Home Blog Page 5998

அதிரடி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் விழாக்காலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையசெய்ய ஐ.எஸ். தீவிரவாத சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகிறது என்றும் கடந்த சிலமாதங்களில் மட்டும் 40 வரையிலான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து உள்ளனர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை செய்தியை டெல்லி போலீஸ் உளவுத்துறை பிரிவு, டெல்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு உடனடியாக பரிந்துரை த்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி அக்டோபர் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், மத்திய போக்குவரத்து துறை செயலாளர் விஜய் ஷிப்பர் தலைமையில் இன்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

அதேசமயம் கடைசி முயற்சியாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் நாளை மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

எல்லைப்பகுதியில் மதில் சுவரா?: பாகிஸ்தான் கட்டுக்கதைக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா மதில் சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பொய்யை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் புகாராக அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த புகாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா, அப்படி எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட இந்தியா திட்டமிடவில்லை. சர்வதேச எல்லைக்கோட்டுப்பகுதி அமைந்துள்ள நிலபரப்பின் அடிப்படையில் அங்கு மதில் சுவர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை.

இது பாகிஸ்தானுக்கும் நன்றாக தெரியும். இருந்தும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் தேவையில்லாத, ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள முள்வேலிகள் சிதிலமடைந்து போய் உள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. மழையினால் வெள்ளம் ஏற்படும்போது சிதிலமடைந்த முள்வேலி வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்காக வேலிகளை சீரமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

தரமில்லாத பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஏமாற வேண்டாம் : தமிழக அரசு முதன்மை செயலாளர் அறிவுரை

ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார்.

விழாவில் தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் உணவு மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். விழா மலரை முதன்மை செயலர் கோபால கிருஷ்ணன் வெளியிட அதை ஆட்சியர் பெற்று கொண்டார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் சில மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தங்களது ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை வாட்ஸ் ஆப் போன்ற தொழில் நுட்பங்கள்மூலம், தெரிவிக்கலாம். சமீப காலமாக இணையதளம் மூலம் பொதுமக்கள் பொருட்களை பதிவு செய்து வாங்குகிறார்கள். இந்த பொருட்கள் பற்றிய தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுபோல இணைய தளம் மூலம் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

படித்தவர்கள் கூட செல்போனில் வரும் குறுந்தகவல்களை நம்பி பாங்கியில் உள்ள பணத்தை ஏமாறும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் அறிவுரை கூறினார்.

 

கண்ணீர் மல்க சாப்பாட்டுக்கு உதவி செய்ய ஆட்சியரிடம் மனு கொடுத்த சிறுவர்கள்

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் பற்றிய மனுக்களை கொடுத்தனர்.

ஈரோடு வி.சி.சி.ஆர். நகரை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் செந்தில்குமாரின் 2 குழந்தைகள் கலெக்டரிடம் மனு கொடுக்க புறப்பட்டனர். மகள் சவுமியா (வயது 14) 9–ம் வகுப்பு படிக்கிறாள். இவரது தம்பி தனுஷ் 6–ம் வகுப்பு படிக்கிறான்.

அக்கா–தம்பியான இவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு ஒரு ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ டிரைவரிடம், ‘‘அண்ணா கலெக்டர் ஆபீசுக்கு போகனும் எங்கப்பா குடிச்சிட்டு வர்ரார், சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது கிடையாது. இப்பகூட பசியில்தான் இருக்கோம்’’ என்று வேதனையுடன் கூறினர்.

இதைகேட்டு கண்கலங்கிய அந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளுக்கும் ‘‘சமோசா’’ வாங்கி கொடுத்து பசியாற்றினார். பிறகு அவர்களை ஆட்டோவில் ஏற்றி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு விட்டார்.

பிறகு அந்த சிறுவர்கள் நேராக குறைகள் கேட்டுக்கொண்டும், மனுக்கள் வாங்கி கொண்டிருந்த கலெக்டர் பிரபாகரிடம் கையில் மனுவுடன் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகம் உள்ளே வேதனை கலந்த முகத்துடன் 2 சிறுவர்கள் வருவதை கண்ட க ஆட்சியர்அலுவலக ஊழியர்கள் மிரட்சியுடன் இருந்தனர். கலெக்டரும் அந்த சிறுவர்களை பார்த்து ‘‘உங்களுக்கு என்ன குறை… ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கீங்க?’’ என்று பரிவுடன் கேட்டார்.

