்ப்பை முன்வைக்கிறது.

டிமானிடைசேஷனில் நம் பணமெல்லாம் பறிபோய்விடும் என்று பயம் காட்டினார்கள்.
பறிபோகவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் தமிழகம் அழிந்துவிடும் என்றார்கள்.
அழியவில்லை.

ரேஷன்கடைகள் எல்லாம் மூடப்படும் என்றார்கள்.
மூடப்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தால் முஸ்லீம்களை விரட்டிவிடுவார்கள் என்றார்கள்.
அப்படி நடக்கவில்லை.

ஹிந்தி வந்து தமிழை அழித்துவிடும் என்றார்கள்.
அப்படி நடக்கவில்லை.

பண்ணையார்களின் பயிர் கடனை ரத்து செய்யச் சொல்லி கோவணப் போராட்டம் நடத்தி தமிழர்களை அவமானப்படுத்தினார்கள்.
நீட் வந்தால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது என்றார்கள்.
உண்மையில் அது வந்த பின்னர்தான் சேர முடிந்திருந்திருக்கிறது. அனிதா உண்மையில் திமுக பக்கம் போகாமல் இருந்திருந்தால் அடுத்த முறை தேர்வு எழுதி இன்று டாக்டராகியிருப்பார்.

பாஜக தமிழர்களை வஞ்சிக்கிறது என்கிறார்கள். உண்மையில் ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் திமுகவும் காங்கிரஸும்தான்.

சாராயக்கடைகளை மூடமுடியாது. ஆனால் அரசு அதை நடத்தாமல் இருக்கலாம். பிஹாரில் பூரண மது விலக்கு அமலில் இருக்கிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க பாஜக விடவில்லை என்கிறார்கள். உண்மையில் அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமே.

ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கான நிதி தருவதில்லை என்கிறார்கள். 50% முழுமையாக தமிழகத்துக்கு மத்திய கவுன்சிலிடம் போகாமலேயே கிடைத்துவிடுகிறது. எஞ்சிய 50%லும் கணிசமான தொகை கிடைத்துவிடுகிறது.

கல்வி நிதியை முடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பொதுவான கல்வித் திட்டங்களுக்கான மத்திய அரசின் தொகையில் ஒரு நயா பைசா முடக்கப்படவில்லை.

புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில் சேரும் மாநிலங்களுக்கு அந்த நிதி. சேராத மாநிலங்களுக்கு அந்த நிதி இல்லை. முத்ரா கடனுதவி என்பது விவசாயம் சாரா சிறு/குறு தொழில் தொடங்க முன்வருபவர்களுக்குத் தரப்படும். அதை விவசாயிகளுக்குச் செய்யப்படும் அநீதி என்று சொல்லமுடியுமா? அவர்களுக்கு வேறு திட்டங்களில் கடனுதவிகள் தரப்படும். அதுபோல் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேராத மாநிலங்களுக்கு அந்த நிதி மட்டும் கிடையாது. இதில் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை.

இந்த உண்மைகள் அனைத்துமே மக்களுக்குத் தெரியும்.

தெரிந்தபின்னும் புரிந்துகொள்ளவில்லையென்றால் தொகுதி மறுவரையை இப்போது கொண்டுவந்தாலும் அப்பறம் கொண்டுவந்தாலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

இவை எல்லாவற்றையும் விடுங்கள்.

இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகள், மரபுகள், விழாக்கள், வாழ்வாதாரம் அனைத்தையும் இழித்தும் பழித்தும் அழித்தும் வருகிறார்கள். ஒரு கிறிஸ்தவ விழாவையோ முஸ்லிம் நம்பிக்கையையோ இப்படி எதுவும் பேசுவதும் இல்லை.

இவையெல்லாம் மக்களுக்கு ஒருவர் வந்து சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

திமுக கூட்டணியின் இந்து விரோதம், ஊழல்கள், கம்யூனிஸ்களின் கார்ப்பரேட் எடுபிடித்தனம், தலித் கட்சிகளின் அடிமைத்தனம், கிறிஸ்தவ-இஸ்லாமிய சக்திகளின் வல்லாதிக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகத் திறனற்ற ஆட்சி எல்லாமே மக்களுக்குத் தெரியும்.

