Home Blog Page 280

WC 2023: நியூஸின் படுதோல்வி! தென் ஆப்பிரிக்காவின் தாண்டவம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
28ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து
புனே – 01.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          தென் ஆப்பிரிக்க அணி (357/4, வான் டெர் டுஸ்ஸென் 133, டி காக் 114, டேவிட் மில்லர் 53, டிம் சௌதீ 2/77) நியூசிலாந்து அணியை (35.3 ஓவரில் 167, கிளன் பிலிப்ஸ் 60,  வில் யங் 33, டேரில் மிட்சல் 24, கேசவ் மஹராஜ் 4/46, மார்கோ ஜேன்சன் 3/31) 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          தென் ஆப்பிரிக்க அணியின் வான் டெர் டுஸ்ஸென் (133 ரன்), டி காக் (114 ரன்) இருவரும் அடித்த சதங்கள் மற்றும் டேவிட் மில்லர் அடித்த 53 ரன் ஆகியவற்றால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 357 ரன் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி ஆடத் தொடங்கிய பின்னர் நேரம் செல்லச் செல்ல தங்களது ரன் அடிக்கும் வேகத்தை அதிகரித்தனர்.

முதல் 10 ஓவர்களில் 43 ரன்; அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் 51 ரன்;  21 முதல் 30 ஓவர்களில் 61 ரன்; 31 முதல் 40 ஓவர்களில் 83 ரன்; 41 முதல் 50 ஓவர்களில் 119 ரன் என அந்த அணி ரன் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் க்விண்டன் டி காக் தனது நாலாவது சதத்தை அடிக்கிறார்.

ஒரே உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சதம் அடித்த பெருமை ரோஹித் ஷர்மாவுக்கு (2019 பொட்டியில் 5 சதங்கள்) உரியது. அதற்கு அடுத்த இடத்தில் 4 சதங்களோடு இலங்கையின் சங்ககரா, டி காக் இருவரும் உள்ளனர். ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்சர் (ஏழு ஆட்டங்களில் 78 சிக்சர்) அடித்த அணியாக தென் ஆப்பிரிக்க அணி விளங்குகிறது.

          பதிலுக்கு நியூசிலாந்து அணி ஆடவந்தபோது அவர்கள் முதலில் இருந்தே வெற்றிக்கான ஆட்டத்தை ஆடவில்லை. வில் யங் (33 ரன்), டேரில் மிட்சல் (24 ரன்), கிளன் பிலிப்ஸ் (60 ரன்) ஆகிய மூவரைத் தவிர மற்ற எவரும் இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை. தென் ஆப்பிரிக்கா வென்றது ஒரு ஆச்சரியமான விஷயமே இல்லை.

நியூசிலாந்து அணியின் தலைவர் லேதம் எதற்காக முதலில் பந்துவீசத் தீர்மானித்தார் என்பதே ஒரு பெரிய கேள்வி. இதில் காயம் காரணமாக வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை. நீஷம், ஹென்றி இருவரும் காயத்துடம் பேட் செய்ய வந்தனர். இறுதியில் 35.3 ஓவரில் நியூசிலாந்து 167 ரன் எடுத்து 190 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ஆட்டநாயகனாக வான் டெர் டுஸ்ஸென் அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் தோல்வி மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்பினை பிரகாசமாக்கியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகள் மற்று அதிக ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய, இலங்கை அணிகள் விளையாடுகின்றன.

பொதிகை எக்ஸ்பிரஸ் – முதல் WAP-7 மின்சார எஞ்சின் இயக்கம்

நவம்பர் ஒன்றாம் தேதி, புதன்கிழமை, இன்று முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இன்று மாலை, ஆறு இருபதுக்கு, செங்கோட்டையிலிருந்து, சென்னைக்குப் புறப்படும் பொதிகை அதிவேக ரயில், முதல் முதலாக செங்கோட்டையிலிருந்து சென்னை வரை, நடுவில் எஞ்சின் மாற்றமின்றி, மின்சார லோகோவால் இயக்கப்பட்டது. இதை முன்னிட்டு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று மாலை, ஐந்து முப்பதுக்கு, செங்கோட்டை ரயில் நிலையத்தின், முதல் நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர், ரோட்டரி, மற்றும் லயன்ஸ் சங்கங்களின் உறுப்பினர்கள், கலந்து கொண்டார்கள்.

மின்சார எஞ்சின் முகப்பில், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வடிவமைத்துள்ள, பேனர் ஒன்று கட்டப்பட்டது. மின்சாரக் கண்ணா, என்று குறிப்பிட்டு, மின்சார எஞ்சின் மூலமான இயக்கத்துக்கு, வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

முதல் மின்சார எஞ்சினின் லோகோ பைலட்டுகள், ரயில் நிலைய அதிகாரி, பயணச் சீட்டு பரிசோதகர் உள்ளிட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டன.

WC 2023: வங்கதேச அணியை வென்ற பாகிஸ்தான் அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
27ஆம் நாள் – வங்கதேசம் vs பாகிஸ்தான்
கொல்கொத்தா – 31.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          வங்கதேச அணியை (45.1 ஓவர்களில் 204, மகமத்துல்லா 56, லிட்டன் தாஸ் 45, ஷாகிப் அல் ஹசன் 43, ஹசன் மிராஸ் 25, ஷஹீன் ஷா அஃப்ரிதி 3/23, முகம்மது வாசிம் 3/31, ரவுஃப் 2/36) பாகிஸ்தான் அணி (32.3 ஓவரில் 205/3, அப்துல்லா ஷஃபீக் 68, ஃபகர் ஜமான் 81, முகம்மது ரிஸ்வான் 26*, ஹசன் மிராஸ் 3/60) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பந்தவீச்சு சரியான முறையில் அமைந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இது மிகவும் தாமதமாக நடந்துள்ளது.

