Home Blog Page 344

அரசியல்… பாடி லேங்குவேஜ் மட்டுமில்லே… சகபாடி லேங்குவேஜும் கூட!

dmk bjp speeches - 2026

திமுக காரன் ஒரு லெவல் வரைக்கும் பொறுமையா இருப்பான்! ஆடு ஆடா இருக்கணும்! ரொம்ப ஆடினால் பிரியாணி போட்ருவோம்!”– தி.மு.க பிரமுகர் இப்படிப் பேசியதற்கு வேறு யாராவது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தால் எப்படி REACTION கொடுத்திருப்பார்கள்?

சும்மா ஒரு ஜாலியான கற்பனை!

அமரர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி:– “விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்! பகவான்தான் இப்படிப் பேசுபவர்களுக்கு நல்ல புத்தியைத் தரணும்னு வேண்டிக்கறேன்!”

(அந்தப் பக்கம்:- “யோவ் ஐயரே? என்ன நக்கல் உடறியா? எவன் நாசமாப் போவானு பாத்துடலாமா? இறங்கி ரோட்டுக்கு வந்து பாருடா ஆரிய வந்தேறி!”)

சி.பி.ராதாகிருஷ்ணன்:- “எனது இனிய நண்பர் மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்துக்கு இத்தகைய பேச்சைக் கொண்டு வருகிறேன்! ஒரு திருமண விழாவில் கூட அவரது மனம் குளிர்விக்கப் பேசியவன் அல்லவா நான்? அவர் நல்லுள்ளத்தோடு தமது கட்சிக்காரரை திருத்தி எங்களுடைய பணியை சுலபமாக்கி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!”

(அந்தப் பக்கம்:- “இன்னா, இன்னா ராங் காட்டினு கீறே? என்னை இன்னாத்துக்குய்யா என் தலீவரு திருத்தணும்? பட்டா, ஓடிடு! இந்த குசால் வேலை எல்லாம் கோயமுத்தூரோட வச்சிக்க!”)

பொன்னார்:- “பெருந்தலைவர் காமராஜரை அடியொற்றி அரசியல் தொடங்கியவன் நான்! அவர் காட்டிய தேசியத்தை – அஹிம்சையை மனதில் சுமப்பவன் நான்! காமராஜரை போலவே பொதுவாழ்வுக்காக குடும்ப வாழ்வைத் தியாகம் செய்தவன் நான்! என்னை பிரியாணி போடப் போவதாக சொல்வது அமைதியை விரும்பும் தமிழ் மண்ணுக்கு உரிய பாரம்பரியம் அல்ல என்பதை மெத்தப் பணிவன்போடு கழகத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்!”

(அந்தப் பக்கம்:- “அடிங் கொய்யால! உன் காமராசரையே குப்புறப் போட்டு கும்மியடிச்சவங்க நாங்க! இன்னா, காமராஜ் அது இதுன்னு கமால் காட்றியா எங்களாண்ட? 71 தேர்தல்ல அவர் குடியிருந்த வாடகை ஊட்டையே – “ஏழைப் பங்காளன் பங்களாவைப் பார்த்தியா?”-னு போஸ்டர் போட்டு எலீக்சன்ல அவருக்கு ஃபீஸை புடுங்கி விட்டவங்க! காமராசராவது கழுதை முட்டையாவது போவியா?”)

தமிழிசை அக்கா:- “இப்படி பிரியாணி போடுவது என்றெல்லாம் பேசுவது அறிஞர் அண்ணா கற்றுத் தந்த கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிந்தித்து தமது கட்சிக்காரருக்கு எடுத்துக் கூறித் திருத்த வேண்டும்! எனது திருமணமே கலைஞர் தலைமையில்தான் நடந்தது என்று கூறிக் கொண்டு – அவர் தலைமையில் அவரது மகள் போன்ற பாசத்தோடு திருமணம் செய்விக்கப்பட்ட என்னை – கலைஞரின் தமிழைக் கற்றவர்கள் இப்படி எல்லாம் “பிரியாணி போடுவது”- என்றெல்லாம் பேசுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும்! நான் அவர்கள் வீட்டுப் பெண்களை நினைத்தே வருந்துகிறேன்…”

