Home Blog Page 5593

சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)

ஸ்ரீ சிவாபிஷேகம் - 2026

* சிவபிரதோஷம்*

*”ஆத்ம சிவன்”*

*(மீ.விசுவநாதன்)*

*ஆயிரம் செல்வ மடைந்தாலும்*

* ஆத்ம சிவனை மறவாத*

*சேயென வாழும்* * நிலைவேண்டும் !*

* சிறந்த பணியில் பொழுதெல்லாம்*

*ஓயுத லின்றி திருத்தொண்டில்*

* உள்ளே மகிழு முயிர்வேண்டும்!*

*வாயிலே பூக்கும் மலராக*

* வாசக் கவிதை தரவேண்டும் !*

*மந்திரம் தந்து மதிதிறந்த*

* மாண்பு குருவை நினைக்கின்ற*

*சிந்தனை நன்கு வரவேண்டும் !*

* சேர்ந்த உறவு நலங்காண*

*புந்தியில் வெள்ளைக் குணம்வேண்டும் !*

* பொதிகை முனிவன் புகழ்போல*

*சந்திர சூர்யக் கதிர்களென*

* சாகா வரம்நான் பெறவேண்டும் !*

*(**இன்று* *06.07**.2017 பிரதோஷம்)*

திராவிட அரசியல் முகமூடியை கிழித்த எஸ்.வி.சேகர்

received 855761931254984 - 2026

திராவிட கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த எஸ்.வி சேகர்
!

திராவிட கட்சிகளை சேர்ந்த அரசியல் வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில்
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும்., நடிகருமான எஸ்.வி சேகர்
தனது முகனூல் பக்கத்தில் திராவிடம்னா என்னா அண்ணே..? எனும் தலைப்பில்
வெளியிட்டுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த
உறுப்பினர்கள் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வயிறு வளர்பதற்காக
பிராமணர்கள் மற்றும் இந்துகளுக்கு எதிரான கருத்துக்களை அநாகரீகமாக பேசி
பிழைப்பு நடத்தி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

இந்து விரோதம் தூஷணம் பேசி, தூஷித்து வரும் திராவிடவாதிகள் ஒரு பக்கம்
திருமணங்களை செய்து வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் “தாலியறுக்கும்” கழிசடை,
கருமாந்திர வேலைகளையும் செய்து வருகிறார்கள். இதனால், திராவிடத்தில் ஊறிப்
போன, நவீன நாத்திக வாதிகள் மக்களை பகுத்தறிவோடு ஏமாற்ற திட்டமிட்டு திராவிட
கட்சிகள் எனும் பெயரில் ஒரு கூட்டத்தையே உருவாக்கி ஆட்சி அதிகாரத்தில்
அமர்ந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை கோடி
கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர் என இந்துக்கள் கூறி வருகின்றனர் .

இந்த நிலையில் எஸ்.வி சேகர் தனது முகனூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு
பதிவில் கூறியுள்ளதாவது :-

திராவிடம்னா என்னா அண்ணே..?
.
மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..
.
ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி
நடத்துவது..
.
மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..
.
சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..
.
ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..
.
மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி
கேக்கிறது..
.
சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம்
கட்டுறது..
.
பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..
.
விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..
.
தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும்
பார்க்கிறது..
.
இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா… என்று
முகனூல் பதிவில் எஸ்.வி சேகர் கூறியுள்ளார். இந்த பதிவானது சமூக ஊடகங்களில்
வைரலாக பரவி வருகிறது.

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

samavedam 1 - 2026

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.

தமிழாக்கம் – ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்.

“ஜன கண மன அதி நாயக ஜயஹே!”
நம் தேசீய கீதத்தின் இந்த முதல் வரியின் விளக்கம்:-
தோற்றம் கொண்டவை அனைத்தும் ஜனங்கள் அதாவது ஜனனம் எடுத்தவை. முதலில் தோன்றியவை
பஞ்ச பூதங்கள். அவற்றிலிருந்து மீதியனைத்தும் தோன்றின. அவ்விதம் பார்த்தால்
கிரகங்கள், நட்சத்திரங்கள், தேவதைகள் – இவையனைத்தும் ஜனங்களே. பிறந்தவை
அனைத்தும் ஜனங்களே அல்லவா? பிறவி என்ற தர்மம் கொண்டவை அனைத்தும் ‘ஜனம்’.

“சர்வே ஜீவா: கண்யா: கணா: தேஷாம் பரி கணேஷ:” என்பது விளக்கம். ஜீவர்கள்
அனைவரும் கணங்களே. கணக்கீட்டிற்கு உட்பட்டவர்கள். தேவர்கள் எவ்வளவு பேர்?
தேவர்களுள் ஒரு பிரிவினரான வசுக்கள் 8 பேர். ருத்திரர்கள் 11 பேர்.
ஆதித்யர்கள் 12 பேர். கணக்கு உள்ளதல்லவா? கணக்கிட முடிவதால் இவர்களனைவரும்
கணங்களே! கிரகங்கள் எத்தனை? 9. இன்னும் கிரகங்கள் இருக்கின்றனவாம்.
மொத்தத்தில் கிரகங்களுக்கும் எண்ணிக்கை இருப்பதால் அவையும் கணங்களே.