இருந்தும் இந்து நலன் இரண்டாம்பட்சமாக இருப்பதன் காரணம், இந்துக்களுக்கு அரசியல் உணர்வு இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதாவது கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தமது மதத்தினர் மீது சர்வாதிகாரக் கட்டுப்பாடு இருக்கிறது. இந்துத்துவர்களுக்கு இல்லை. அதனால் இந்து அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

1001362803 - 2026

கேரளாவின் பிரசித்தி பெற்ற புத்தாண்டு பண்டிகையான  சித்திரை மேஷ விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் விசு கனி காணும் விழா இன்று புதன்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றறது

  •  இன்று ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் காலை 7:00 மணி வரை பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
  • விஷு கனி அலங்காரம்: சுவாமி ஐயப்பனின் கருவறைக்கு முன்பாக கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள், தங்க நாணயங்கள், மற்றும் கண்ணாடி போன்ற மங்கல பொருட்கள் நிரப்பப்பட்ட உருளிகள் வைக்கப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் தந்திரியும் மேல்சாந்தியும் புத்தாண்டு பரிசாக நாணயங்களை (கைநீட்டம்) தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல் சாந்தி வழங்கினார்கள். 

விஷு பூஜைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நெய்யபிஷேகம், படிய பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

  • வழக்கமாக சித்திரை 1-ஆம் தேதி (ஏப்ரல் 14) இந்த விழா நடக்கும். ஆனால் இந்த ஆண்டு சாஸ்திர கணக்குகளின்படி, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நேரத்தைக் கணக்கிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு கணித்து இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற முழக்கத்துடன் இந்த புனிதமான கனி காணும் தரிசனத்தில் கலந்து கொண்டனர். 

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களான குளத்துப்புழா பாலகன் தர்ம சாஸ்தா கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவில் மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட பல்வேறு கோவில் விசு கனி தரிசனம் கைநீட்ட பிரசாதம் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதிகளை கேரளா அரசு போக்குவரத்து கழகம் செய்திருந்தது

சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

சாத்தூரில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த +2 மாணவர்கள் 3 பேர் ஆம்னி பேருந்து மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி 3 பள்ளி மாணவர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பேருந்து மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் இரத்த வெள்ளத்தில் 3 மானவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் சிவகாசி பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் கோகுல் (17), சிவகாசி டவுன் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பிரசன்னா (17), சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை செந்தில்குமார் என்பவரது மகன் யுவராஜ் (17) என்பதும் அவர்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து என்றும் அதனை ஓட்டிய ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் (26) என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் சாத்தூர் தாலுகா போலீசார்
ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வளர்ச்சிக்கு பாஜக – அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

1001362789 - 2026

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக – அதிமுக கூட்டணி அவசியம். என நடிகர் பாஜக நிர்வாகி சரத்குமார் சாத்தூரில் தேர்தல் பரப்புரையாற்றினார்.


சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது பேசிய சரத்குமார், “தாமரை சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான வாக்கு. ஒரு சிறந்த அரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். குறிப்பாகச் சுகாதாரத்துறையில், 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதாரா நிலையம் இருக்கும் போது. 15,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.


தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்த அவர், “திமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார், ஆனால் வந்தார்; சட்டமன்ற உறுப்பினர் ஆகமாட்டேன் என்றார், ஆனால் ஆனார்; அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ பொறுப்பேற்க மாட்டேன் என்றார், ஆனால் தற்போது அந்தப் பதவிகளிலும் அவரே இருக்கிறார். அந்த ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கும் இந்த ஆட்சியை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் 2014 ஆண்டு 10 இடத்தில் இருந்தோம் தற்போது நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கப் போகிறோம். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நமது நாட்டின் மனிதவளம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேம்படவும், தமிழகம் வளர்ச்சி பெறவும் மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கமான ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்” என்று தெரிவித்தார்.

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

bjp election manifesto - 2026

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான “தாமரை வாக்குறுதிகள்” என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையை பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி. நட்டா சென்னையில் இன்று வெளியிட்டார். தமிழக மக்களின் நலன் காக்கவும், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிடவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழியில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்திடும் வகையிலான தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக.,வினர், தமிழக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

1.குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.

2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.

3. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோகுற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.

4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.

5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.

6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப் படுவதையும் உறுதி செய்வோம்.

7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண
தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். மேலும் மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.

