Home Blog Page 5596

ஜிஎஸ்டி.,யால் குடிநீர் கேன் விலை உயர்வு

water-can-business-in-chennai

சென்னை:
ஜிஎஸ்டி.,யால் குடிநீர் கேன்களின் விலை உயர்ந்துள்ளது. 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜிஎஸ்டியில், வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது இடத்துக்கு ஏற்றார்ப் போல 20 லிட்டர் குடிநீர் கேன் ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்டு வருகிறது. ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலான பின்னர் குடிநீர் கேனின் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அவ்வாறு அவற்றில் விலையில் இடத்துக்குத் தகுந்தாற்போல் ரூ. 5 முதல் விலை ஏற்றப் பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.,யால் சைக்கிள் விலை ஏறியது; கார், பைக் விலை குறைந்தது

ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றில், சைக்கிள் விலை சற்று கூடியுள்ளது. ஆனால் பைக், கார் ஆகியவற்றின் விலை சற்றே குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சைக்கிள்களுக்கு 12 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரி முன்பு 5 சதவீதமாக இருந்தது. அதன்படி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் பின்னர் சைக்கிளின் விலை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.315 முதல் ரூ.1,400 வரை விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.4,500 – ரூ.20,000 வரை விலை கொண்ட சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரம், கார்,பைக் விலையில், வரிவிதிப்பு முன்பை விட 2 சதவீதம் குறைந்ததால், அவற்றின் விலை சரிந்துள்ளது.

ரெட்டிக்கே 493 கோடி; அரசுக்கு வெறும் ரூ.86 கோடியா? மணல் ஊழலைப் பட்டியலிடுகிறார் ராமதாஸ்

sand mining in tn - 2026

சேகர் ரெட்டிக்கு ரூ.493 கோடி, அரசுக்கு ரூ.86 கோடி: மிரள வைக்கும் மணல் ஊழல் என்று பட்டியலிடுகிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்…

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின் மூலம் தமிழக அரசுக்கு 2016-17 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி மட்டுமே என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மணல் கொள்ளையும், அதைச் சார்ந்த ஊழலும் எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதற்கு இதுவே வலிமையான சான்றாகும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருமானம் ஒரு தொகையே அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 48 மணல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும், 48 குவாரிகளிலும் சேர்த்து 2928 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும். ஒவ்வொரு குவாரியிலும் மணல் எடுத்துச் செல்வதற்காக குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சரக்குந்துகள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சரக்குந்து மணல் வெட்டி எடுக்கப்படுகிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசின் சார்பில் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என தமிழக அரசால் கூறப்படும் தொகையை விட 500 மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பது தான் உண்மை. தமிழக அரசு கூறும் புள்ளிவிவரங்கள் கேலிக்குரியவை என்பதை நிரூபிக்க சில புள்ளி விவரங்களைச் சுட்டிக் கட்டுகிறேன். வட தமிழகத்தில் பல மணல் குவாரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு திசம்பர் மாதம் 9ஆம் தேதி நடத்திய ஆய்வில் ரூ.33.60 கோடி மதிப்புள்ள ரூ.2000 தாள்கள் உட்பட ரூ.140 கோடி பணமும், 180 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பிணை மனு மீதான விசாரணையின் போது ரூ.33.60 கோடிக்கு புதிய ரூபாய் தாள்கள் எங்கிருந்து கிடைத்தன என்று கேட்டபோது, அவை அனைத்தும் மணல் குவாரிகளில் இருந்து 25 நாட்களில் கிடைத்த வருமானம் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

அதாவது சேகர் ரெட்டிக்கு மணல் குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் சேகர் ரெட்டி மணல் விற்பனையாளர் அல்ல. ஆற்றில் மணலை வெட்டி சரக்குந்தில் நிரப்புவது தான் அவரது வேலை. ஒரு சரக்குந்தில் இரு அலகுகள் மணல் ஏற்றப்படும். இதற்காக அரசுக்கு ரூ.800 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் 220 ரூபாய் சேகர் ரெட்டி நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதைக்கொண்டே சேகர் ரெட்டி ஆண்டுக்கு ரூ.493 கோடி வருவாய் ஈட்டுகிறார். இத்தனைக்கும் சேகர்ரெட்டி நிறுவனம் இரு மாவட்டங்களில் மட்டும் தான் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கூலிக்கு மணல் அள்ளிக்கொடுக்கும் சேகர்ரெட்டி நிறுவனமே ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமைந்துள்ள மணல் குவாரிகளின் உரிமையாளரான அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பதை எப்படி ஏற்க முடியும். இது மக்களை ஏமாற்றும் செயல் என்பதைத் தவிர வேறு என்ன?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஆண்டுக்கு ஆண்டு மணல் தேவை அதிகரித்துவரும் நிலையில் அரசுக்கு கிடைக்கும் வருவாய் மட்டும் குறைந்து வருகிறது. 2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து இப்போது ரூ.86.33 கோடியாக குறைந்திருக்கிறது.

உண்மையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் கொள்ளையடித்தது போக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தான் கூவத்தூர் கொண்டாட்டங்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம், கிலோக் கணக்கில் தங்கமும் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக திகழும் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.

கர்ணனுக்கு தண்டனை உறுதி: அனுபவித்தே ஆகவேண்டும்!

karnan judge - 2026

புது தில்லி :
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் தற்போது கோல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்ணன் சார்பில் ஜாமீன் கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க எடுத்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது. அவர் 6 மாத சிறை தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என உறுதிபடத் தெரிவித்தது.
முன்னதாக, கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.

மோடி தத்தெடுத்த மூன்று கிராமங்கள்: வளர்ச்சிப் பணி அபாரம்!

yogi adityanath - 2026
உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியுடன்!

வாராணசி :

பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி தொகுதியில் உள்ள காக்ராஹியா தொகுதியை இம்முறை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி தத்தெடுத்துள்ள கிராமங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனை உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள காக்ராஹியா கிராமத்துக்கு வந்திருந்த யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில் மூன்றாவது முறையாக காக்ராஹியா கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம், இந்த கிராமம் அபரிமித வளர்ச்சி பெறும். இந்த கிராமத்தை தத்தெடுத்த பிரதமர் மோடிக்கு, கிராம மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

காக்ராஹியா கிராமம், மல்யுத்த வீரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்த கிராமத்துக்கு மல்யுத்த வீரர்களின் கிராமம் என்ற பெயரும் உள்ளது.

கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

cinema theatre - 2026

ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,

சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம்.

மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை பொருட்டில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தமிழிலே 250 திரைப்படங்கள் வெளியாகின்றதென்றால் அதில் 10 சதவிகித படங்கள்கூட வெற்றிப் படங்களாக அமைவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழக அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் உட்பட எல்லோரும் அறிந்த உண்மை இது.

அனுபவசாலிகள், அறிவாளிகள், வசதியானவர்கள் என பல தரப்பினர் இந்த சினிமா தயாரிப்பில் ஈடுபட்டாலும் அவர்கள் யாராலுமே தொடர்ந்து வெற்றிகளைக் கொடுக்க முடிந்ததில்லை. அதற்கு முக்கியமான காரணம் மற்ற தொழில்களைப் போல வெற்றிக்கான நிரந்தரமான பார்முலா இல்லாத ஒரு நிலையில்லாத தொழிலாக சினிமா இருப்பதுதான்.

சினிமாவிற்கு உள்ள அதீத விளம்பரம், கவர்ச்சி, திடீர் புகழ் ஆகியவைகள்தான் ஆயிரக்கணக்கான மக்களை தினமும் இந்தத் துறைக்குள் இழுத்து வருகிறது.அப்படி வருகின்றவர்களில் ஐந்து சதவீதத்தினர் கூட இங்கே நிலைத்து நிற்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு திரைப்படம் தயாரித்து விட்டு இந்தத் தொழிலை விட்டு ஓடிப்போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இப்படி நிலையான வெற்றியோ வருமானமோ இல்லாத சினிமா துறையின்மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்துக் கொண்டிருந்தால் திருவள்ளூவரின் “பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” என்ற வாக்கின்படி தமிழ் சினிமா உலகம் அழிந்து போகும் நிலைதான் ஏற்படும்.

ஏற்கனவே சினிமா டிக்கெட்டுகளின் மீது 18 முதல் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமா டிக்கெட்டுகளின் மீது 30 சதவிகிதம் கேளிக்கை வரியும் விதித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அடியோடு முடங்கிப் போகும்.

இப்போதுதான் உலக சினிமாக்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு தமிழ் சினிமா வளர்ந்து கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து ஊக்குவிக்க வேண்டிய அரசு மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்?

தமிழக முதல்வர் உடனடியாக இந்த வரி விதிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டு தமிழ் சினிமா உலகைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உதவித் தொகையையும் அவர்களுக்கு தந்து உதவ வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை.

பல தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படத் தொழிலில் ஈடுபட அந்த உதவித்தொகைதான் விதை நெல் போல உதவியிருக்கின்றது. ஆகவே உடனடியாக அந்த உதவித் தொகையையும் வழங்கி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

முன்னதாக, தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி..,யில் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 3 முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசையும் தமிழ் திரைப்பட வர்த்தக சபையினர் சந்தித்தனர்.

அப்போது தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன்பின்னர், அபிராமி ராமநாதனின் வீட்டில் முக்கிய ஆலோசனை நடந்தது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று முதல் திரையரங்குகளை மூடி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து திட்டமிட்டபடி நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும். சினிமாத்துறை மீது மத்திய, மாநில அரசுகள் 58% வரியை விதித்துள்ளன. கோரிக்கை நிறைவேறும் வரை படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். ரூ.50-ரூ.200க்குள் சினிமா கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளதைப்போல், ஒரே வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

இரட்டை வரி விதிப்பை ஏற்று தியேட்டர் நடத்த முடியாது. வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஈடுசெய்யப்படும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குதான் அரசு கேளிக்கை வரி தொடர்பான அரசாணையை வெளியிட்டது. நாங்கள் ஜிஎஸ்டி.,யை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. கேளிக்கை வரிக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். சினிமா துறையில் ஜிஎஸ்டி வரி-28%, கேளிக்கை வரி-30 % வசூலிக்கப்படுகிறது. 58% வரி செலுத்தினால் நாங்கள் எப்படி திரையரங்கை நடத்த முடியும். தமிழகம் முழவதும் இன்று 1,000 தியேட்டர்கள் மூடப்படும். நேற்று முன்தினமே சில பகுதிகளில் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

கடலை மிட்டாய்க்கு வரியா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman - 2026
Central Minister Nirmala Sitharaman

சென்னை:

கடலை மிட்டாய்க்குக் கூட ஜிஎஸ்டி வரி என்று பரவிய அதிருப்தி அலைக்கு விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த விளக்கக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சத்துக்கு மேலான வர்த்தகக் கணக்குக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார். அவர் பேசியதிலிருந்து…

சிறுதொழில், குறுதொழில் அல்லது ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்து கொண்டு வியாபாரம் செய்யுங்கள். அப்போது கடலை மிட்டாய்க்கும் வரி கிடையாது.

நீங்கள் பர்கர் கூட செய்யுங்கள். ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி இல்லை. ஆனால் பர்கருக்கும் வரி, கடலை மிட்டாய்க்குமா வரி என்று எளக்காரமாக சொல்லக் கூடாது.
ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் பஞ்சு மிட்டாய்க்கும் வரி இல்லை. கடலை மிட்டாய்க்கும் வரி இல்லை. ஆனால் அதே கடலை மிட்டாயை சர்வதேச அளவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் போது பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்யும் போது அதன் வியாபாரம் ரூ.20 லட்சத்துக்கு மேல் சென்றால் நீங்கள் வரிகட்டியாக வேண்டும்.

எனவே அதில் எந்த பொருள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. பொருளின் மதிப்புக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படவில்லை. விற்பனைக்கு ஏற்பதான் வரி போடப்படுகிறது. ஆனால் உணவுப் பொருள்களின் மீது மட்டும் இந்த மாதிரி விதிக்கப்படவில்லை.

ஓட்டல்களில் இப்போது வரைக்கும் இட்லிக்கோ, தோசைக்கோ வரியே இல்லாமல் இருந்ததா? புதிதாக நாங்கள் வரி போடவில்லையே உள்ளூரில் போட்டோ, விற்பனை வரியோ உற்பத்தி வரியோ போட்டதினால் அதற்கு ஒரு வரி இருந்ததால் அந்த வரிக்கு சமமான முறையில் இப்போது ஜி.எஸ்.டி.யில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பழைய வரிக்கு பொருத்தமான வகையில் தான் புதிய வரியை சம விகிதத்தில் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இட்லி சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களா? போடு… வரியை என்ற ரீதியில் நாங்கள் வரி போடவில்லை. இதில் உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு வழி இல்லை.

ஒவ்வொரு மாநிலமும் நிதி மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் உறுப்பினராக இடம் பெறச் செய்து இருந்தது. அப்போது கொடுக்கல் வாங்கல் போல் அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதில் ஒரு மாநிலத்தில் ஒருவேளை பொருட்கள் விலை ஏற்றம் அல்லது விலை குறைவு ஏற்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்க அந்த மாநில நிதிமந்திரிதான் பொறுப்பு.

கம்யூனிஸ்டுகள் இன்று எதிர்க்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த நிதி மந்திரி கலந்து கொண்டாரே, அவர் ஒருமுறையாவது எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தாரா? இது ஒருமனதாக அனைவரும் சேர்ந்து சரி சமமாக எடுத்த முடிவு. நாம் எப்படி தெரியுமா? ஐயோ என் காதில் ஒரு தகவல் வந்து விட்டது, அது நிஜமா… பொய்யா… என தீர விசாரிக்காமல், ஐயோ… ஆமாம்… இந்த அரசு மோசம், இவர்கள் இப்படித்தான் பண்ணுவார்கள், ஏழைகளை வாட்டுவார்கள் என்ற எண்ணத்தோடு சொல்ல வேண்டுமானால் சொல்லலாம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆடி வருகுது அம்மன் உலா

samayapuram mariamman - 2026

நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது தேவர்களின் இரவு. நம் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள். அதில் இந்த ஆடி மாதம் தேவர்களின் நாள் கணக்கில், மாலை நேரத் துவக்கம். இந்த காலம்தான் இங்கே நமக்கு மழைக்காலத் துவக்கம். எனவே ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.

அம்மனுக்கு மிகவும் பிடித்தவை வேம்பும் எலுமிச்சையும். ஆடி மாதம் என்றால் கூழ் இல்லாமலா? இம்மூன்றுமே இந்தப் பருவ மாற்றத்துக்கு உட்படும் ஆடி மாதத்தில் நம் உடல் அடையும் நோய்களில் இருந்து தடுக்க உதவுவன. எனவேதான் அம்மன் இவற்றை தமக்கான அர்ப்பணமாக ஏற்றாள். இவற்றையே அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள்.

மேலும், தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதமும் இந்த ஆடி மாதம்தான்! பூமிதேவி பூமியில் தேவியாக அவதரித்ததும் இம்மாதமே. ஆண்டாள் ஆடிப்பூரத்தைத்தான் அவதரிக்க நன்னாளாகத் தேர்ந்தெடுத்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க அருள் புரிந்தார். எனவேதான், சிவனுடையதை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் என்பர். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவம் அடங்கி விடுகிறதென்பர். ஆடியில் செவ்வாய், வெள்ளிகள் போல் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடித் தபசு விழா, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் என ஆடி மாதப் பண்டிகைகள் வரிசை கட்டி நின்கின்றன.

ஆடியில் தான் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுகின்றனர். இது ஏன்? ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பர். இந்த ஆடி மாதத்தில்தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசி சேரும். இந்தக் காற்றின் மாற்றத்தாலும் பருவ நிலை மாறுபாட்டாலும், மனிதர்க்கு வரும் இருமல் உள்ளிட்ட சுவாச நோய்களைத் தவிர்க்கவே அம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுக்க கூழ் ஊற்றும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த ஆடிக்கஞ்சியில், அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் என மருந்துப் பொருள்களை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து, அதில் இந்தத் துணிக் கட்டைப் போட்டு ஊறவைத்து, மருந்துகளைப் பிழிந்து ஆடிக் கஞ்சியைப் பரிமாறுகிறார்கள். எனவே இது ஒரு மாமருந்து.

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயராம். அவளே பூலோகத்தில் சிவபெருமானின் சாபத்தின் காரணத்தால் வேப்ப மரமாகத் திகழ்கிறாள் என்பது புராணம். வேம்பு நோய்கள் பலவற்றை குணமாக்கும் வல்லமையுடன் குளிர்ச்சியைத் தருவதாகவும் அமைந்தது. வேம்பின் காற்று நம் உடல்நனைக் காக்கும். அதன் கசப்புத் தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அம்மை நோய்க்கு அருமருந்தாகத் திகழ்வது வேம்பு.