ஷாஹீன் புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசினார். முதல் ஓவரிலேயே டான்சிட் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அவர், ஆடவர் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஆனார். அவரது இரண்டாவது ஓவரில் வங்கதேச வீரர் ஷண்டோவை கேட்ச் மூலம் அவுட்டாக்கினார். இதன் மூலம் வங்கதேச அணி 6/2 என்ற நிலைக்கு வந்தது.

இப்திகரும் சிறப்பாக பந்து வீசினார். ஹரிஸ் தொடக்க ஓவர்களில் பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். இது ஒரு நல்ல சகுனமல்ல. ஆனால் அவர் மீண்டும் பந்துவீச் வந்தபோது சிறப்பாக பந்துவீசினார்.

பவர்பிளேயில் முழுவதுமாக ஆடிய ஒரே வங்கதேச அணி வீரர் லிட்டன்தாஸ் மட்டுமே. அவரும் ஒரு குறுகிய ஆட்டத்திற்குப் பின்னர் அவுட்டானார். மஹ்முதுல்லா அவருக்கு ஜோடியாக ஆடினார். மற்றும் பங்களாதேஷை பாதுகாப்பை நோக்கி வழிநடத்தினார். கடினமான வேலைகளைச் செய்ய தன்னால் இயன்றவரை முயற்சித்த ஷகிப்பை சிறிது நேரம் அவர் போக்கிற்கு ஆட அனுமதித்தார். ஆனால் வங்கதேச அணியின் கடைசி வீரர்கள் ஷார்ட் பந்தில் வீழ்ந்தனர்.

வங்கதேச அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது.

          அதன் பின்னர் ஆட வந்த பாகிஸ்தான் அணி எளிதாக 32.3 ஓவரில் மூன்று விக்கட்டுக்கு 205 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் நான்காவது முறையாக பாகிஸ்தான் 100 பந்துகளுக்கு மேல் மீதமிருக்கையில் வெற்றி பெற்றிருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அந்த அணி இன்று சிறப்பாகச் செயல்பட்டது. இன்று அணிக்குத் திரும்பிய ஃபகார் ஜமான் 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். டாஸ்கின் பந்தில் அவர் அடித்த அந்த பயங்கரமான சிக்ஸர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. ஷபீக் தகுந்த ஆதரவை வழங்கினார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் 128 ரன்களை, ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதத்தில் எடுத்தனர். விக்கெட்டு எடுத்த  ஒரே பந்து வீச்சாளராக மெஹிடி இருந்தார். ஃபகரும் பாபரும் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று அவுட்பீல்டில் கேட்ச் ஆனார்கள். ஆனால் ரிஸ்வான், இப்திகார் இருவரும் இறுதிவரை ஆடி 32.3 ஓவரில் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.

          இந்த தோல்வியால் வங்கதேசம் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆட்டநாயகனாக ஃபகர் ஜமான் அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நாளை நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து புனேயில் விளையாடுகிறது.

செங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

நவ.1ம் தேதி, நாளை முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக, செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

அக்.31ம் தேதி, செவ்வாய்க்கிழமை, இன்று, பொதிகை அதிவிரைவு ரயில், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது, இன்றே கடைசி நாள் என்பதால், டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், கே எச் கிருஷ்ணன், சுந்தரம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, இஞ்சின் லோகோ பைலட்களுக்கு சால்வை அணிவித்து, கேக்கு, இனிப்புகள் வழங்கி, பாராட்டி, வழியனுப்பி வைத்தார்கள்.

நவ.1ம் தேதி நாளை முதல், பொதிகை, சிலம்பு மற்றும், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இடையில், என்ஜின் மாற்றம் ஏதுமின்றி, மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன.

அடுத்த வாரம் நெல்லை – மேட்டுப்பாளையம், மற்றும், செங்கோட்டை -மதுரை வண்டிகளும், மின்சார என்ஜின் மூலமாக, இயக்கப்பட உள்ளன.

கேரளப் பகுதிகளில், மின்சார இணைப்புப் பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம், சென்னை, கொல்லம், மதுரை, குருவாயூர் மதுரை ரயில்கள், வழக்கம் போல மதுரை வரை, டீசல் எஞ்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம், வேளாங்கண்ணி, எர்ணாகுளம் ரயில், வழக்கம் போல் இயங்கும். இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அக்.31ம் தேதி, இன்று முதல், சென்னை எழும்பூர் – செங்கோட்டை, பொதிகை எக்ஸ்பிரஸ், மின்சார எஞ்சினில் இயக்கப்படுகிறது.

நவ.1ம் தேதி நாளை முதல், செங்கோட்டை – சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மின்சார எஞ்சினில் முழுவதுமாக இயக்கப்படுகிறது.

இதுவரை, மதுரையில், டீஸல் எஞ்சின் மாற்றப்பட்டு வந்தது. அந்த நேரம் இனி மிச்சமாகும்.

உஷார்; அந்நிய நிறுவனங்களின் சதிவலை!

mumbai stock exchange
#image_title

தெகிடி என்றொரு படம். காப்பீடு செய்தவர்கள் சரியாக நாமினி பெயரை தராததால் அவர்களை கொன்று, அந்த பணத்தை ஒரு கூட்டம் தனாதாக்கிக்கொள்ளும். அருமையாக இருக்கும்.

கீழே உள்ள செய்திதான் பங்குச்சந்தையில் நடக்கும் வெள்ளை காலர் சூதாட்டம், சதிகள் இத்யாதி. எந்தெந்த வங்கிகள் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும், செய்கின்றன என்பதை அறிவுறுத்துகிறவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சொல்வார்கள். இவர்கள் அந்தந்த நிறுவனங்களில் குறைவான விலைக்கு முதலீடு செய்து வைப்பார்கள். வங்கிகள் முதலீடு செய்யத்தொடங்கும்போது இதன் விலை ஏறத்துவங்கும். ஒரு கட்டத்தில் நல்ல லாபத்துடன் சட்டென்று பின் வாங்கிவிடுவார்கள் அந்நியர்கள். உள்ளூர் ஆட்களுக்கு இந்த சாமர்த்தியம் இல்லை. இதே வேலையை அவர்கள் உள்ளூரிலேயே செய்யலாமே!

