Home Blog Page 357

பிரான்ஸ்: கலவர பூமியான காதல் தேசம்!

france violence - 2026

“ஜெய் ஹிந்த்” ஸ்ரீராம்

ஐ லவ் பாரிஸ் என்பது தான் அழகுணர்ச்சி கொண்ட அனைவரது வாக்கியம். ஆனால் இன்று அப்படி அல்ல. அதற்கு காரணம் கடந்த மாதம் 27 தேதி நடந்த சம்பவம்.

இஸ்லாமிய இளைஞன் ஒருவனை பிரெஞ்சு போலீசார் சுட்டுக் கொன்றதால் கலவரம் காட்டுத் தீ போல பரவி பலரது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது! மற்ற நாடுகளின் கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது. பிரான்ஸின் தலைநகர் பாரீஸ்! என்ன நடக்கிறது அங்கே? யார் காரணம்? அல்லது எது காரணம்?

இது அவசியமா என்றால்…?! நம் இந்திய தேசம் எப்படி அந்நாளில் அடிமை தேசமாக மாறியது என்பதனை அறிந்திட இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு புரிந்து கொள்ள இது உதவும்.

பொதுவாக பிரான்ஸ் இன்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தீண்டத்தகாத தேசமாகப் பார்க்கும் அளவிற்கு மாறி நிற்கிறது. அதற்குக் காரணம் அகதிகள்.

அதனை இப்படியும் பார்க்கலாம். வந்தாரை வாழ்வித்த பூமி, கலங்கி நின்று கடல் கடந்து வந்தவர்களை வாரி அணைத்து அரவணைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே இடம் பிரான்ஸ் மட்டுமே! இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு! இன்றைய நிலைமையோ உலகம் அறிந்த ஒன்று!

பூகோள ரீதியாக பிரான்ஸுக்கு நேர் தெற்கில் வட ஆப்பிரிக்கா தேசங்களில் வாழும் மக்களின் கண்களுக்கு இவர்கள் சுக போகங்களில் திளைக்கும் மக்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இவர்களின் படாடோபமான வாழ்க்கை முறை, கடின உழைப்பாளிகளான அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என கருதுகிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள்!

போதாக்குறைக்கு, இரண்டாயிரமாவது ஆண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வும் ஓர் காரணியாக பார்க்கப்படுகிறது. டாலருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொண்டு வந்த யுரோ கரன்சியும், அதை தொடர்ந்து வந்து பிரிக்ஸ் கூட்டமைப்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகப் பெரிய அளவிலான இன்றைய ஸ்திரத்தன்மையின்மைக்கு மிக முக்கியமான காரணம் என்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொதுவான கரன்சி, பொதுவான விசா நடைமுறை என இவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமாச்சாரங்களுக்கு அந்நாளில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது! ஆனால் அதனையே பயன்படுத்தி மற்ற இடங்களில் உள்ளவர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளே நுழைந்து விட்டதுதான் பெரிய தலைவலியாகிப் போனது.

சூடானிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இலங்கை மக்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெயர்ந்தது இந்த நேரத்தில் தான்! இங்கிலாந்து முழுவதும் உள்ள சர்ச்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்களின் வசம் ஆனபோது தான் இங்கிலாந்து விழித்துக் கொண்டு விழி பிதுங்கி நின்றது. முதல் காரியமாக பிரிக்ஸ்-ஐ விட்டு வெளியேற அங்கு உள்ள மக்கள் போராட்டம் எல்லாம் நடத்தி பிய்த்துக் கொண்டு ஓடினார்கள்.

மழை விட்டாலும் தூவானம் விடாத குறையாக இன்னமும் அங்கு பிரச்னை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்து பொருளாதாரம் இஸ்லாமிய சமூகத்தின் கைகளில் சிக்குண்டு கிடக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!

அதன் அடுத்த தேசமாக உள்ள பிரான்ஸின் நிலைமை தான் கவலைக்கிடமாக உள்ளது. பிரான்ஸின் சேவை சார்ந்த வேலைகளில் அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த இன்றைய இளம் தலைமுறையினர் தான் பிரான்ஸுக்கு பெரும் தலைவலியாக மாறி நிற்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை.

இவர்களுக்கு கொள்கை கோட்பாடுகள் இல்லை. மதத்தின் மீது பெரிய அபிமானம் இல்லை. இருப்பினும் இவர்களுக்கு மற்றவர்கள் தங்களை விலக்கி வைத்து இருப்பதாக, சம அந்தஸ்து கொடுக்காமல் கொடுமைப் படுத்துவதாக உளவியல் பூர்வமாக நம்புகிறார்கள். இவர்களைப் பிடித்து மூளைச் சலவை செய்ய ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது. பகட்டும் படடோபமும் இவர்களைப் பிடிக்க பகடை காய் ஆகிறது.

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் கார்தான் இதற்கான தூண்டில். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இவர்களின் இலக்கு. அவர்களின் நோக்கம் அதாவது இதனை முன்னெடுப்பவர்களின் நோக்கம்- போதை வஸ்துக்களை பிரான்ஸ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அதன் மூலம் அதிகப்படியான யூரோக்களை வாரிக் குவிப்பதும் தான் அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

சிக்கும் விட்டில் பூச்சிகளை இதற்கு தயார் படுத்துகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளைச் செய்கிறார்கள். யாரோ எங்கோ உட்கார்ந்து கொண்டு நீ அடிமைத்தளைகளை உடைத்தெறிய செல்வச் செழிப்புடன் விளங்கும் பிரெஞ்சு மக்களை உன் இலக்காகக் கொள் என விடாமல் பிரசாரம் செய்ய, இவர்களும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆட்டம் ஆடத் தொடங்குகிறார்கள்.

கடந்த மாதம் 27ம் தேதியன்று அது போலான ஒரு சம்பவம் தான் நடந்தது என்கிறார்கள்!

பிரெஞ்சு போலீசார் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டு வந்த சமயத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிற்காமல் அதி வேகத்தில் அவர்களைக் கடக்க முற்பட, பயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்கிறார்கள். நிற்காமல் போனால் சுடுவார்களா என விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு… இதே போன்ற நிகழ்வு ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 தேதியன்று நடந்ததை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு டிரக் டிரைவர் நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் ஜன சந்தடி நிறைந்த இடத்தில் அதி வேகமாக தனது வாகனத்தை இயக்கி 86 பேரைக் கொன்று கிட்டத்தட்ட 437 வரை பேர் வரை காயம் ஏற்படுத்திய அந்த நிகழ்வை நினைவு படுத்திக் கொண்டு பாருங்கள் என்கிறார்கள்!

இந்த நிகழ்வுக்குப் பின்னர் பிரெஞ்சு போலீசாருக்கு அழுத்தம் அதிகம்தான்! சம்பவ தினத்தன்று 17 வயது நஹல் மசூக் எனும் டெலிவரி வேலை பார்க்கும் நபரை நிறுத்தச் சொல்லியும் கேட்காமல் அதிவேகத்தில் தனது காரை இயக்க, போலீசார் வேறு வழியின்றி சுட வேண்டியிற்று. அந்தப் பையன் தரப்பில் விசாரணையின்போது தான் ஏற்கெனவே இதே போன்ற ஒரு சம்பவம் நடந்து, லைசென்ஸ் உரிமம் இல்லை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தது தெரிய வந்திருக்கிறது. பிரான்ஸில் ஓட்டுநர் உரிமம் பெற நம்மூர் போல பதினெட்டு வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்கிறது அங்கு உள்ள சட்டம்.

சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை உண்டு அங்கு! அதனாலேயே பயத்தில் வாகனத்தை நிறுத்தாமல் மசூக் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நஹல் மசூக் குடும்பத்தினர் அல்ஜீரியாவை சேர்ந்தவர்கள். அகதிகளாக அல்லது தொழிலாளர் விசாவில் பிரான்ஸில் குடியேறியவர்கள். அப்படி என்றால் மசூக் ஒட்டி வந்த விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்?

அவனுடையது தான் என்கிறார்கள். ஏது இது அவனுக்கு? யார் கொடுத்தது? எதற்காக, அல்லது என்ன வேலைக்காக? எனக் கேட்க தெரியாது என்கிறார்கள் அந்தக் குடும்பத்தினரே. அவனிடம் தாங்கள் கேட்டதற்கும் பதிலே சொல்லவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள் விசாரணையின் போது. அதேசமயம் தங்கள் குடும்பத்தினரை மசூக் அளவு கடந்து நேசித்திருக்கிறான். ஒழுக்கம் நிறைந்தவன் என்கிறார்கள்.

அவன் குணம் அறிந்த அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொங்கி எழுந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்று நினைத்தால் அதுவும் தவறு. இத்தனைக்கும் இந்தக் கலவரம் நடந்த சமயத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி, மசூக் குடும்பத்தினர்தான் பெருமளவில் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக போலீசார் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

சரி நடந்த கலவரத்திற்கு யார் காரணம்?

ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கை காட்டுகிறார்கள். இதே போன்று தான் சில பல மாதங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தின் கார்டூனை கல்லூரியில் வைத்துப் பேசியதாகச் சொல்லி ஒரு பேராசிரியரைக் கொடூரமாகக் கொன்றது நினைவிருக்கலாம். அந்தச் சம்பவத்திலும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதாவது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது! ஆனாலும் பெரிய அளவில் நடவடிக்கைகள் இல்லை. எடுக்கவும் முடியவில்லை!

மாக்ரோன் தலையைப் பிய்த்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டு இருக்கிறார், அங்குள்ளவர்களை சமாதானப் படுத்த! ஆனாலும் காரியங்கள் கை மீறிச் சென்று கொண்டு இருக்கிறது! உதாரணமாக இந்தக் கலவர சமயத்தில் ஒரு ஆப்பிள் ஸ்டோரை முற்றுகை இட்டு முற்று முழுதாகக் கொள்ளையடித்து விட்டு சென்று இருக்கிறது ஒரு கும்பல்! அவர்களில் பலரும் இஸ்லாமியரும் இல்லை, அதேபோல் பிரெஞ்சு பிரஜைகளைப் போலவும் இல்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.

பதாகைகள் பிடித்து ஊர்வலம் வந்த பலரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் அவர்களின் நோக்கமோ வேறுவிதமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் சுமார் 8% மக்கள் தொகையில் இருக்கும் தங்களுக்கு சரியான மதிப்பு இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அதேசமயம் வேறோர் புள்ளி விவரம் 19% விழுக்காடு விகிதத்தில் பிரான்ஸில் இஸ்லாமிய சமூகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று பயமுறுத்துகிறார்கள்‌.

நம் இந்திய தேசத்தில் 8.5%த்தில் இருந்து 13% வரையிலும் கடந்த பத்து ஆண்டுகளில் 17% அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது இஸ்லாமிய சமூகம். (நன்கு கவனியுங்கள் இவை பொதுவான இந்திய மக்கள் தொகை பற்றிய தகவல்கள் அல்ல) இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா என்றால் அது தான் இல்லை. அவர்கள் அப்படி இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் (இஸ்லாமியர்) வளர்ச்சி விகிதம் 3.2% மட்டுமே என அதிர்ச்சி தரும் ஆய்வுகள் எல்லாம் நம்மிடமும் உண்டு என்பதை இந்த தருணத்தில் மறவாதீர்கள். அப்படி என்றால்?

பிரான்ஸில் நடைபெறும் விஷயம் உலகிற்கு ஒரு பாடம்! நமக்கும் இது குறித்தான ஒரு பொது பார்வை வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட. காலங்காலமாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களை விட புதியதாக உள்ளே வந்தவர்களிடம் தான் அத்தனை அரசு ஆவணங்கள் ஆகச் சரியாக இருக்கின்றன என்பதை இந்த தருணத்தில் உணர வேண்டும். இவர்கள் நமக்கு வரமா சாபமா? தெரியாது. ஆனால் இருக்கின்ற இந்த தேசம் நமக்கு சொர்க்கமானது. நமக்கு இருக்கும் ஒரே சொந்தமும் கூட. மற்றவர்களுக்கு அப்படி அல்ல. அதுதான் இதிலுள்ள வித்தியாசம். வேறென்ன சொல்ல இருக்கிறது?

மக்களின் மனத்தில் வாழும் மகான்: சுவாமி விவேகானந்தர்!

vivekananda swami - 2026

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இளவயது முதலே தியானம் பழகினார்.

vivekananda quote1 - 2026
vivekananda quote1

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார்.

vivekananda quote12 - 2026
vivekananda quote12

இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலம். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப்பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

vivekananda rock temple - 2026
vivekananda rock temple

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில், அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

vivekananda quote 1 - 2026
vivekananda quote 1

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

vivekananda quote - 2026
vivekananda quote

கல்கத்தாவில் இராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

vivekananda quote2 - 2026
vivekananda quote2

‘காடப்புறா கலைக்குழு’ இன்னொரு ‘கரகாட்டக்காரன்’ ஆகுமா?

kadapura - 2026

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.

வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில், தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது…
எங்கள் விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது. ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் இன்பா பேசியதாவது…
இந்தப் படம் ஒரு முக்கிய கலைப்படைப்பு , நீண்ட நாள் இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்றது, நாம் அனைவரும் பழைய கலைகளை மறந்து கொண்டு வருகிறோம் , இந்தப் படம் நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்குத் தேவை நன்றி,

ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி பேசியதாவது..
இந்தப்படம் கலை இயக்குநர் சொன்னது போல் ஒரு நல்ல கலை நோக்கத்துடன் எடுத்துள்ளார் இயக்குநர். அவர் இந்தப் படம் ஒரு தேர் எல்லோரும் சேர்ந்து தான் இழுக்கனும் என்பார். இந்தப்படத்தை இங்கு இழுத்து, கொண்டு வந்துவிட்டோம். இனி நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஸ்வேதா ரமேஷ் பேசியதாவது..
இது எனக்கு முதல் படம் , எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவைத் தர வேண்டும், படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், படக்குழு அனைவருக்கும் நன்றி.

நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசியதாவது…
எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள். இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் நன்றி.

சிறப்பு விருந்தினர் நீலமேகம் பேசியதாவது…
இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் குழுவிற்கும் எனது நன்றிகள். கள்ளக்குறிச்சி பக்கத்தில் எடுத்தவாய்நத்தம் எங்கள் கிராமம். இயக்குநர் எங்கள் ஊர்ப்பக்கம் படம் எடுக்கனும் என்றார். கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப்படக்குழு பணியாற்றினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளேன். இப்போது உங்களிடம் இப்படத்தை விட்டோம். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

டெலிபோன் ராஜா பேசியதாவது…
இன்றைய காலகட்டத்தில் ஜாதியை வச்சுத்தான் படம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள். முனிஷ்காந்த் சார் இந்த படத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஹென்றி பேசியதாவது,
இந்த வாய்ப்பை எனக்கு அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி, என் இசையை நம்பி என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ராஜ குருசாமி அவர்களுக்கும் எனது நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது,
நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம், அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன், இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.

நடிகை சுவாதி முத்து பேசியதாவது..
முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி,

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..
எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது,
முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள் , முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது,
இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.

அண்ணாமலைக்காக அலைகடலெனத் திரண்ட ‘குமரி சங்கமம்’!

annamalai kanyakumari meeting - 2026

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா திடலில் பாஜக., சார்பில் நடந்த குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு பாஜக., தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வந்தனர். அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கடந்த 1969-ல் காமராஜர் குமரி மண்ணில் போட்டியிட்ட போது, கருணாநிதி நாடார் சமூகத்தை ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் எனப் பிரித்தார். காமராஜர் வெற்றி பெற்றார். அப்போது கருணாநிதி ‘நடந்தது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல; நாடார் மன்றத் தேர்தல்’ என்றார். பின்னர் 1971-ல் தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி குமரி வரவில்லை. அப்போது ‘நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை’ என்றார்.

இங்கே பிரசாரத்துக்கு வந்த மோடி, குமரி மாவட்டத்தை தன் சொந்த மாவட்டமாக பாவித்தார். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியவர் பிரதமர் மோடி. இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து தமிழகத்துக்குப்கு பெருமை சேர்த்தார். தமிழகத்தில், மீனவ சொந்தங்களுக்கு மீன் விவசாயி என பிரதமர் பெயர் வைத்துள்ளார். மொத்தம் 33 லட்சம் மீன் விவசாயிகளுக்கு கிசான் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடல் செல்லும் போது, உங்கள் படகில் மோடி அமர்ந்திருக்கிறார் என, நினைக்க வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என திமுக., சொன்னது. இந்த செங்கல் தான் 2 லட்சம் வீடு. உடனே எய்ம்ஸ் பற்றி பேசுவர். தில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். மதுரை எய்ம்ஸ் 2026 மார்ச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

உங்கள் தேர்தல் வாக்குறுதியில், மதுரையில் வேளாண் பல்கலை வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலை செங்கல்லாக தான் இருக்கிறது. (அக்ரி யுனிவ் என்று எழுதப் பட்ட செங்கல்லைத் தூக்கிக் காட்டினார் அண்ணாமலை)

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு செயல்படுத்தாததால் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்த ஐந்து நிமிடத்தி, ஐந்து அடைப்பு வருகிறது. இப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சங்கீதா இட்லி போகிறது. ஓர் ஊழல்வாதியை பாதுகாக்க ஸ்டாலின் அரசு போலீசை பயன்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து விட்டது என சரத்பவார் பேட்டி கொடுத்த பத்து நாட்களில் அவரது 40 எம்எல்ஏ.,க்கள் பாஜக,, கூட்டணியில் சேர்ந்து விட்டனர்.

காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்லி விட்டார். இதற்கு திமுக., கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

வரும் தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக., வெல்லும். பொது சிவில் சட்டம் வரும். அந்த சட்டத்தால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகமாக பயன் பெறுவர். கொரோனா காலத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ நடத்துவதற்கு மட்டும் அமைச்சர் மனோ தங்கராஜ், 2.55 கோடி ரூபாய் செலவு எழுதியுள்ளார். இப்போது பால்வளத்துக்கு சென்றுள்ளார். கன்னியாகுமரியில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக மத்தியில் கேபினட் அந்தஸ்து பெறுவார் என்று பேசினார் அண்ணாமலை.


கன்னியாகுமரி கூட்டம் குறித்து தனது சமூகத் தளப் பக்கங்களில் அண்ணாமலை பகிர்ந்தவை…

nagarkoil bjp meeting - 2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது 9 ஆண்டு கால சாதனை குறித்து, மாவட்டத் தலைவர் திரு தர்மராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்ற #குமரி_சங்கமம் பொதுக்கூட்டத்தில், குமரி கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

குமரி மண், மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட அய்யா வைகுண்டர் அவதரித்த மண். விவேகானந்தர் ஞானம் பெற்ற மண். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், தளவாய் வேலுத்தம்பி உள்ளிட்ட சிறந்த மனிதர்கள் பிறந்த மண். கலைஞர் கருணாநிதி அவர்கள், பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க இந்து கிறிஸ்தவர்கள் என்று பிரித்து அரசியல் செய்ய முயற்சித்தாலும், இறுதியில், பெருந்தலைவர் காமராஜரை இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமை உடைய மண். நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று இறுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் புலம்ப விட்ட மண்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் அவர்கள், மீனவர்கள் உயிர் உடமைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்திருக்கிறார். விவசாயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் போல், மீனவர்களையும் மீன் விவசாயிகள் என்று பெருமைப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக மீனவர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது. இத்தகைய ஊழல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர, மண்ணையும் மக்களையும் பாதுகாக்க, உலக அரங்கில் நமது நாடு மேலும் மேலும் உயர, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும். தமிழகத்திலிருந்தும் பெரும்பான்மையான எம்பிக்கள் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அடுத்த ஒன்பது மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் , மாநிலப் பொதுச்செயலாளர் திரு பொன் பால கணபதி, மாநிலத் துணைத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு MR காந்தி, மாநிலச் செயலாளர் திருமதி மீனா தேவ், மாநில மகளிரணித் தலைவி திருமதி உமாரதி ராஜன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • கே.அண்ணாமலை, தமிழக பாஜக., தலைவர்

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு இரண்டாவது கூட்டம் ஒத்திவைப்பு! காரணம் என்ன தெரியுமா?

patna meeting opposition parties - 2026

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகளின் – மகாகட்பந்தன் – இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ஒரு கூட்டணியை அமைப்பது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பொதுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ராகுல் திருமணம் செய்து கொண்டு வாரிசுகளுடன் திகழ வேண்டும் என்ற ஆசையை தலைவர்கள் சிலர் வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டத்தின் முடிவில் அடுத்த கூட்டம் ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப் பட்டது.

ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக., அரசு பொது சிவில் சட்ட கருத்துக் கேட்பு அறிவிப்பை வெளியிட்டு, அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாஜக.,வின் இந்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு ஒட்டு மொத்த எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து மாறி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி முதலில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து மாயாவதி உள்ளிட்டோர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக, பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவாரின் கட்சி, இரண்டாகப் பிரிந்தது. அக்கட்சியின் முக்கியத் தலைவரும், மகாராஷ்டிர சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸை இரண்டாகப் பிரித்து, தன்னுடன் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைக் கொண்டு, ஆளும் கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வர் ஆகி விட்டார். இந்நிலையில், அக்கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து வரும் ஜூலை 5 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறு எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமான பாட்னாவில் கலந்து கொண்ட முக்கிய இரு கட்சிகள் தடம் புரண்டதால், அடுத்து பெங்களூருவில் ஜூலை 13,14ல் நடைபெற இருந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணமாக, பீஹார் சட்டசபைக் கூட்டம் நடைபெறுவதால் இந்த திடீர் முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தெரிவித்து வரும் கருத்துகள் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் சிவகுமார் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் அரசியல் ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன், இந்த இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு திரும்ப வரும் பொழுது போராட்டம் நடத்துவதாக அறிவித்தார். இதனால் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதை அடுத்து பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றி அமைக்குமாறு ஸ்டாலின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்தக் காலத்திலும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இன்று வியாச பூஜை: குரு பூர்ணிமா! மகத்துவம் அறிவோமா?

gurupoornima vyasa poojai - 2026

கிருஷ்ணா ராமலிங்கம்

வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் (சாதுர்யம் மாஸ்ய விரதம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமானது) சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 3.7.2023) அன்று வருவது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்தது.

ஆஷாட பெளர்ணமியும் மூல நட்சத்திரம் சேர்ந்து வருவது விஷேசமான ஒரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது, அடுத்த ஆஷாட பெளர்ணமி மூல நட்சத்திரம் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வருகிறது என்று இன்று வேத வகுப்பில் குருஜி மூலமாக தெரிய வந்தது.

குருப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரா, குரு சாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரு உபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வியாச பூஜையை முதன் முதலில், துவக்கியவர், வேதவியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை மன்னர் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான,
ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீசுகப்பிரம்ம ரிஷிக்கு ‘வியாச பூஜை’யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர்மாஸ்ய விரதம். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி – வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி குரு பரம்பரையில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்களில் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள். .

இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலகநலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கமாகும்.

இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது.

பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதம், மகாபாரதம் மற்றும் பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவர் இவர்தான்.

இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப் படுகின்றன.

துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது.

எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு – சன்னியாசிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.

மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் விரதமே ‘சாதுர் மாஸ்ய விரதம்’ எனப்படும். ஆனி மாதம் பவுர்ணமி முதல் இவ்விரதம் தொடங்குகிறது. இக்காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே, இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப் படுவது வழக்கம். சன்யாசிகள் மட்டுமல்லாமல், சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இன்றளவும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆச்சாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆச்சாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களில் சென்று வழிபாடு செய்தல் சிறந்தது. ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெறுவோம்!!!!!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

ஆனி மூலம்: மாமுனிக்கு அரங்கனே சீடனாகி ஸ்ரீசைலேச தனியன் அளித்த நாள்!

sri manavala mamunigal srisailesa thaniyan - 2026

–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ–

இன்று 2023 ஆனி மூலம் – ஸ்ரீ சைலேச தனியன் அவதார நாள் -இன்று ஆனித் திருமூலம் – ஸ்ரீ வைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.

ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக விளங்கிய மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கி வந்த சுக்ரீவன், நன்றியுடன் வணங்கப்பட்டவன். ஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், அவன் மேல் கோபப்பட நேர்ந்தது. அந்தக் குறை தீர, இப்போது ஒருசைலருக்கு (திருவாய் மொழிப்பிள்ளையின், இயற்பெயர் திரு”மலை”ஆழ்வார்) உகந்த, குறையில்லாத மாமுனிகளை வணங்குகிறேன்.

தீபக்த்யாதி குணார்ணவம்:

ராமராக அவதரித்து, தீபம் -சமுத்திர ராஜனிடம், சரணடைந்து, இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற/குறைக்க வேண்டியபோது (திருப்புல்லாணிக் கரையில், தர்பசயன இராமராக) மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லை. இராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, இராமரிடம் சரணடைந்தான். ஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகடலான மணவாள மாமுநிகளைச் சரணடைகிறேன்.

யதீந்திர ப்ரவண ப்ரபாவம்:

இராமானுஜர், நம்மாழ்வாரால் “கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்’ என்று கொண்டாடப்பட்டு, ஆளவந்தாரால் ஆம் முதல்வன் என்று அங்கீகரிக்கப்பட்டு, ஐந்து நேரடி ஆசார்யர்களின் பொங்கும் பரிவுக்கு ஆட்பட்டவர். குணங்கள் நிறைந்த மகா சமுத்திரம். வடக்கே உள்ள திருவேங்கடவனுக்கு,

சங்கு சக்கரம் வழங்கி, அப்பனுக்குச் சங்காழி அளித்தருளிய பெருமான் என்று அழைக்கப்பட்டு, ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். தெற்கே இருந்த திருக்குறுங்குடி நம்பியும், உடையவருக்கு ஆசனமிட்டு, அவர் திருமண்காப்பு சேஷத்தை இவரிட்டு அவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார். அப்படியிருக்க அவரை ஏன், ஆசார்யராக அரங்கர் வரிக்கவில்லை? அவர்கள் இருவரும் இராமானுச நூற்றந்தாதியைக் கேட்க வில்லை. ஆனால் அதைச்

அன்பெழில் செவிமடுத்த அரங்கர் (இராமானுஜர் காலத்திலேயே,)

“தன்னை யுற்று ஆட்செய்யும் தன்மையினோர், மன்னு தாமரைத் தாள், தன்னையுற்றாட் செய்ய என்னை உய்த்தானின்று, தன் தகவால், தன்னை உற்றாரன்றித் தன்மை உற்றாரில்லை, என்றறிந்து, தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே”(97)

உடையவரைக் காட்டிலும், மாமுனிகளை ஏன் அரங்கர் ஆசார்யராக ஏற்றார் என்பதற்கு விளககம் சொல்லும் பூர்வாசார்யர்கள், உடையவரை உற்று ஆட்செய்யும் தன்மையில் மிகச் சிறந்தவரான மாமுனிகளுக்காகக் காத்திருந்தாரோ என்கின்றனர்.

வந்தே ரம்ய ஜாமாதர முநிம்:

ராமாவதாரத்தில் விஸ்வாமித்திர முனிவரைக் குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக் கேள்வியுற்ற இராமருக்கு அவர் மேல் ஈடுபாடில்லை.

கிருஷ்ணாவதாரத்தில் சாந்தீபினி முனிவரிடம் 64கலைகளயும், பயின்றபின் அவர் குருதக்ஷிணையாக – ஆசார்ய காணிக்கையாக பகவான் கிருஷ்ணரிடம் உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத்தர வேண்டுமென்ற ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். ஆனால் எந்தக் குறையும் இல்லாத, எதையும் எதிர் பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல், அவர் அழகிய மணவாள மாமுநிவன் மட்டுமே; எனவே அவரை வணங்குகிறேன். இவ்வளவு சிறந்த அர்த்தங்களைக் கொண்ட தனியனை, எம்பெருமான் மட்டுமே வழங்க முடியும்.

srisailesa thaniyan - 2026

சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்யலட்சணமான ஐந்து கடமைகளைச் செம்மையாக நடத்திய அரங்கன்:

i) தனியன் சமர்ப்பித்தல்:(மேலே சொன்னபடி)

ii)ஆசார்யன் கீர்த்தியை – பெருமையை இந்த வையமெங்கும் பரப்புதல்:

எல்லா திவ்யதேசங்களிலும், பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன், முதலிலும்,சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்’ சேவிக்க வேண்டுமென்று நியமித்தார். அவர் தனியன் சமர்ப்பித்த மறுநாளே எல்லா திவ்ய தேசங்களுக்கும் தம் ஆக்ஞையை ( ஆணையை) அனுப்பிவைத்தார். கோவில்களில் மட்டுமல்லாது மடங்கள், ராமானுஜகூடங்கள், ஶ்ரீவைஷ்ணவர்கள்/பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும் முதலிலும், முடிவிலும் இந்த தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.

iii)ஒரு சீடன் தனக்கென்று எந்த உடமையும் இல்லை என்றும் எல்லாம்ஆசார்யனுடையவே,

தாம் அனுபவிப்பது அவர் கருணையால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும். எனவே தம் உடமைகளை யெல்லாம் நிர்வகிக்கும், ஆதிசேஷனையே மாமுநிகளுக்குக் கொடுத்துவிட்டார் அரங்கன்· அதனால் தான் மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேஷ அவதாரமாகிய ராமானுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுநிகளுக்குத் தந்தருளினார்.

iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும். அரங்கனின் பெயரான அழகிய மணவாளன் என்னும் பெயரே, மாமுநிகளுக்கு

அவர் பெற்றோரால் சூட்டப்பட்டது. மாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி அரங்கனிடம் வேண்ட, அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார். தம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான், தாமும் ஆசார்யன் நாமத்துடன் (அழகிய மணவாளன்) இருக்க முடியும் என்று கருதியே, இவ்வாறு அரங்கன் நியமனம் ஆயிற்று.

v)ஆசார்யன் திருநட்சித்திரத்தையும் (அவதார நன்னாள்) தீர்த்தத்தையும் (பரமபதம் அடைந்த நாள்/திதி) சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.

அரங்கன் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார். இரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள் மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தீர்த்த திதியன்று, அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார். மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே,அரங்கனுக்கு – உச்சிகால ( மதியம் நடக்கும் பெரிய அவசரம் என்னும்) நைவேத்யம்; அன்று அரங்கன் சுருளமுது(வெற்றிலை)· கண்டருளுவதில்லை. இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யர் மணவாள மாமுனிகளுக்கு சீடரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்னும், பேருண்மையையும் உணர்த்தினார், அழகிய மணவாளன் நம்பெருமாள்!!

துர்நாற்றம் வீசுது வண்டியூர் கண்மாய்!

madurai vandiyur kanmai - 2026

மதுரை: மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பெறும் நீரில் பல ஏக்கர் கணக்கில் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டியூர், மேலமடை, பாண்டி கோவில் பகுதிகளில் குடிநீர் ஊற்று ஆதாரமாகவும் திகழ்கிறது.

இந்தக் கண்மாய் பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது . இந்தக் கண்மாயில், முழுவதுமாக ஆகாயத் தாமரை படர்ந்து அப்பகுதியில் செல்வோர் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுகிறது.

கண்மாய் கரையை உயர்த்தியும், கண்மாயை ஆழப் படுத்தியும் பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இந்தக் கண்மாயில் கரைகளை உயர்த்தி படகு சவாரி விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்மாயில் உள் பகுதிகளில், ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுவதால், அப்பதிகளில் முச்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. ஆகவே, தமிழக அரசு பொதுப்பணித் துறையினர் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உங்களுக்கு விரைப்புத் தன்மை குறைந்தால்… உடனே இதை கவனிக்க வேண்டும்!

heart operation - 2026

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தாம்பத்ய வாழ்க்கையில் உடல் ஒத்துழைக்காமல் தடுமாறுவது இயல்புதான். குறிப்பாக ஆண்களுக்கு கலவியின் போது ஏற்படும் விரைப்பு குறைபாடு பெரும் கவலையைத் தரும் ஒன்று.

நீண்ட கால சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அது அவருக்கு உடலில் உள்ள அனைத்து சிறு இரத்தக் குழாய்களையும் சுருக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால்தான் கால்கள் மரத்துப் போவது, கால்களில் புண்கள் ஏற்படுவது, அவ்வாறு புண் ஏற்பட்டால் விரைவில் ஆறாமல் இருப்பது போன்றவை ஏற்படுகின்றன.

அதேபோலத்தான் ஆண்களுக்கு அந்தரங்க உறுப்புக்கு இரத்தம் பாய்வதும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதே வகையில்தான் விரைப்புத்தன்மை குறைபாடும் சிலருக்கு ஏற்படும். இது தொடக்கத்தில் லேசாகத்தான் இருக்கும். அப்போதே அதை உணர்ந்து கொண்டு சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதுதான் சரியான வழி.

அதேபோல உயர் இரத்த அழுத்தமும் தங்களுக்கு உடன் இருந்தால் அதைக் கண்டறிந்து, அதையும் மருத்துவர் ஆலோசனையின்படி கட்டுப்படுத்திக் கொண்டு சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் விரைப்புத்தன்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இதயநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். காரணம், இரத்தத்தை பம்ப் செய்து அந்தரங்க உறுப்புகளுக்கு அதிவேகமாக அனுப்பும் செயல்பாடு இதய நோய் இருந்தால் தடைபட்டுப் போகும். எனவே விரைப்புத் தன்மைக் குறைபாடு ஏற்படும்.

எனவே, இது போன்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், இதய நோய் வல்லுநரை அணுகி, பிரச்னைகள் தென்பட்டால் சிகிச்சைக்கு தயாராக வேண்டும். புகை, மதுப் பழக்கங்கள் இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும். தொடக்கத்திலேயே விரைப்புத்தன்மை குறைவைப் புரிந்து கொண்டு சர்க்கரை மாத்திரை அல்லது ஊசி ஆகியவற்றுடன், இரத்த நாளங்களை வலுப்படுத்தும் விட்டமின் காம்ப்ளக்ஸ் மாத்திரைகளான நியூரோபியான், மெதிகோபால் போன்றவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. விரைப்புத் தன்மைக்காக பொதுவாக வயகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இதுபோன்று இதய நோய்கள் இருப்பது தெரிந்தால், அல்லது கல்லீரல் நோய் போன்றவை சிறிதளவு இருந்தால் கூட வயாகரா வகை மாத்திரைகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு… வெடித்ததால் மதுரையில் பரபரப்பு!

1745993 bombddd - 2026

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரும் அஜீத்குமாரும் அவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில் இருந்து பெரும் வெடி சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் வெடிசத்தம் வீட்டில் ஆய்வு செய்த போது அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பூட்டிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏதும் நிகழவில்லை. இதையடுத்து இந்த வெடி சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்