அம்மனுக்குரிய இந்த ஆடி மாதத்தில்தான் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம் சரமாகக் கோத்து, அம்மனுக்கு அலங்காரம் செய்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிப் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் சுகமாக வாழ்வர் என்பது நம்பிக்கை. வளையல் பிரசாதம் பெறும் கன்னியருக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆனந்த மாதமான ஆடியில் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அம்மன் சந்நிதி முன் நெய் விளக்கேற்றியும் எலுமிச்சை விளக்கேற்றியும் வழிபட்டால் துர்தோஷம் விலகி சந்தோஷம் நிலவும்.

கரூருக்கு அருகே உள்ளது வேலாயுதம்பாளையம். முருகன் கோயிலுக்கு புகழ்பெற்ற இந்த ஊரில் மலைவீதியில் உள்ளது மகாமாரியம்மன் கோயில். இங்கே ஆடி வெள்ளி மிகச் சிறப்பு. அப்போது அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பட்டுப் புடவை உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து மகா தீபாராதனை செய்கிறார்கள். அதனைக் காண்பதற்கு, பல இடங்களிலும் பக்தர்கள் இங்கே கூடுவது பார்ப்பதற்கு வெகு அழகு!
இந்த அபிஷேக விழாவே ஒரு திருவிழா போல் கொண்டாடப் படுகிறது. அப்போது, சுற்று வட்டார பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து, புனித நீரை கோயிலுக்கு எடுத்து வருவார்கள். பின்னர் மகாமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்கிறார்கள். பின் அம்மனுக்கு மீனாட்சி அம்மன் உள்ளிட்ட அம்மன் வடிவங்களை ஒவ்வொரு வெள்ளியிலும் விதவிதமாக அலங்காரம் செய்து, பூக்களால் அலங்கரிக்கின்றனர். அது கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு கூழ் வழங்குகிறார்கள். இந்த ஆடியில் அருகில் இருக்கும் அம்மன் கோயில் வைபவங்களில் கலந்து கொண்டு, பலன் கூடப் பெறுவோம்.

கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி

IMG 20170702 WA0071 - 2026
IMG 20170702 WA0069 - 2026

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் உள்ள
தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ளது கும்பாவுருட்டி அருவி. குற்றாலம்
சீசன் காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான
சுற்றுலா பயணிகள் கும்பாவுருட்டிக்கு வருவார்கள்.

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 16 பேர் ஒரு வாகனத்தில் குற்றாலம்
வந்தனர். அவர்கள் கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவிக்கு
குளிக்கச் சென்றனர்.

கும்பாவுருட்டி அருவியில் அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக பாறையில்
வழுக்கி அருவியின் உள்ள தடாகத்தில் விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும்
தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இறந்தவர்கள் தூத்துக்குடி காமராஜர்புரம் அழகுமுத்துநகரைச் சேர்ந்த பழனி மகன்
ராமச்சந்திரன் (வயது 31), தூத்துக்குடி முல்லைக்காடு கீழத் தெருவைச் சேர்ந்த
சக்திவேல் மகன் இசக்கிமுத்து (25) என தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் விரைந்து சென்று தடாகத்தில்
மூழ்கி இறந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு புனலூர் அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இச்சம்பவத்தை அடுத்து கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு
தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள வனத்துறைக்கு சொந்தமான இந்த அருவிப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
வைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு தனது கடமையில் தவறக்கூடாது கீழப்பாவூரில் வைகோ பேட்டி