இங்கு கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள், அந்தந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்தியாவிடம் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு பற்றி பேசுங்கள் என்றார்கள். எல்லாரும் அனுமதி தந்தார்கள். இப்போது 20000 கோடியுடன் வெளியேறுகிறார்கள் என்று செய்தி. எவ்வளவு அடித்தார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள் என்று யாருக்கு தெரியும்?

இன்று வெளியான செய்தியைப் படியுங்கள். நாம் சொல்வது என்னவென்று புரியும்…


நடப்பு அக்டோபர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளிலிருந்து 20,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, வெளியேறியுள்ளனர். எனினும், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து, சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பு அக்டோபர் மாதத்தில், கடந்த 27ம் தேதி வரையிலான காலத்தில், 20,356 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இம்மாதம் முடிவடையும் போது இத்தொகை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பும், இஸ்ரேல் போர் காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலும் தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனினும், இதே காலகட்டத்தில், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 1ம் தேதி, அமெரிக்க பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் பிற உலக பொருளாதார முன்னேற்றங்களை பொறுத்தே, இனி வரும் காலங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அமையும்.

தற்போதைய சூழலில் தங்கம், அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான முதலீடுகளிலேயே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவர். இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளதாலும், இந்திய கடன் பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதால் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

— ஆனந்த் வெங்கட்

கொரோனா பாதிப்பால், இதய நோய், மாரடைப்பும் அதிகரித்துள்ளது; இரு வருட ஓய்வு அவர்களுக்கு தேவை!

covid and heartattack madavya - 2026
#image_title

அண்மையில் குஜராத்தில் கார்பா நடனம் ஆடிய இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்கள். அதற்கு முன்னும் கூட, அதாவது கடந்த இரு வருடங்களில், ஜிம்மில் பயிற்சி செய்த இளைஞர்கள், ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் / சிறுவர்கள், இப்படி திடீரென அதிக வேலை செய்து இதயத்தில் ரத்த ஓட்டம் கூடுதலாகி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அல்லது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததற்கும், கோவிட் தாக்கத்துக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இப்போது, இதனை மத்திய அமைச்சர் மாண்டவியா, மருத்துவ ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதிப்ப்படுத்தியிருக்கிறார். கொரோனா தீவிரமாகத் தாக்கப்பட்டு, ஆனால் அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் இருந்து தப்பித்து வந்தவர்கள், இது போன்று அதிக வேலைப் பளு, இதயத்தில் திடீர் அதிக அழுத்த இரத்த ஓட்டத்துக்கு உட்படுவோர், திடீர் மூச்சுத் திணறல் – இவற்றின் காரணத்தால் மரணம் அடைகின்றனர்.

“அண்மைக் காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்” என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பற்றிய விரிவான ஆய்வை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்:
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்களன்று, கடுமையான கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி செய்யும் போது அதிக உழைப்பையும், கடின உழைப்பிலிருந்து விலகியும் இருக்குமாறு அறிவுறுத்தினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வை மேற்கோள் காட்டி, அவர் தெரிவித்ததாவது…

“கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது; அவர்கள் தொடர்ச்சியான உழைப்பு, உழைப்பு ஓட்டம், உடற்பயிற்சி போன்றவற்றிலிருந்து குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு விலகி இருக்க வேண்டும், அதாவது ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள், இதனால் மாரடைப்பு தடுக்கப்படும்.” என்றார்.

மாண்டவியாவின் அறிக்கை பொதுவான ஆலோசனையாக இருந்தாலும், இதுவரை இதய நோய்களுடன் COVID19 இன் தொடர்பைப் பற்றி நாம் அறிந்து கொள்ள சில தகவல்கள் உள்ளன.

இதயநோய் நிபுணர்கள் கோவிட்-19க்கும் குறுகிய காலத்தில் ஏற்படும் இதய நோய்களுக்கும் இடையே ஒரு திட்டவட்டமான தொடர்பு இருப்பதாக நம்புகிறார்கள், குறிப்பாக குணமடைந்த நோயாளிகளில் இரண்டு மற்றும் மூன்று மாதங்களுக்குள் உருவாகிய உடல் நலம் சார்ந்த தகவல்கள் இவை.

அப்பல்லோ சிவிஎச்எஃப் ஹார்ட் இன்ஸ்டிடியூட் கார்டியாலஜி சர்வீசஸ் இயக்குநர் அகமதாபாத்தைச் சேர்ந்த இருதயநோய் நிபுணர் டாக்டர் சமீர் டானி கூறுகையில், “இதயத்தில் மட்டுமின்றி மற்ற இரத்த நாளங்களிலும் வாஸ்குலர் த்ரோம்போசிஸ் அல்லது உறைதல் போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சிறுநீரக நோயாளிகள் அடைப்பு ஏற்படுவதற்கு எந்த காரணமும் இல்லாதபோது, இரத்தக் கட்டிகள் இருப்பதைக் கண்டோம். பொதுவாக, குறுகிய தமனிகள் உள்ளவர்களுக்கு இரத்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. கோவிட்-19 வைரஸ் இரத்த உறைதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மருத்துவ நூல்கள் காட்டுகின்றன, இதில் உள் வாஸ்குலர் லைனிங் வீக்கமடைகிறது.