9.பஞ்சாயத்து அளவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்காக சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் (Steel Silos), பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளையும் அமைப்பதன் மூலம், சேமிப்பு இழப்புகளையும் அவசர காலத்தில் குறைவான விலைக்கு விற்பனை செய்வதையும் (Distress sales) தடுப்போம். மேலும், வட்டார அளவில் போக்குவரத்து வசதியுடன் கூடிய சந்தை இணைப்பு மையங்களையும் (Market Connector Hubs), மாவட்ட அளவில் பிரம்மாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் உருவாக்கித் தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வோம்.

10.’உழவர் உறுதுணைத் திட்டத்தின்’ கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றைத் தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக ₹50,000 வழங்கப்படும்.

11. மீனவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ₹8,000-லிருந்து ₹12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ₹6,000-லிருந்து ₹8,000-ஆகவும் உயர்த்துவோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

12. தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

13. தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.

14. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (Al) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

15. முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.

16. மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.

17. தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் ‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும்.

18. மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 ‘பிளக்-அண்ட்-பிளே’ (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்பூங்காக்கள் மூலம், தமிழகத் தொழிலதிபர்கள் அத்திட்டத்தின் முழுப்
பலன்களையும் பெறுவதை நமது அரசு உறுதி செய்யும்.

    19. இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலில் 100% பதிவை உறுதி செய்வதன் மூலம் கிக் தொழிலாளர்களை (Gig workers) ஆதரிப்போம். மாதந்தோறும் ₹1,500 மின்வாகன சார்ஜிங் அல்லது எரிபொருள் மானியம், ஒருமுறை வழங்கப்படும் ஐஎஸ்ஐ (ISI) சான்றளிக்கப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகையை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்குவோம்.

    20. ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும்.

    21. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுதோறும் இல்லத்திற்கே சென்று இலவச உடல்நலப் பரிசோதனை செய்யும் திட்டம், மாவட்டந்தோறும் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், அதிநவீன இசிஆர் (ECR) விபத்து சிகிச்சை மையம், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 50-ஆக உயர்த்துதல் மற்றும் அரிய வகை நோய்கள் பாதுகாப்பிற்காக ₹100 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் ஆகியவற்றின் மாநில அளவிலான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.

    22. மத்திய அரசுடன் இணைந்து, நிலத்தை நியாயமான விலையில் கையகப் படுத்துவதன் மூல தமிழகத்தின் இரயில்வே கட்டமைப்பை முழுமையாக விரிவுபடுத்துவோம். இதற்காக சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக இரயில் வழித்தடங்கள் (High Speed Rail Corridors), கோவை – திருப்பூர் – சேலம் இடையே பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பு (RRTS), விழுப்புரம் – சென்னை இடையே சிறு-நகர்ப்புற
    இரயில் சேவை (Semi-Urban Rail), ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் (Hydro Power Train) மற்றும் சென்னையை டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கும் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்கள் போன்ற திட்டங்கள் மூலம் இரயில் இணைப்பை விரிவுபடுத்துவோம்.

    23. நவீன காலத் தொழில்நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவி, மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் அதன் வளாகங்களை அமைப்போம்.

    24. தமிழகத்தை இந்தியாவின் கடல்நீர் சுத்திகரிப்புத் தலைநகராக (Desalination Capital of India) மாற்றுவோம்; இதற்காகக் கூடுதலாக 500 MLD திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், வட்டப் பெருங்குழாய் வழித்தடம் (Ring main network) மூலம் நீர் அமைப்புகளை இணைத்தல் மற்றும் கடலூரில் பிரத்யேகக் கடல்நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.

    25. மத்திய அரசின் ‘பி.எம். சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தமிழகப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக ₹25,000 கூடுதல் ஊக்கத்தொகை (State Top-Up) வழங்கப்படும்.

    26. தமிழகத்தின் கடல், மலைகள், காடுகள், கோயில்கள் மற்றும் பண்பாடு சுற்றுலா மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவோம்; அத்துடன், நாட்டுப்புற மரபுகள் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் நாடு தழுவிய அளவில் ‘தமிழக கிராம தெய்வங்கள் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துவோம்.

    27. தென் தமிழகத் திருத்தலப் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் ‘தென் தமிழகத் திருத்தல யாத்திரை’ திட்டம் செயல்படுத்தப்படும்; இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பக்தர்கள் வருகை தரும் முக்கிய கோவில்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் உள்ளூர் மக்களுக்காக பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும்.