உடனே அந்த சிறுவர்கள் தாங்கள் எழுதி கொண்டு வந்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘‘நாங்க வி.சி.சி.ஆர். நகரிலிருந்து வருகிறோம். எங்கப்பா பெயர் செந்தில்குமார், அம்மா சாந்தி, அவங்களுக்கு உடம்பு சரியில்ல.. எங்கப்பா மாநகராட்சியில் வேலை பார்க்கிறார். அப்பா வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவார் வரும்போது குடி போதையில் வருவார். சாப்பாட்டுக்கு சரியா பணம் கொடுப்பது கிடையாது.

இதனால் பல நாட்கள் நாங்க பட்டினியா கிடக்கிறோம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது உதவி செய்யுங்க…’’ என்று எழுதப்பட்டிருந்தது.

சிறுவர்களின் இந்த உருக்கமான கடிதத்தை படித்ததும் ஆட்சியர் பிரபாகர் உடனடியாக சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்து ‘‘இந்த சிறுவர்களின் மனு மீது நடவடிக்கை எடுங்கள்’’ என உத்தரவிட்டார்.

சமூக நலத்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சிறுவர்களின் தந்தை செந்தில்குமாரை வரச்சொல்லி சமூகநலத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களை அராஜக சித்ரவதை செய்த தமிழக மில் நிர்வாகத்தினர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தொப்பம்பட்டி வாகரையில் தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். கூடுதல் நேரம் வேலை செய்யும் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போதிய வசதி செய்து கொடுக்காமல் கொத்தடிமை போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அங்கு வேலை செய்த அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த இளைஞர்கள் ரவீந்திரர் (வயது 25), ஸ்ரீராம் (19), மோகன்லால் (20) ஆகியோர் தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கி தொகை ரூ.16 ஆயிரத்தை கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மில் நிர்வாகத்தினர் அந்த இளைஞர்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வெளியே தள்ளியுள்ளனர். காயத்துடன் திருப்பூர் சென்று அங்கு வேலை செய்யும் உறவினர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் பழனிக்கு அழைத்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மில் நிர்வாகத்தினரின் அராஜகம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் : வழக்கறிஞர் மாளவியா

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இரண்டு வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செங்கோடு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி கணேசமூர்த்தி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும், விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு இரண்டையும் நாமக்கல் நீதிமன்றத்திற்க்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை ஏற்று இந்த வழக்குகள் நாமக்கல் நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பான ஆவணங்களை சி.பி.சி. ஐ.டி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம், 2 செல்போன்கள், கையடக்க கணினி, மடிக்கணினி ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடர்பாக சி.பி.சி. ஐ.டி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கோகுல் ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு அகிய இரண்டிலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக அவரது செல்போன் எண்ணை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். அவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியவர்கள் யார் – யார், என்ற பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அவர்கள் அனை வரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாகர் கோவிலைச் சேர்ந்த மதுரை நீதிமன்ற, வழக்கறிஞர் மாளவியா என்பவரும் விஷ்ணுபிரியாவிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருக்கிறார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாளவியாவை விசாரணைக்காக அழைத்திருந்தனர். விஷ்ணுபிரியாவின் நண்பரான மாளவியாவிடம் சேலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இது பற்றி வழக்கறிஞர் மாளவியா கூறயதாவது:–

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, பல்வேறு வழக்குகள் தொடர்பான பலமுறை என்னை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உயர் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், பொய் வழக்கு போடச் சொல்லி வற்புறுத்துவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

இந்த துறைக்கு வந்து எதனை செய்யக்கூடாது என்று நினைத்தேனோ, அதையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது என்றும் விஷ்ணுபிரியா கூறினார்.