(அந்தப் பக்கம்:- “இன்னாமே இன்னா? அவ்வளவு ரோசம் கீறவங்க உங்க அப்பன் குமரி அனந்தனுக்கு ஊடு வேணும்னு எங்க தலீவரண்ட வந்து ஏன் பிச்சை எடுக்க உடறீங்க? நாங்க போட்ட பிச்சைதான் உங்க அப்பனுக்கு ஊடு தெரிஞ்சிக்க! கரு… சி! பரட்…”)

இப்போது FAST FORWARD செய்து அண்ணாமலைக்கு வருகிறோம்! இது கற்பனை அல்ல – நிஜம்! எதார்த்தம்!

அண்ணாமலை: “ஆர்.எஸ்.பாரதி அண்ணன் பேச்சுக்கும் அவர் வயசுக்கும் பொருத்தமில்லாம பேசறாரு! என்னை வெட்டி பிரியாணி போடறேங்கறாரு! ஆனா ஒரு விஷயம்ணா! இது காட்டுல அருவாள் பிடிச்ச கை! கிளுவ மரத்தை வெட்டின கை! நாளைக்கு கூட காலையில ஒன்பது மணியில் இருந்து மதியம் வரைக்கும் காட்டுல விவசாயம்தான் பார்க்கப் போறேன்! கிளுவ மரத்தை வெட்டப் போறேன்! யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும்! அதுவும் விவசாயி வெட்டினால் நல்லாவே வெட்டும்!”

(அந்தப் பக்கம்:- “….”..”….” கப்சிப்!)

இதுதான் ஆன் தி டாட் பதில்!

இதுதான் இதுவரை அவர்கள் கண்டிராத பா.ஜ.க! அதனால்தான் திராவிட மாடல் அண்ணாமலையைக் கண்டாலே பதறுகிறார்கள்!

(அதே அண்ணாமலைதான் ஆதிசங்கரர் முதல் மத்வாச்சாரியார் போன்ற மகான்கள் – அண்ணாமலையின் வார்த்தையில் விஸ்வ குருக்கள்- பாரதத்தை இணைத்தார்கள் – ஒரு அரசு உத்தரவு போட்டு ஒன்றுபட்ட பாரதம் உருவாகவில்லை என்பதை நயம்படவும் எடுத்துக் கூறுவார்!)

எந்த வார்த்தையை எந்த வார்த்தையால் சந்திப்பது என்ற வித்தை தெரிந்த இளைஞன்!

கிளுவை மரமும் வெட்டுவார் – கீதை விளக்கமும் சொல்லுவார்!

கற்பனை : முரளி சீதாராமன்


ஸ்ரீவிலி வனப்பகுதியில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம் ..

IMG 20230712 WA0149 - 2026

ஸ்ரீவிலி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் யானை, புலி ,கரடி, மான்,மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கோவிலாறு அணை. மலை அடிவாரப் பகுதியில் இந்த அணை அமைந்துள்ளதால் ரம்மியமான அழகை காண பொதுமக்கள் தடையை மீறி வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான ஆரஞ்சு வண்ணத்தில் ‘வந்தே பாரத்’ ரயில்கள்!

new vande bharat train color - 2026

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயில்கள், தற்போதுள்ள நீலம் மற்றும் வெள்ளை நிறங்களுக்குப் பதிலாக, முன்புறத்தில் ஆரஞ்சு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையுடன் புதிய தோற்றத்தில் வரவுள்ளன.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, வந்தே பாரத் ரயில்களின் சீரமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், வண்ண வடிவ மாற்றம், இருக்கைகளுக்கு சிறந்த குஷன், முன்பை விட மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகளை எளிதாக அணுகுதல் மற்றும் கால் நீட்டிக் கொள்ள, ஓய்வாக இருக்க நீட்டிக்கப்பட்ட அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் அடங்கும்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சனிக்கிழமை (ஜூலை 8) சென்னையில் உள்ள ஐசிஎஃப் எனப்படும் இன்டெக்ரல் கோச் பேக்டரிக்கு வருகை தந்து, ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் பெட்டிகள், புதிய தோற்றப்பொலிவுடன் கூடிய ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார்.