அறுவை சிகிச்சைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பைபாஸ் நோயாளியை டாக்டர் டானி நினைவு கூர்ந்தார். அவர் குணமடைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் இதயப் பிரச்சினைகளைப் பற்றி புகார் செய்தபோது, ​​அவரது பைபாஸ் கிராஃப்ட்ஸ் தோல்வியடைந்ததாக மருத்துவர்கள் முதலில் நினைத்தனர். அவர் ஆஞ்சியோகிராஃபியைப் பார்த்தபோது, பைபாஸ் கிராஃப்ட்ஸ் நன்றாக இருப்பதை உணர்ந்தார், ஆனால் புதிய அடைப்புகள் மற்றும் கட்டிகள் உருவாகியுள்ளன, இது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகளுக்கு மிகவும் அசாதாரணமானது. “எனவே இங்கு, 10-20 சதவிகிதம் முன்-பைபாஸ் அடைப்பு சுமார் ஆறு மாதங்களில் 90 சதவிகிதம் அடைப்புக்கு அதிகரித்தது” என்று டாக்டர் டானி கூறுகிறார், அவர் குறைந்தது மூன்று நோயாளிகளிடமாவது இந்த முறையைப் பார்த்தார்.

உலகெங்கிலும் உள்ள இருதயநோய் நிபுணர்கள் இன்னும் COVID-19 மற்றும் இதய நோய்க்கு இடையேயான சரியான தொடர்பை வரையறுத்து அளவிடவில்லை என்றாலும், ஒரு தொடர்பு இருப்பதாக டாக்டர் டானி கூறுகிறார். எவ்வாறாயினும், காய்ச்சலுடன் இதய நோய்களின் கடந்தகால தொடர்பு, காய்ச்சலின் வரலாற்றைக் கொண்டவர்கள் அதிக மாரடைப்பு அல்லது தோல்விகளை சந்தித்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதனால்தான் அனைத்து இதய நோயாளிகளும் காய்ச்சல் தடுப்பூசியை எடுக்குமாறு WHO பரிந்துரைக்கிறது.

டாக்டர் டானியின் கூற்றுப்படி, COVID-19 மன அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மாரடைப்புக்கான பிற காரணிகளைத் தூண்டியிருக்கலாம் அல்லது மோசமாக்கியிருக்கலாம். கூடுதலாக, COVID-19 இன் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்படுத்தப்பட்ட கவனிப்பு இல்லாததால், ஸ்டீராய்டுகள் மற்றும் பிற மருந்துகளின் விளைவுகளை அறிவது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டினார். “சிலருக்கு நூற்றுக்கணக்கான மில்லிகிராம் ஸ்டெராய்டுகள் ஒரு நாளைக்கு 6-8 மி.கி. பரிந்துரைக்கப்பட்டபோது கொடுக்கப்பட்டன, ஏனெனில் அச்சத்தின் காரணத்தால் மருத்துவர்களுக்கும், நோயைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை” என்றார் டாக்டர் டானி.

நீங்கள் ஒரு அசாதாரண செயலில் இறங்கினால், குறிப்பாக தீவிர உடற்பயிற்சி முறையை எடுத்துக் கொள்ளலாம்… அப்போது நீங்கள் சில சோதனைகளை எடுக்க வேண்டும். நவராத்திரியின் போது தாண்டியா அல்லது எந்த ஒரு ஆற்றல்மிக்க நடன வடிவத்திலும் ஒரு தீவிர உடற்பயிற்சி செயலாகவே அது கருதப்படும். “எந்தவொரு உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன், உங்கள் இதயத்தை முன்கூட்டியே பரிசோதிக்கவும், இதனால் உங்கள் இதய ஆரோக்கியத்தின் நிலையைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். அதற்கேற்ப உங்கள் உடற்பயிற்சி/செயல்பாட்டைத் தொடங்கி தரப்படுத்தலாம்,” என்கிறார் டாக்டர் டானி.

ஆரோக்கியமற்ற உணவு, உட்கார்ந்த நிலையிலேயே பொழுதைக் கழிக்கும் பழக்கவழக்கங்கள், தினசரி உடல் செயல்பாடு குறைதல், பழங்கள் மற்றும் காய்கறிகளின் போதிய நுகர்வு இன்மை ஆகியவற்றால், நமது வாழ்க்கை முறை நமது அபாய வரம்பை உயர்த்தியுள்ளது. கோவிட்-19 அதன் தாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது.

ஒரு பாலினத் திருமணம்: அமெரிக்கா தரும் படிப்பினைகள்!

159577 wedding day - 2026

வேதா டி. ஶ்ரீதரன்

ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் என்பது ஒரு வக்கிரமான சதி. (தீர்ப்பு முடிவல்ல, ஆபத்து காத்திருக்கிறது – துக்ளக் தலையங்கம் 1.11.2023)

சுமார் 75 வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த வக்கிரத்தின் பின்னணியில் வல்லரசுகளின் சதியும் உண்டு. கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பும் உண்டு. தற்போது மனித உரிமை என்ற பெயரில் இந்த வக்கிரம் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சுமார் இருபது ஆண்டுகளாக, பாரதம் போன்ற பண்பட்ட தேசங்களையும் குறி வைக்கிறது.

அமெரிக்கா தரும் படிப்பினைகள்

இந்த விஷயத்தில் அமெரிக்காவில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெறுவது நல்லது.

படிப்பினை 1:

1940கள் வரை அமெரிக்கச் சமுதாயத்தில் பெண்கள் வேலைக்குப் போவது குறைவு. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் கடமையைப் புறக்கணிப்பவர்களாகக் கருதப்பட்டார்கள்.

1950களில் சில ஹோமோசெக்சுவல்கள் (இந்தியாவில் தற்போது ஒலிப்பது போல) ‘எனது இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இல்லையா?’ என்று அமைப்பு ரீதியான போராட்டங்களைத் தொடங்கினார்கள். இவர்களுக்கு ரஷ்ய ஆதரவு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டக்காரர்கள் சோஷலிசம், சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் என்றெல்லாம் பேசிக்கொண்டு திரிந்தார்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் பெண்ணுரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார்கள்.

அதேநேரத்தில், இந்த இயக்கம் பெண்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. ‘இது ஆணாதிக்கச் சமுதாயம், இதில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்’ என்ற குரல்கள் பெண்கள் மத்தியில் ஒலிக்க ஆரம்பித்தன. ஹோமோசெக்சுவல்களுக்குப் போட்டியாகப் பெண்ணுரிமை இயக்கங்கள் தலைதூக்கின.

ஆரம்பத்தில், இந்த இயக்கங்கள் ஆண்-பெண் சமத்துவம் தேவை, பாலியல் ரீதியீலான பாகுபாடுகள் மறைய வேண்டும், ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம்தான் பேசி வந்தார்கள். காலப்போக்கில், ‘நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் ஆண் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை நாம் மணம் முடிக்கலாமா? அது தகாது. எனவே, நாம் பெண்ணும் பெண்ணுமாக இணைந்து வாழுவோம்‘ என்று ஆரம்பித்தனர்.

தற்காலத்தில் அமெரிக்கப் பெண்ணுரிமை இயக்கங்கள் என்றாலே அது லெஸ்பியன் இயக்கம் என்று ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த இயக்கங்களுக்குள் நடைபெறும் பாலியல் வக்கிரங்கள் பலரை முடமாக்கியுள்ளன.

இந்த லெஸ்பியன்கள் அனைவரும் ஏதோ தரங்கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, மிகவும் கண்ணியமான குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்களே என்பதுதான் மிகப்பெரிய ஷாக்கிங் சமாசாரம்.

இதுபோன்ற காரணங்களால், அமெரிக்கச் சமுதாயத்தில், ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் குடும்பம் என்ற கருத்து படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியது.

படிப்பினை 2:

பெண்ணியவாதிகளால் கவரப்பட்டு ஏராளமான அமெரிக்கப் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். தற்காலத்தில் வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள்  வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். வேலைக்குச் செல்லும் இதர பெண்களைவிட அவர்கள் அறிவுத்தரம் குறைந்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். சுயமரியாதை குறைந்தவர்களாகவும் பெண்ணாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படாதவர்களாகவும் மதிப்பிடப்படுகிறார்கள்.

இதனால், தனக்குப் பாரம்பரியமாக வாய்த்துள்ள தாய், மனைவி ஆகிய பொறுப்புகளை முழு மனதுடன் நிறைவேற்ற விரும்பும் பெண்களும்கூட தங்கள் முன்னே காத்திருக்கும் புதிய வாய்ப்புகள், வருமானம், சமுதாய அந்தஸ்து முதலியவற்றால் கவரப்படுகிறார்கள். இது அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. தங்களை அறியாமலேயே, அவர்கள் தங்கள் குழந்தைகளின் மூலம் தங்களுக்கு சமுதாய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொள்ளத் தலைப்படுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மிகச்சிறு வயதிலேயே பெரிய சாதனையாளர்களாக்கி, அவர்கள் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

பாவம், அவர்கள் சிறு குழந்தைகள். பெற்றோரின் அரவணைப்புக்குப் பதிலாக, குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல, அவர்கள்மீது பெரிய பெரிய சுமை ஏற்றி வைக்கப்படுகிறது. இதனால், அவர்கள் மீளவே முடியாத அளவுக்குப் பெரிய அளவில் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறார்கள்.

அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால், அமெரிக்காவில் பள்ளிப் பருவத்திலேயே பெரும்பாலானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதும், பள்ளிப் பருவத்திலேயே கருத்தரிப்பது சகஜமான விஷயமாகி விட்டது என்பதும் நம்மில் பலரும் அறியாத தகவல். இதுபோன்ற ஏராளமான பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் இத்தகைய குழந்தை வளர்ப்புதான்.

படிப்பினை 3:

ஏற்கெனவே, மேற்கத்திய சமுதாயம் தனிநபர் சுதந்திரத்தை மையமாகக் கொண்டது. அத்துடன் மட்டு மீறிய பெண் சுதந்திரமும் சேரவே, விவாகரத்துகள் எல்லை மீறின. அனேகமாக, அமெரிக்காவில் 50 சதவிகிதப் பிள்ளைகள் தங்களது முதல் பெற்றோரின் விவாகரத்தைப் பார்த்தவர்கள். சுமார் இருபத்தைந்து சதவிகிதம் பேர் தங்களது இரண்டாவது பெற்றோரின் விவாகரத்தையும் பார்த்தவர்கள்.

விவாகரத்து இவ்வளவு அதிகரித்த போதிலும், விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை வளர்ப்பது பெரும்பாலும் (சுமார் 75 சதவிகிதம்) தாயின் கடமையாகவே இன்னும் தொடர்கிறது. குடும்ப அமைப்பு அடியோடு பாதிப்படைந்து விட்ட அந்த நாட்டில்கூட, பெண் என்பவள் இன்னமும் தாயாகத்தான் இருக்கிறாள். அதேநேரத்தில் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம், குழந்தை வளர்ப்பு முதலான பல்வேறு காரணங்களால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இவைபோன்ற இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதென்றால், இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் ஆரம்பித்த விஷயம் தற்போது அமெரிக்கச் சமுதாயத்தை அதன் பாரம்பரியத்தில் இருந்து அடியோடு விலக்கி விட்டது. குடும்பம் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கேலிக்குரியவை ஆகிவிட்டன. பெரியோரின் வழிகாட்டுதலைச் செவிமடுக்கும் நிலையில் பிள்ளைகள் இல்லை. மொத்தத்தில் தற்போதைய அமெரிக்கக் குழந்தைகளுக்கு வாழ்க்கை முறையைச் சொல்லிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் என்று எதுவுமே இல்லை.

ஒரே பாலினத் திருமணத்துக்கு ஆதரவாக இந்தியாவில் குரல் கொடுப்பவர்கள் இங்கேயும் இத்தகைய நிலைக்கு வழிவகுக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

WC 2023: அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி 2023 – அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் எவை?

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          போட்டியை நடத்தும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தற்போதைய கிரிக்கெட் உலகக் கோப்பை தரவரிசையில் முக்கியமான முதல் நான்கு இடத்தில் உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைமையிலான பல அணிகள், குழு நிலையின் மீதமுள்ள ஆட்டங்களில் அரையிறுதி இடத்தைப் பறிக்கும் உண்மையான நம்பிக்கையைக் கொண்டுள்ளன.

அனைத்து 10 அணிகளும் இன்னும் நாக் அவுட் நிலைகளில் ஒரு இடத்தைப் பெறுவதற்கான வேட்டையில் உள்ளன, இதுவரை எந்த அணியும் கணித ரீதியாக வெளியேற்றப்படவில்லை. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கூட.

          அக்டோபர் 30 அன்று இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முக்கியமான வெற்றியைத் தொடர்ந்து விளையாட்டின் நிலை:

1. இந்தியா (ஆறு வெற்றி, தோல்வி இல்லை), அதிக ரன்கள்: ரோஹித் சர்மா (398 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா (14 விக்கெட்)

          ஆறு வெற்றிகளுடன் முதல்-நான்கு இடங்களில் முதலிடத்தைப் பெறும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சேஸ் மாஸ்டர் விராட் கோலி முன்னிலையில் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது தங்களின் முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். ஆனால் இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் புத்திசாலித்தனம் காரணமாக ஆறாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஆட்டங்கள்: இலங்கை (நவம்பர் 2), தென்னாப்பிரிக்கா (நவம்பர் 5), நெதர்லாந்து (நவம்பர் 12). மூன்றிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

2. தென்னாப்பிரிக்கா (ஐந்து வெற்றி, ஒரு தோல்வி), அதிக விக்கெட்டுகள்: குயின்டன் டி காக் (431 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: மார்கோ ஜான்சன் (12 விக்கெட்)

          தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக 400க்கும் அதிகமான ரன்களை உள்ளடக்கி, 300க்கு மேல் ரன்களை நான்கு முறை பெற்று, போட்டி முழுவதும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் தலைமையிலான ஒரு பேட்டிங் குழு மற்றும் ஒரு வெடிக்கும் மிடில் ஆர்டருடன், தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி இடத்திற்கான வாய்ப்பாக உறுதியாகத் தெரிகிறது. மீதமுள்ள ஆட்டங்கள்: நியூசிலாந்து (நவம்பர் 1), இந்தியா (நவம்பர் 5), ஆப்கானிஸ்தான் (நவம்பர் 10)

3. நியூசிலாந்து (நான்கு வெற்றிகள், இரண்டு தோல்விகள்), அதிக ரன்கள்: ரச்சின் ரவீந்திரன் (406 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: மிட்ச் சான்ட்னர் (14 விக்கெட்)

          கடந்த இரண்டு துடுப்பாட்ட உலகக் கிண்ணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணியானது, தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தைத் தோற்கடித்து, பின்னர் குறைந்த ஆர்வமுள்ள எதிரணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளைப் பெற்ற பின்னர், மற்றொரு அரையிறுதி வாய்ப்பைப் பெறுவதற்கு நன்கு இடம்பிடித்துள்ளது.

ஆனால், நியூசிலாந்துக்கு இன்னும் கடுமையான சோதனைகள் வரவுள்ளன. தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவிடம் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ஒரு அடி. ஆனால் பிளாக் கேப்ஸ் மிகப்பெரிய சேஸ்களை முயற்சிக்கும் திறன் கொண்ட பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.

உலகக் கோப்பை. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற நியூசிலாந்துக்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவை; குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான் வெற்றி. மீதமுள்ள ஆட்டங்கள்: தென்னாப்பிரிக்கா (நவம்பர் 1), பாகிஸ்தான் (நவம்பர் 4), இலங்கை (நவம்பர் 9)

4. ஆஸ்திரேலியா (நான்கு வெற்றிகள், இரண்டு தோல்விகள்), அதிக ரன்கள்: டேவிட் வார்னர் (413 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ஆடம் ஜம்பா (16 விக்கெட்).

          ஐந்து முறை சாம்பியனான இந்த அணி இரண்டு ஏமாற்றமளிக்கும் தோல்விகளுடன் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர், சற்று முனைப்போடு விளையாடுகிறது. அணியின் பேட்டர்கள் தலா ஒரு வலுவான இன்னிங்ஸுடன் ஃபார்ம் கண்டதால், மூன்று உறுதியான வெற்றிகளைப் பெற்றனர், அதே நேரத்தில் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.

நியூசிலாந்திற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஆணி-துடிப்பான வெற்றி, மீண்டும் ஒருமுறை புதிய இரத்தம் பாய்ச்சியது. கடைசி வெற்றி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் சுற்றுக்கு ஒரு கால் வைத்துள்ளது, பரம எதிரியான இங்கிலாந்து அணியை அடுத்து சந்திக்க உள்ளது. மீதமுள்ள ஆட்டங்கள்: இங்கிலாந்து (நவம்பர் 4), ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), பங்களாதேஷ் (நவம்பர் 11)

5. ஆப்கானிஸ்தான் (மூன்று வெற்றிகள், மூன்று தோல்விகள்), அதிக ரன்கள்: ஹஷ்மத் ஷாஹிடி (226 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ரஷித் கான் (ஏழு)

          ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் நன்றாக இருக்கிறது, ஆனால் அவர்கள் அதைச் செய்ய வேண்டுமென்றால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியிருக்கும். முதல் நான்கு பேர் அனைவரும் பேட்டிங்கில் சிறந்த நிலையில் உள்ளனர், அதே நேரத்தில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி மற்றும் நூர் அஹ்மத் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு போட்டியின் வெவ்வேறு கட்டங்களில் எதிரணி பேட்டர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் ஏழு விக்கெட் வெற்றி அவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.  மீதமுள்ள ஆட்டங்கள்:  நெதர்லாந்து (நவம்பர் 3), ஆஸ்திரேலியா (நவம்பர் 7), தென் ஆப்பிரிக்கா (நவம்பர் 10)

6. இலங்கை (இரண்டு வெற்றி, நான்கு தோல்வி), அதிக ரன்கள்: சதீர சமரவிக்ரம (331 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: தில்ஷன் மதுஷங்க (13 விக்கெட்)

          போட்டிக்கு முந்தைய காயங்கள் மற்றும் முதல் மூன்று வாரங்களில் இந்தியாவில் ஏற்பட்ட காயங்கள் 1996 சாம்பியன்களுக்கு இப்போட்டியை கடினமாக்கிவிட்டது. நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இல்லாததால் மஹீஷ் தீக்ஷனா மீது பெரும் பொறுப்பை வந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் வெற்றி இலங்கையின் நிகர ஓட்ட விகிதத்தில் ஏற்பட்ட ஆரம்ப சேதத்தை பெருமளவில் சரிசெய்தது.

அரையிறுதி வாய்ப்புக்கான அவர்களின் நம்பிக்கையை அப்படியே வைத்திருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது, மேலும் பிழைக்கு சிறிய இடமளிக்கிறது, இறுதி நான்கிற்கு வருவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தக்கவைக்க, அடுத்த போட்டியை நடத்தும் இந்தியாவுடன் போட்டி உட்பட, மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியிருக்கும். மீதமுள்ள ஆட்டங்கள்: இந்தியா (நவம்பர் 2), பங்களாதேஷ் (நவம்பர் 6), நியூசிலாந்து (நவம்பர் 9)

7. பாகிஸ்தான் (இரண்டு வெற்றி, நான்கு தோல்வி), அதிக ரன்கள்: முகமது ரிஸ்வான் (333 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ஷஹீன் அப்ரிடி (13 விக்கெட்)

          இரண்டு விரிவான வெற்றிகளுடன் தங்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, பின்னர் சரிவில் விழுந்தது. இப்போது நாக் அவுட் நிலைகளை இழக்கும் விளிம்பில் இருக்கின்றது. இந்திய அணியிடம் பெற்ற தோல்வி எப்போதும் கடினமானது. அதே வேளையில், ஆப்கானிஸ்தானிடம் பெற்ற தோல்வி பாகிஸ்தானுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கக்கூடும்.

1992 சாம்பியன்கள் சென்னையில் வளர்ந்து வரும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டபோது மூன்று போட்டிகளின் தொடர் தோல்வியை முறியடித்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த ஒரு விக்கெட் இழப்பினால் மீதமுள்ள மூன்றில் இருந்து மூன்று வெற்றிகள் தேவை மற்றும் இறுதி நான்கிற்குள் நுழைவதற்கு நிறைய அதிர்ஷ்டம் தேவை. மீதமுள்ள ஆட்டங்கள்: பங்களாதேஷ் (அக்டோபர் 31), நியூசிலாந்து (நவம்பர் 4), இங்கிலாந்து (நவம்பர் 11)

8. நெதர்லாந்து (இரண்டு வெற்றி, நான்கு தோல்வி), அதிக ரன்கள்: ஸ்காட் எட்வர்ட்ஸ் (204 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: பாஸ் டி லீடே (11 விக்கெட்)

          ஆஸ்திரேலியாவுடனான மோசமான தோல்வி, நெதர்லாந்தின் இந்தியாவில் அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இனி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் நுழைவது கடினம் மீதமுள்ள ஆட்டங்கள்: ஆப்கானிஸ்தான் (நவம்பர் 3), இங்கிலாந்து (நவம்பர் 8), இந்தியா (நவம்பர் 12)

9. பங்களாதேஷ் (ஒரு வெற்றி, ஐந்து தோல்விகள்), அதிக ரன்கள்: மஹ்முதுல்லா ரியாத் (218 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ஷகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம் (தலா எட்டு விக்கெட்)

          ஆசிய அணி 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றியுடன் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இப்போது நெதர்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. அதனால்  அரையிறுதி நம்பிக்கைகள் அனைத்தும் அணைந்துவிட்டன. மீதமுள்ள ஆட்டங்கள்: பாகிஸ்தான் (அக்டோபர் 31), இலங்கை (நவம்பர் 6), ஆஸ்திரேலியா (நவம்பர் 11)

10. இங்கிலாந்து (ஒரு வெற்றி, ஐந்து தோல்விகள்), அதிக ரன்கள்: டேவிட் மலான் (236 ரன்கள்), அதிக விக்கெட்டுகள்: ரீஸ் டாப்லி மற்றும் அடில் ரஷித் (எட்டு விக்கெட்)

          இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு அதிகம் சரியாகப் போகவில்லை, பந்து வீச்சாளர்கள் தங்கள் தொடக்க ஆட்டங்களில் தவறாகப் பந்துவீசினார்கள். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. பங்களாதேஷுக்கு எதிராக அவர்களின் ஒரே வெற்றி இதுவரை கிடைத்துள்ளது. அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு ஏறத்தாழ இல்லை. மீதமுள்ள ஆட்டங்கள்: ஆஸ்திரேலியா (நவம்பர் 4), நெதர்லாந்து (நவம்பர் 8), பாகிஸ்தான் (நவம்பர் 11)

WC 2023: அசத்திய ஆப்கன் அணி! அரண்டு போன இலங்கை!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
26ஆம் நாள் – இலங்கை vs ஆப்கானிஸ்தான்
புனே – 30.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இலங்கை அணியை (49.3 ஓவர்களில் 241, பதும் நிசாங்கா 46, குசல் மெண்டிஸ் 39, சமரவிக்ரமா 36, அசலங்கா 22, ஆஞ்சலா மேத்யூஸ் 23, தீக்ஷனா 29, ஃபரூக்கி 4/34, முஜிபுர் ரஹ்மான் 2/38) ஆப்கானிஸ்தான் அணி (45.2 ஓவரில் 242/3, ஒமரசி 73*, ரஹ்மத் ஷா 62, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 58*, இப்ராஹிம் சத்ரன் 39, மதுஷங்கா 2/48) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் 241 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இலங்கையின் இன்னிங்ஸ் சற்றுக் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

முதல் பந்திலிருந்தே அற்புதமாக பந்துவீசி இதைச் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் பெருமை போய்ச்சேரும்.  நல்ல தொடக்கங்களை கணிசமான ஸ்கோராக மாற்ற முடியாமல் இலங்கை திணறியது. ஃபசல்ஹக் ஃபாரூக்கி புதிய பந்தில் அற்புதமாக பந்துவீசினார், அதே போல் கடைசி ஓவர்களிலும் அனல் பறக்கவிட்டார். சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் போல் சிறப்பாக இருந்தனர், முஜீப் தனது ஆட்டத்தில் சிறந்து விளங்கினார், மொத்தத்தில் இது ஒரு முழுமையான பந்துவீச்சு செயல்திறனாக இருந்தது.

          பதும் நிசாங்கா 46 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோராக உள்ளார். ஆனால் அவர் கியர்களை மாற்ற முயற்சித்த போது, ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் நம்பிக்கைக்குரிய தொடக்கங்களைப் பெற்றனர்,

ஆனால் அழுத்தம் இடைவிடாமல் இருந்ததால், முக்கியமான தருணங்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அனுபவமிக்க வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோருக்கு இடையேயான ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் இலங்கைக்கு சற்று உதவியது.

          ஆப்கானிஸ்தான் அணி 242 ரன் என்ற இலக்கை அடைய துல்லியமான மற்றும் தொழில்முறை முறையில் அணுகினர். முன்னதாக, அவர்கள் பதற்றத்தில் விரைவாகவே அதிரடி ஆட்டத்தை ஆட நினைத்து அதிக ஆபத்தான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதனால் அடிக்கடி கொத்தாக விக்கெட்டுகளை இழப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த உற்சாகமான அணியில் புதிய அமைதி மற்றும் தன்னம்பிக்கை உணர்வு உள்ளது. மேலும் அவர்கள் பலவீனமாக அடிபணியும் அணி அல்ல என்பதை பிறருக்கு உணர்த்தியுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் தேவையான போது நிதானத்தை வெளிப்படுத்தியது மற்றும் நிலையான ரன் ரேட்டையும் பராமரித்தது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் அற்புதமான நிலைத்தன்மை உடைய அணியாக மாறியிருக்கிறது.  

          தொடக்க வீரர் குர்பாஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தபோதும், அதன் பின்னர் இப்ராஹிம் சத்ரன் (39 ரன்), ரஹ்மத் ஷா (62 ரன்), ஹஸ்மத்துல்லா ஷஹீதி (ஆட்டமிழக்காமல் 58), அஸ்மத்துல்லா ஒமரசி (ஆட்டமிழக்காமல் 73) என சிறப்பாக ஆடி ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர். ஃபசல்ஹக் ஃபாரூக்கி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          அனைத்து அணிகளும் ஆறு ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில் இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து-8 புள்ளிகள்-3ஆம் இடம், ஆஸ்திரேலியா-8 புள்ளிகள்–4ஆம் இடம், ஆப்கானிஸ்தான்-6 புள்ளிகள் -5ஆம் இடம், இலங்கை-4 புள்ளிகள் -6ஆம் இடம், பாகிஸ்தான்-4 புள்ளிகள் -7ஆம் இடம், நெதர்லாந்து-4 புள்ளிகள் -8ஆம் இடம், வங்கதேசம்-2 புள்ளிகள் -9ஆம் இடம், இங்கிலாந்து -2 புள்ளிகள் -10ஆம் இடம் வகிக்கின்றது.

மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் பலி: 20 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்.20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20231030 WA0209 - 2026
#மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மினி பஸ் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிரைவர், கண்டக்டர் உட்பட பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய விபரம்

வத்திராயிருப்பிலிருந்து வ. புதுப்பட்டிக்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மினி பஸ் இயங்கி வருகிறது. நேற்று மாலை 4.45 மணியளவில் வத்திராயிருப்பிலிருந்து புறப்பட்டு புதுப்பட்டி நோக்கி சென்றது. பஸ்ஸில் வத்திராயிருப்பு பள்ளிகளில் படிக்கும் வ.புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் 30 பேர் உள்ளே இருந்தனர்.

பஸ் அர்ச்சுனாபுரத்தை கடந்து கிறிஸ்டியான் பேட்டை என்ற ஊரை நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த போதர்குளம் கண்மாய் வளைவில் திரும்பிய போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி மிகவும் பள்ளமாக இருந்த தோப்பிற்குள் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வ.புதுப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் பாண்டி, நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். டிரைவர் கண்டக்டர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கிறிஸ்டியன் பேட்டை பொதுமக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்த பயணிகளை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கும் படுகாயம் அடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த மாணவர்களின் உடல்களை பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அம் மாணவர்களின் உறவினர்கள் பஸ் உரிமையாளரை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி முன்பாக கூமாபட்டி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். காயமடைந்தவர்களில் சிபின் லூர்துராஜ் என்ற மாணவர் மிகவும் படுகாயமுற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமித்ரா தேவி பாண்டீஸ்வரி ராஜ்குமார் லாவண்யா முத்துக்குமார் ராஜேஷ், மீராதேவி உட்பட 16 மாணவர்களும் மற்ற பயணிகளும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்ஸில் புதிதாக வாகனம் ஓட்டும் பயிற்சி டிரைவர்களை மட்டுமே நியமிக்கின்றனர் அதன் உரிமையாளர்கள். ஏற்கனவே இந்த ரோடு மிகவும் குறுகலாக ஆபத்தானதாக உள்ளது. ஒரு பஸ் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் பயிற்சி டிரைவர்கள் அடிக்கடி இந்த வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் இது தெரிந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை இதனால் தான் இந்த கோர விபத்து நடந்தது என்றனர்.

பஸ் மின்கம்பத்தில் மோதியபோது இயற்கையாக அங்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்நேரம் மின் சப்ளை இருந்திருந்தால் பஸ் மீது விழுந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் மின்சாரம் தாக்கி மொத்த பயணிகளும் உயிர் தப்பி இருக்க முடியாது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசார் தெரிவித்தனர்.