கோகுல் ராஜ் விடுதலை வழக்கு மட்டுமின்றி, குமாரபாளையம் ஜெகநாதன் கொலை வழக்கிலும் தனக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் விஷ்ணுபிரியா தெரிவித்தார். இதுதவிர மாதம் தோறும் பணம் வசூல் செய்து கொடுக்கவும் சொல்லியும் விஷ்ணுபிரியாவை உயர் அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலமாக பண வசூல் செய்ய வேண்டும் என்றும், விஷ்ணுபிரியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சினைகளே அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகும். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கை திசை திருப்பினால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளோம் என வழக்கறிஞர் மாளவியா சி.பி.சி.ஐ.டி. போலீஸியிடம் கூறியுள்ளார்.

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கூட்டாளியிடம் போலீசார் விசாரணை

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கடந்த 21–ந்தேதி மும்பையில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டு அனுமதியுடன் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். சென்னை ஓட்டலில் தங்கி இருந்தபோது தன்னை கூட்டாளிகள் சந்தித்ததாக அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்தார்.

இந்த சந்திப்பின்போது உடன் இருந்த கூட்டாளிகளில் ஒருவரான பிரவீன், 2013 ஏப்ரல் 4–ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமீன் பெற்று மதுரையில் வசித்து வருகிறார். அட்டாக் பாண்டி வாக்குமூலம் உண்மை தானா என்பது குறித்து தற்போது பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணை அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது அட்டாக் பாண்டியும், பிரவீனும் சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை.

பிரவீனை தொடர்ந்து மற்ற கூட்டாளிகளிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கூட்டாளிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றபோதிலும், தற்போது அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்க உள்ளதால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் நம்புகிறார்கள்.

இலங்கை தமிழர்கள் கொலை செய்ய காரணமன காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க கட்சிகள் தான் குற்றவாளிகள் : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நாளைய தினம் தமிழ் இனத்துக்கு துக்க நாள். தமிழர்களின் தலையில் இடி விழும் துயர நாள். தமிழர்களின் சரித்திரத்தில் மாறாத கறுப்பு நாள். இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் ஐக்கிய நாடு சபை வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டது. நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம் சாட்டவில்லை. மனித உரிமை அமைப்புகளை குற்றம் சுமத்தவில்லை. அதில் உள்ள உறுப்பு நாடுகளை தான் குற்றம் சொல்கிறேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமர் தலைமையிலான மூவர் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி விரிவான அறிக்கை வெளியிட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட படுகொலைகள், இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடசேன் போன்றவர்கள் படுகொலைகள், 8 தமிழர்களை நிர்வாணமாக்கி கொலை, லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை, மருந்து, உணவின்றி தமிழர்கள் கொலை என அனைத்தையும் பட்டியலிட்டு இதுதொடர்பாக வெளிநாட்டு நீதிவிசாரணை தேவை என அறிக்கையில் கூறியிருந்தனர். மனித உரிமை ஆணையரும் தனது அறிக்கையில் இது குறித்து விரிவாக கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கே, மங்கள சமரவீரா ஆகியோர் தயாரித்து கொடுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு இந்த தீர்மானத்தில் இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திருத்தப்பட்ட தீர்மானத்தில் ராணுவம் தொடர்பான 3 பாராக்கள் நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விசாரணை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த தீர்மானம் விடுதலை புலிகளை மட்டும் விசாரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

2009–ல் கியூபாவும், இந்தியாவும் ஐ.நா.சபையில் இலங்கையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தது. அதே நிலைமை தான் தற்போதும் உள்ளது. நாளை கொண்டு வரும் தீர்மானத்தால் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. இந்திய அரசு தற்போது இப்பிரச்சினையில் நடுநிலை வகிக்க போவதாக கபட நாடகம் ஆடுகிறது. ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி போரை நடத்தியது. இந்த கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. ஆகியவை குற்றவாளிகள் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க 10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள். நமது பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே உறுதியோடு போராடுவோம் என வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை மூன்றே நாட்களில் விற்று புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துளது.

ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

இவை ஆப்பிள் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது சீனா உட்பட 9 நாடுகளில் மட்டுமே இந்த புதிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9-ந்தேதி இத்தாலி, மெக்ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தைவான் நாடுகளில் வெளியாகிறது.

இந்தியாவில் அக்டோபர் 16-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 130 நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே வாரத்தில் 1.3 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது