ஸ்மார்ட்போனின் எமனாக விளங்கும் ஜோக்கர் வைரஸ் பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது மீண்டும் பரவத் துவங்கியுள்ளது.
இந்த வைரஸ் ஸ்மார்ட்போனின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்களை பாதித்து அழிக்கும் சக்திக் கொண்டவை.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் 15க்கும் அதிகமான செயலிகள் மூலம் ஜோக்கர் வைரஸ் பரவி வருவதாக மொபைல் செக்யிரிட்டி சொல்யூஷன் தளமான ப்ராடியோ தெரிவித்துள்ளது.
ப்ராடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் 5 லட்சம் பேர் பயன்படுத்தி வரும் கலர் மெசேஜ் ஆப் சமீபத்தில் ஜோக்கர் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது முதற்கட்ட ஆய்வில் ஜோக்கர் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆப் ரஷ்ய சர்வர் உடன் இணைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கலர் மெசேஜ் செயலி எழுத்துக்களை எமோஜி வாயிலாகக் காட்டும் சிறிய சேவையை அளிக்கும் ஆப். கலர் மெசேஜ் செயலியில் ஜோக்கர் மால்வேர் இருக்கும் காரணத்தால் கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை நீக்கியுள்ளது.
இதேபோல் பல செயலிகள் ஜோக்கர் மால்வேர் முலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, இதன் குறிப்பிட்ட 7 செயலிகளை மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ப்ராடியோ தெரிவித்துள்ளது.
இதனால் கீழே கொடுக்கப்பட்டு உள்ள பட்டியலில் இருக்கும் ஆப்-கள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக நீக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
- Color Message
- Safety AppLock
- Convenient Scanner 2
- Push Message-Texting&SMS,
- Emoji Wallpaper
- Separate Doc Scanner
- Fingertip GameBox.
ஜோக்கர் வைரஸ் வரலாறு
2017 முதல் இணையதளத்தில் இருக்கும் இந்த ஜோக்கர் வைரஸ் சமீபத்தில் பல ஆன்டுராய்டு கருவிகளைப் பாதித்து முடக்கியதால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஜோக்கர் வைரஸ் ஆண்ட்ராய்டு உரிமையாளர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை, இந்த வைரஸை தடுக்கக் கூகுள் நிறுவனமும் பணியாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.