vaiko - 2026

கீழப்பாவூர் ஒன்றியம் சென்னெல்தாபுதுக்குளத்தை சேர்ந்த மதிமுக மாநில சொத்து
பாதுகாப்பு குழு உறுப்பினர் விவி ராமசாமி. மற்றும் கீழப்பாவூர் திராவிட இயக்க
முன்னோடியும் நலிவுற்றோர் நலச்சங்க நிறுவனருமான பாவூர் நாவலர் ஆறுமுகநயினார்
ஆகியோர் உடல் நலக்குறைவு எற்பட்ட செய்தியை கேள்விப்பட்ட மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது. காவிரியில்
கர்நாடக அரசு ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்ட மதிப்பீடு செய்து மத்திய
அரசின் நீர்வள வள மையத்திடம் அனுமதி கோரியுள்ளது. மத்திய அரசும் இதற்கு
ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது. இது விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாக
கொண்டுள்ள தஞ்சை விவசாயிகளை மட்டுமல்லாது தமிழக விவசாயிகளை பெரிதும்
பாதிக்கும். 67.4.டி.எம்.சி தண்ணீர் இதில் தேக்கப் போகிறார்கள், பெருமழை
பெய்து வெள்ளம் வந்தாலும் கபினி,கிருஷ்ணசாகர்க்கு காவிரிக்கு ஒரு சொட்டு
தண்ணீர் கூடவராது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு விரோதமாக
செயல்படுகிறது ,தீர்ப்பாயங்களை கலைத்து விட்டு இனி ஒரே தீர்ப்பாயம் அமைப்பது
நமக்குத்தான் பெரும் நட்டமாகும் , ஒரே வரி,ஒரே நாடு என்கிறார் பிரதமர் மோடி

இதே போல் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின்
ஓ.என்.ஜிசி., நிறுவனம் மேலும் பல இடங்களில் எடுக்க முயற்சி செய்து வருகிறது.
உடனடியாக மக்களின் போரட்டத்திற்கு மதிப்பளித்து ஒஎன்ஜிசி நிறுவனம் வெளியேற
வேண்டும். கதிராமங்கலத்தில் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனே விடுதலை
செய்ய வேண்டும்.

உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழநெடுமாறன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில்
நானும் கலந்துகொள்கிறேன். சீமை கருவேல மரங்களால் நமது மண் வளம் முற்றிலும்
குறைந்து விட்டது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை
எடுக்கப்பட்டது. அதற்கு தற்கால தடை உள்ளது. இந்த வழக்கில் நானே வாதாடி
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றாமல் ஓய மாட்டேன்.
தமிழகதிற்கு எவையெல்லாம் ஆபத்து தருகிறதோ அதற்கெல்லாம் அதை தடுப்பதற்கு நான்
போராடுவேன்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்க்குள்
மீத்தேனை உள்ளே விடமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்தார் ,அப்படி ஒரு
நிலைபாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் . இதனை தடுக்க தனது கடமையிலிருந்து
தமிழக அரசு தவறக்கூடாது.

கூடன்குளத்தில் அனு உலை ஒன்று இரண்டே ஒழுங்காக வேலை செய்யவில்லை இந்நிலையில்
முன்று, நான்கு, ஐந்து, ஆறு, என அனு உலை பூங்கா என்ற திட்டத்தோடு தொடர்ச்சியாக
அனு உலைகளை நிறுவுவது பின்னாளில் நமக்கு பேராபத்தை ஏற்படுத்தும். ஓரே நாடு
ஒன்றுபட்ட இந்தியா என்று முழங்கும் மோடியின் பிஜேபி அரசு தமிழகத்தை
பாலைவனமாகவும் சுடுகாடாகவும் மாற்றும் துரோக செயலை செய்து வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இராசேந்திரன், மாநகர் மாவட்ட
செயலாளர், நிஜாம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கல்லத்தியான் மாவட்ட பொருளாளர்
ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கீழப்பாவூர் இராம உதயசூரியன்,
மருதசாமிபாண்டியன், ஆறுமுகசாமி, புதூர் ஆறுமுகம், கொம்பையாபாண்டியன், தங்கம்,
வேதநாயகம், கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்அறிவழகன், கீழப்பாவூர்
திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மகளிரணி ராசாத்தி உட்பட பலர் கலந்து
கொண்டனா;.

முன்னதாக பாவூர் நாவலரை சந்தித்த வைகோ தனது தாயார் மறைவின் போது நாவலர்
அனுப்பிய இரங்கல் கடிதம் குறித்து நினைவு கூர்ந்தார் ,பின்னர் சிறையில்
இருக்கும் போது சங்கொலி நாளிதழுக்கு எழுதிய 7 கடிதங்களை தனது உதவியாளர்
அருணகிரி புத்தகமாக தொகுத்து வருவதாகவும் நாவலரிடம் தெரிவித்தார் மேலும்
ஆரம்பகாலம் தொட்டு அவரோடு பழகிய அரசியல் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பின்னர்
வைகோவிற்கு கர்ம வீரர் காமராஜர் கவிதைகள் நூலைபாவூர் நாவலர் வழங்கினார்