vanthebharath train color2 - 2026

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வந்தே பாரத் விரைவு வண்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தயாரிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள சுமார் 25 பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

இருக்கை சாய்வுக் கோணம் அதிகரிப்பு, தண்ணீர் மேலே தெறிக்காமல் இருக்க ஆழம் கொண்ட வாஷ் பேசின், கழிப்பறைகளில் சிறந்த வெளிச்சம், டிரைவிங் டிரெய்லர் கோச்களில் பார்வையற்ற பயணிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளுக்கு ஃபிக்சிங் பாயிண்ட்களை வழங்குதல் ஆகிய 25 மாற்றங்கள் ஐசிஎஃப்.,ஃபில் மேற்கொள்ளப் படுகின்றன.

படிப்பதற்கான விளக்கு தொடுதிரை (ரீடிங் லேம்ப் டச் – ரெசிஸ்டில் இருந்து கெபாசிட்டிவ் டச் வரை) எளிதாகப் பயன்படுத்த, வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறந்த ரோலர் பிளைண்ட் ஃபேப்ரிக் மற்றும் ஆண்டி-க்ளைம்பிங் சாதனம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக செய்யப்படுகின்றன.

vanthebharath train color - 2026

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதாக வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த உள்ளீடுகள், பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக பெட்டிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர்-வெர்ஷன் மற்றும் வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளின் தயாரிப்பு செயல்முறை மிகவும் நல்ல நிலையில் உள்ளது, என்றார் வைஷணவ்.

கீழ்ப் பகுதி பயணிகளின் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை பூர்த்தி செய்யும் வகையில், முன்பதிவு இல்லாத மற்றும் பொது வகுப்பு பயணிகளுக்கு ஏற்ற வகையில் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பெட்டிகளை தயாரிக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அனைத்து பயணிகளுக்கும் நல்ல தரமான ரயில்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றார் மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ்.

இதனிடையே, அமைச்சர் வைஷ்ணவ் ஐசிஎஃப்.,பில் ரயில் பெட்டிகளை பார்வையிடும் புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காவி நிறத்தில் வண்ணம் கொடுத்திருப்பதாக சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் விரைவில் அழுகடைவதால் அதை சமாளிக்கும் வகையில் ஆரஞ்சு மற்றும் கிரே கலர்களில் வண்ணம் பூசி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் ஆரஞ்சு வண்ணத்தில் அசத்தலாக ஓடப்போகிறது வந்தே பாரத் ரயில்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் (6): 1992ல் ஏற்பட்ட மாற்றங்கள்!

world cup cricket 1992 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் பகுதி 6 – 1992


முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


1992 கிரிக்கெட் உலகக் கோப்பை அதிகாரப்பூர்வமாக “பென்சன் & ஹெட்ஜஸ் உலகக் கோப்பை 1992” என அழைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்பாடு செய்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஐந்தாவது கட்டமாகும்.

இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பிப்ரவரி 22 முதல் மார்ச் 25, 1992 வரை நடைபெற்றது. நான்காவது போட்டி இந்தியா-பாகிஸ்தானில் அக்டோபர்-நவம்பரில் 1987இல் நடைபெற்றது. எனவே ஐந்தாவது உலகக் கோப்பைக்கான போட்டி 1991 நவம்பரில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல கோடைகாலத்தில் போட்டியை நடத்த வேண்டும் என்பதற்காக 1992 பிப்ரவரி-மார்ச்சில் நடத்தினார்கள்.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை சாம்பியன் ஆனது. 1992 உலகக் கோப்பை சர்ச்சைக்குரிய “மழை விதி”க்காக நினைவுகூரப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மெதுவாக விளையாடி இந்த விதியைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது, ஆனால் அந்தத் தந்திரம் பலிக்கவில்லை; இறுதியில் அவர்கள் போட்டியில் தோற்றார்கள்.

போட்டியில் செய்யப்பட்ட மாற்றங்கள்

1992 உலகக் கோப்பை முதன்முதலில் வீரர்கள் வண்ண உடைகள் அணிந்து ஆடினர். வெள்ளை கிரிக்கெட் பந்துகள், கருப்பு திரைகள் ஆகியவை பயன்பாட்டிற்கு வந்தன. பல போட்டிகள் ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் நடந்தன. இது தென் அரைக்கோளத்தில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.

மேலும் நிறவெறி முடிவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மீண்டும் டெஸ்ட் விளையாடும் தேசமாக சேர அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்த்த முதல் உலகக் கோப்பையும் இதுவாகும். முதல் முறையாக, உலகக் கோப்பை நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடத்தப்படவில்லை.

போட்டி நடத்தப்பட்ட விதம்

முந்தைய போட்டிகளிலிருந்து வடிவம் மாற்றப்பட்டது. முந்தைய போட்டிகளில் குரூப் A, குரூப் B இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. அதற்குப் பதிலாக இந்த உலகக் கோப்பையில் முழுமையான ரவுண்ட்-ராபின் இருந்தது.

எட்டு போட்டியிடும் நாடுகள், 28 ரவுண்ட்-ராபின் போட்டிகள், மேலும் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுடன் இம்முறை ஆட்டங்கள் நடத்தப்பட்டன. நிறவெறி காரணமாக 21 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக அணி 1991இன் பிற்பகுதியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டது, மேலும் ரவுண்ட்-ராபினில் மேலும் எட்டு போட்டிகளைச் சேர்த்து, அந்த அணியை சேர்த்து டிரா திருத்தப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கான இலக்கு ஸ்கோரைக் கணக்கிடும் விதியும் மாற்றப்பட்டது. முந்தைய விதி (சராசரி ரன் ரேட் முறை) முதலில் பேட்டிங் செய்யும் அணியின் ரன் விகிதத்தை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு கிடைக்கும் ஓவர்களின் எண்ணிக்கையால் பெருக்கி இலக்கு நிணயிக்கப்படும் வகையில் இருந்தது. ஆனால் இந்த விதி இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு நியாயமற்ற நன்மையைக் கொடுப்பதாகக் கருதப்பட்டது.

இதை சரிசெய்யும் முயற்சியில், இலக்கு மதிப்பெண் இப்போது அதிக ரன்கள் தந்த ஓவர்கள் முறையால் கணக்கிடப்பட்டது. இந்த அமைப்பில், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 44 ஓவர்கள் இருந்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணியின் 44 அதிக ரன் எடுக்கப்பட்ட ஓவர்களில் எடுக்கப்பட்ட ஸ்கோரை விட அவர்களின் இலக்கு ஸ்கோர் ஒன்று அதிகமாக இருக்கும்.

இம்முறையிலும் பல சிக்கல் எழுந்தன. மழை குறுக்கீடுகளின் நேரம் சிக்கலாகவே இருந்தது: இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான அரையிறுதிப் போட்டியில், 13 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க இலக்கு தரப்பட்டது. ஆனால் இடையில் ஒரு மெய்டன் ஓவர் இருந்ததால் அது கழிக்கப்பட்டு 7 பந்துக்கு 22 ரன்கள் என குறைக்கப்பட்டது.

இறுதியாக, 1 பந்தில் ஒரு அபத்தமான 21 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து அணி குழு-நிலை ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றது. இந்த அரையிறுதியின் கேலிக்குரிய முடிவு “டக்வொர்த் லூயிஸ் முறை”யை உருவாக்க வழிவகுத்தது.

அணிகள்

முதல் முறையாக, தென்னாப்பிரிக்கா ஐசிசியின் எட்டாவது முழு உறுப்பினராகப் போட்டியிட்டது, மேலும் உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளில் 22 ஆண்டுகளில் முதல் டெஸ்டில் விளையாடும். ஜிம்பாப்வே மூன்றாவது முறையாக களமிறங்கியது.

இதில் நுழைந்த அணிகள் – முழு உறுப்பினர்கள், (1) ஆஸ்திரேலியா, (2) இங்கிலாந்து, (3) இந்தியா, (4) நியூசிலாந்து, (5) பாகிஸ்தான், (6) தென்னாப்பிரிக்கா, (7) இலங்கை (8) மேற்கிந்திய தீவுகள் இணை உறுப்பினர் ஜிம்பாபே

குரூப் ஆட்டங்களில் முதலில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன்களில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஆட்டம் இலங்கை அணியுடன் நடந்தது; ஆனால் இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுடன் நடந்த அடுத்த ஆட்டத்தில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது; இந்த ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டது.

அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 43 ரன்களில் வென்றது. அடுத்த ஆட்டத்திலும் (ஜிம்பாபே அணியை) 55 ரன் களில் இந்தியா வென்றது; இந்த ஆட்டத்திலும் மழையின் குறுக்கீடு இருந்தது.

இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடமும் இந்தியா தோற்றுப் போனது.

இந்திய அணியில் அசாருதீன் 332 ரன்களையும் சச்சின் டெண்டுல்கர் 283 ரன்களையும் எடுத்தனர். பந்து வீச்சாளர்களில் மனோஜ் பிராபகர் 12 விக்கட்டுகள் எடுத்தார்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கட்டாயம்!

ration shops - 2026

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தொகையைப் பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

** முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. இவர்கள் விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.

** ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களும் விண்ணப்பிக்க முடியாது.

***அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது.

இப்படி எட்டு வித நிபந்தனைகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய சாமானிய மகளிருக்கு இந்த 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் மாநில அரசால் விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள், தங்களின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்காக, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

stalin met senthil balaji - 2026
#image_title

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பின், அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாறில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.

இதை அடுத்து, செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து, அதன் பிறகு காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்ற சாதாரண பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளைப் போல் நாலைந்து நாட்களில் செந்தில் பாலாஜியை வெளியே அனுப்பாமல், தொடர்ந்து அவரை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் காணொலிக் காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரை ஐடி., கம்பெனி ஏல விவகாரம்: அண்ணாமலைக்கு தொடர்பு இல்லையென பெண் நிர்வாகி மறுப்பு!

madurai it company issue lady interview - 2026

மதுரை ஐடி கம்பெனி ஏல விவகாரத்தில், பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இல்லை என ஐ டி கம்பெனி பெண் நிர்வாகி பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

மதுரை மாடக்குளத்தில் உள்ள ஐடி நிறுவன ஏல விவகாரம் தொடர்பாக , பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஐடி கம்பெனி பெண் நிர்வாகி பிரியதர்ஷினி கூறினார்.

மதுரை மாடக்குளம் கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் ஐடி நிறுவன நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி விஷ்ணு பிரசாத் அளித்த பேட்டி…

மதுரை மாடக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 2 ம் தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு எங்களுடைய நிறுவனத்தை திறந்து வைத்து ஊழியர்களுக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கினார்.

நாங்கள் மேற்படி நிறுவன இடத்தை கனரா வங்கியிடமிருந்து ஏலத்தில் ரூபாய் 75 லட்சம் செலுத்தி வாங்கினோம் . அதன்படி கனரா வங்கி எங்களுக்கு மேற்படி இடத்தை பதிவு செய்து கொடுத்துள்ளது. இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது.

இந்நிலையில், மேற்படி நிறுவன இடத்துக்கு உரிமையாளரான சதாசிவம் என்பவர் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பிலான சொத்தை கனரா வங்கி நிறுவனம் 75 லட்சத்துக்கு ஏலம் வழங்கியதின் பின்னணியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இருப்பதாக குற்றம் குற்றம் சாட்டி உள்ளார்.

எங்களுடைய ஐ டி நிறுவனத்திற்கும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எவ்வித தொடர்பும் துளியும் கிடையாது. அவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கின்ற வகையில், எதிர்க்கட்சிகள் தூண்டுதல் பெயரில் சதாசிவம், சந்திரசேகர் ஆகிய இருவரும் அவதூறு பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை மேற்படி சொத்து தொடர்பாக சதாசிவம், சந்திரசேகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உள்ளது .அதன் அடிப்படையில், கனரா வங்கி ஏலத்தில் வெளியிட்ட சொத்தை நாங்கள் ரூபாய் 75 லட்சத்திற்கு வாங்கி நடத்தி வருகின்றோம் .

எனவே, அவர்களுடைய குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. எங்களுடைய நிறுவனத்திற்கு வங்கி வாயிலாக ஏலத்தில் சொத்து வாங்கியதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துளியும் தொடர்பு கிடையாது…- இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு , பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில ஐடி பிரிவு செயலாளர்கள் விஷ்ணு பிரசாத் , விசுவநாதன் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

பஜ்ஜி சாப்பிட சைரனுடன் ஆம்புலன்ஸில் சென்ற ஊழியர்கள்: போலீஸார் அபராதம்!

ambulance telangana with siran - 2026

பஜ்ஜி சாப்பிட, சைரனுடன் ஆம்புலன்ஸில் சென்ற ஊழியர்கள்! அபராதம் விதித்த போலீஸார்!

ஹைதராபாத்தில் சைரன் ஒலித்தபடி வேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ், டீ கடையில் நிற்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாக் சந்திப்பு சிக்னலில், திங்கள்கிழமை இரவு சைரன் ஒலித்தபடி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளி இருப்பதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவலர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஆனால், சிக்னலைத் தாண்டி 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. இதனை கவனித்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்ஸ் அருகே சென்று பார்த்தபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரு செவிலியர்கள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்கள் அங்குள்ள கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

விசாரணையில் ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாததையும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதையும் காவலர் உறுதி செய்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த காவலர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ. 1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அனைத்தும் போக்குவரத்து காவலரின் சட்டை கேமிராவில் பதிவான நிலையில், அந்த காணொலியை பகிர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தெலங்கானா டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

pmk ramadoss - 2026

சென்னையை அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகள் தாரை வார்க்கப்பட்டால், அதை  தமிழகம் இதுவரை காணாத வகையில் வன்னியர்கள் போராடுவார்கள்; அதற்கு தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் எழுதிய கடிதம்:

ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக, தனியாருக்கு தாரை வார்க்க நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோருதல் – தொடர்பாக

இறைபணி, மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர் மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் வழங்கப்பட்ட அவரது சொத்துகளை, முதலமைச்சரின் முத்திரைத் திட்டங்கள் என்ற பெயரை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடைபெறும் முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக  முதலமைச்சராகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னியர் குல சத்திரிய மரபில் வெங்கடபதி நாயகர்- அகிலாண்டம்மாள் இணையருக்கு மகனாக 1835-ஆம் ஆண்டில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார்.  அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம்  என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.

ஆனால், ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கீழ் வரும் சொத்துகளை, அவரது நோக்கங்களுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1. பட்டிப்புலம் பகுதியில் புல எண் 168/24, பட்டா எண் 12-இல் உள்ள 60 ஏக்கர் நிலத்தை மாத வாடகை 22.02 லட்சம் என்ற தொகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏலம் வரும் 20.07.2023-ஆம் நாள் மாமல்லபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆளவந்தார் அறக்கட்டளையை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் ரத்து செய்யப்படவில்லை.

2. சட்டப்பேரவையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக, நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான புல எண்கள் 30, 31, 33, 195/2ஏ, 196, 212 ஆகியவற்றில் உள்ள 11.67 ஹெக்டேர் (29.175 ஏக்கர்) நிலத்தை நீண்டகால குத்தகைக்கு எடுக்க செய்தி மற்றும் விளம்பரத்துறை முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் தங்களுக்கு வழங்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ. முரளிதரன் அவர்களுக்கு செய்தி – விளம்பரத்துறை இயக்குனர் த.மோகன் அவர்கள் கடந்த 27.06.2023 அன்று நேர்முகக் கடிதம் (கடித எண்: 3410) எழுதி அனுப்பியிருக்கிறார்.

முதல்கட்டமாக 29.175 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று அடுத்தக்கட்டமாக மேலும்   70.825 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு பெற செய்தி விளம்பரத்துறை திட்டமிட்டிருக்கிறது. அதன்படி திரைப்பட நகரத்திற்கு மட்டுமே 100 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

3. நெம்மேலியில் கிழக்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 564 ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தை  சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்குமாறு  அறக்கட்டளையை நிர்வகிக்கும் செயல் அலுவலருக்கு 31.06.2023 அன்று அறிவுறுத்தப்பட்டு  உள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தை ஒப்படைக்கும் பணிகளை விரைவுபடுத்தும்படி கடந்த 05.07.2023 அன்று அறக்கட்டளை செயல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.

4. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில நில வணிக நிறுவனங்கள், அவற்றின் வீட்டு வசதி திட்டங்களையும், நிலவணிகத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 50 ஏக்கர், 100 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நீண்ட கால குத்தகைக்கு வழங்கவும் அதிகாரிகள் நிலையில்  திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட எந்தத் திட்டமும் ஆயிரம் காணி ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு இயைந்தவை அல்ல.  இவை அனைத்துமே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பறித்து தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கம் கொண்டவை. இவற்றை அனுமதிக்க முடியாது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக நடைபெறுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது. சென்னைக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்திற்காக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலம் குத்தகைக்கு பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பரதமுனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்காக நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இவை எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அரசுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. திரைப்படம் நகரம் அமைக்க வேண்டும் என்றாலும், சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்துவது என்றாலும் அந்த நிலத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அவரது உழைப்பால் ஈட்டிய சொத்துகளை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம் என்ற பெயரில் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது என்பது தான் வன்னிய குல சத்திரிய வம்சத்து மக்களின் எண்ணம் என்பதை தாங்கள் அறிய வேண்டும்.

பரத முனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்கும், திரைப்பட நகரம் அமைப்பதற்கும் ஆளவந்தாருக்கும் என்ன தொடர்பு? எவையெல்லாம் கூடாது என்று ஆளவந்தார் நினைத்தாரோ அவற்றுக்காக அவரது சொத்துகளை தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. ஆளவந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த வன்னிய குல மக்கள் இன்னும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.

இறைபணிக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆளவந்தார் நாயகரின் சொத்துகளை வன்னிய  மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து ஆளவந்தாரின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு துடிப்பதை வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை எதிர்த்து  தமிழகம் இதுவரை காணாத வகையில் போராடுவார்கள். அதற்கு தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம், கட்டுமானத் திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்.  இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொடக்க நிலையிலேயே  ரத்து செய்ய வேண்டும். அவற்றுக்கு மாற்றாக, ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் எப்போது?

new vande bharat train color - 2026

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கும் கோவைக்கும் இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மாநிலத்துக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகிறது ரயில்வே. ஆனால் தேவை அதிகம் இருக்கும் தடங்களில் வந்தேபாரத் ரயிலை இயக்க யோசித்து வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. தமிழகத்தில் சென்னை- பெங்களூர், சென்னை-கோவை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தின் முக்கிய மற்றும் பயணிகள் அதிகம் செல்லும் வழீத்தடமான மதுரை – சென்னை வழித்தடத்தில் வந்தேபாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டனர்.

சமீபத்தில் நெல்லை-நாகர்கோவில் இடையேயான அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், “வந்தே பாரத் ரயில் அக்டோபர் மாதத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும். இதற்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்கத் தேவையான பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்நிலையில் ரயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாம். தில்லி-சண்டிகர் (243 கி.மீ.,), சென்னை – நெல்லை (622 கிமீ.,), குவாலியர்-போபால் (432 கி.மீ.,) லக்னோ – பிரயாக்ராஜ்(201 கி.மீ) ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படுபவை என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.

எனவே, சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் 1 பெட்டி விஐபி., பெட்டி. இதில் இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் என ஒரு வரிசையில் நான்கு இருக்கைகள் இருக்கும். மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கை, மறுபுறம் 2 இருக்கை என ஒரு வரிசையில் 5 இருக்கைகள் இருக்கும்.

இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும். இதில் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட வசதிகள் கிடையாது. விஐபி., பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்ற பெட்டிகளில் பயணிக்க ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை கட்டணம் நியமிக்கப்படும் என தெரிகிறது.

இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30க்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.