நட்சத்திரங்கள்? 27. அவற்றின் பிடியில் நாம் உள்ளோம். எனவே இவையனைத்தும் ஜனம்,
கணம் என்பவற்றின் கீழ் வருகின்றன.

எனவே, “ஜன கண மன அதி நாயகன்” – கணபதியே! வேறல்ல.

இதை எடுத்துக் கூறினால் தேசீய கீதத்தில் கூட ஹிந்து மதக் கொள்கை இருப்பதாகக்
கூறி எடுத்துவிடச் சொல்வார்களோ, என்னவோ!

பாரத தேசத்தில் ஒவ்வொன்றும் ஹிந்துயிஸமே! ஹிந்து மதக் கொள்கையோடு கூடியதே.
அதில் மறுப்பதற்கோ சந்தேகத்திற்கோ இடமில்லை. பாரதீயம் ஹிந்துயிஸமே!

எனவே அந்த கணபதியிடம் நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். அது என்ன?

“பாரத பாக்கிய விதாதா!” (விதாதா என்றால் படைப்பவன்).
“ஸ்வாமி! பாரதத்தின் பாக்கியத்தை படைப்பவன் நீயே!”

அதனால் தான் விநாயக சதுர்த்தி வந்தால் போதும். எங்கு பார்த்தாலும் கணபதி
வழிபாடு வியாபித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அச்சமயத்தில் ஹிந்து
மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூட மெளனமாக கணபதிக்கு நமஸ்காரம்
தெரிவிக்க வேண்டியது தான். வேறு வழியில்லை.

அது எங்கிருந்து எங்கு வரை பரவியுள்ளது?

“பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கள வங்கா!
விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா!”

இவை அனைத்திலும்
“தவ சுப நாமே ஜாஹே! தவ சுப ஆசிஸ மாஹே!”
“ஸ்வாமி! உன் நாமத்தை இந்த தேசம் மொத்தம் எதிரொலிக்கிறது. உன் சுப ஆசிகளை
விழைகிறது”.

அது மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் அதே முழக்கம். வீட்டிற்கு உள்ளேயும்
வெளியேயும் கணபதி நவராத்திரிகள், அவர் மேல் கீதங்கள், ஹோமங்கள், பஜனைகள்.
எங்கு பார்த்தாலும் கணேச தத்துவத்தை போதிப்பவர்கள் – என்று இவ்வாறு
பார்க்கையில்,

“காஹே தவ ஜய காதா!”
எதனால் இவ்வாறு நிகழ்கிறது என்று கவனித்தால், ஜன கண நாயகன் ஆதலால்.

“ஜன கண மங்கள தாயக!”
அப்படிப்பட்ட ஸ்வாமிக்கு

“ஜயஹே! ஜயஜெ! ஜயஹே!
ஜய ஜய ஜய ஜயஹே!”

நம் தேசீய கீதத்தில் இத்தனை அற்புத பொருள் பொதிந்துள்ளது

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

gomatha - 2026
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை:- 
-தெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா 
-தமிழாக்கம் – ராஜி ரகுநாதன் 
(Source: Editorial, Rushipeetham, July, 2017)

பசு வதைத் தடுப்பது என்பது மதம் தொடர்பான அம்சம் அல்ல. ஆவேசங்களையும், மேன்மேலும் ஆவேசங்களையும் விட்டுவிட்டு நிதானமாக வரலாற்றை ஆராய்ந்தால் இது நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் என்னும் உண்மை புரிய வரும்.

நம் பாரத நாட்டின் புராதன, தார்மீக நூல்களில் பசுவை வழிபாட்டிற்குரிய அன்னையாக கௌரவித்துள்ளார்கள்.  அதற்கு காரணம், மேன்மை பயக்கும் எந்த விஷயமென்றாலும் தெய்வமாகத் தொழும் பண்பாடு பழங்காலம் முதல் இந்நாட்டின் வழக்கம்.  பிராண சக்தியை அளிக்கும் சூரியனையும், பயிர் வகைகளை வளர்த்து அளிக்கும் நிலத்தையும், தாகம் தீர்க்கும் நீரையும் தேவதைகளாக எண்ணுவது ஒரு உயர்ந்த பாவனையே தவிர அதனை மத நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது.

பசுமாட்டின் விஷயத்திற்கு வருவோம் …

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கோ சம்ரக்ஷணை விஷயத்தில்  விவாதங்கள் நடந்து வந்துள்ளன.   சுதந்திரம் கிடைத்த பின் முதலில் கோ வதை தடுப்புச் சட்டமே பிரதான நிர்ணயமாக இருந்தது என்று மகாத்மா காந்திஜியேஅறிவித்துள்ளார்.

நம் நாட்டின் கொள்கைகளில் பசு பாதுகாப்பும் ஒன்று. நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பசு மாட்டு வகைகள் இருப்பினும் அனைத்திற்கும் பொதுவான ஒரு அம்சம் உள்ளது. ‘மூபுரம்’ எனப்படும் திமில் மற்றும் பசுவின் கழுத்தின் கீழிருந்து தொங்கும் ‘அலைதாடி’ உடைய பசுக்கள் நம் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிதான கால்நடைச் செல்வம்.
இத்தகைய மாடுகளின் முதுகில் சுவர்ண நாடி எனப்படும் நாடி உள்ளது.  சூரிய கிரணங்களில் இருக்கும் ஒரு பிரத்தியேக சக்தியை கிரகிக்கும் சாமர்த்தியம் இந்த நாடிக்கு மட்டுமே உள்ளது.  மற்ற எந்த மிருகங்களிலும் இல்லாத விசேஷமான சிறப்பு இது.

அதன் காரணமாகவே பசுமாட்டின் பால், கோ ஜலம், (மூத்திரம்), கோமயம் (பசுஞ்சாணி), கோக்ருதம் எனப்படும் பசு நெய், பசுந்தயிர் என்பதான பஞ்சகவ்யம் மருத்துவ குணத்தோடு கூடியதாக உள்ளது.

துளசியை இந்துக்கள் பூஜித்தாலும் அதன் வியாதி நீக்கும் குணம் அனைத்துயிர்களுக்கும் நன்மை பயப்பது போலவே, பஞ்ச கவ்யம் அனைத்து மனிதர்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.  மலம், மூத்திரத்திலும் கூட சிறந்த ஒளஷத சக்தி கொண்டிருப்பது பசு மாட்டின் சிறப்புகளில் ஒன்று.

இதனைக் கொண்டு எத்தனையோ நீண்ட கால நோய்களைத் தீர்க்கும் பஞ்ச கவ்யத்தாலான மருந்துகள் ஆயுர்வேத சாஸ்த்திரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளுக்கு பசும்பாலை அனுபானமாகச் சேர்ப்பதுண்டு. அந்த அனுபானத்திற்கு நம் நாட்டு தேசீய பசு மாட்டுப் பாலைத் தவிர வேறு எந்த வகை பசுமாட்டுப் பாலைச் சேர்த்தாலும் பலனளிக்காது என்பது வைத்திய சாஸ்திரம் கூறும் தெளிவு.

விவசாயத்திக்குக் கூட இயற்கை எருவாக பசுஞ்சாணி, பசு மூத்திரம் பயன்படுகின்றன. பால் கறந்தாலும் இல்லாவிட்டாலும் இறக்கும் வரை தன் இருப்பினால் மண்ணிற்கும் மனிதனுக்கும் பசு நன்மை செய்கிறது என்பது உண்மை.  அம்மா என்ற உடனே நினைவுக்கு வருவது பசுமாடு. இது பல யுகங்களாக இந்திய நாட்டின் பண்பாடு.  இது மதம் தொடர்புடையது அல்ல.  படிப்படியாக நம் நாட்டில் பல ஆராய்ச்சிகளின் பின், நிர்ணயம் செய்த ஒரு உண்மை இது.

நம் தேசத்திற்கு மட்டுமே விசேஷமாக விளங்கும் ஒரு விலங்கினைக் காப்பாற்ற வேண்டியது நாட்டு மக்களின் கடமை. மற்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து நிலைத்து விட்ட பிறருக்கு, நம் நாட்டின் ஆதர்சங்கள், இலட்சியங்கள்  புரியாமல் போகலாம்.  எப்படியானாலும் புத்தர் பிறந்த இந்த பூமியில் ஒரு தீமையையாவது தடுப்பது தவறல்ல அல்லவா?

ஆனால் பிற மதங்களில் கூட ‘பசுமாட்டைக் கொல்’ என்று கட்டளையிடும் விதி எதுவும் இல்லை. சில முஸ்லீம் நண்பர்கள், கிறிஸ்தவ நண்பர்கள், தங்கள் மத நூல்களின் ஆதாரத்தோடு அவர்களுக்குக் கூட பசுமாடு பூஜிக்கத் தக்கதுதான் என்று விவரித்த போது ஆச்சர்யமாக இருந்தது.  இது வெறும் மத துவேஷத்தோடு இந்தியாவின் கொள்கையை காலால் மிதிக்க வேண்டுமென்ற முயற்சியே தவிர பசுவதை மறுப்பை எதிர்ப்பதில் வேறு எந்த காரணமும் இல்லை.

இது வரையிலேயே எவ்வளவோ சிறந்த பசுமாட்டு வகைகள்  மறைந்து போயின.  ஜீவ காருண்ய சங்கங்களுக்கு தெரியுமோ இல்லையோ, தினமும் பல லட்சம் பசுக்கள் இதயத்தை துளைக்கும் வண்ணம் உள்நாட்டு, வெளிநாட்டு நர ராட்சசர்களின் உணவிற்காக கொல்லப்படுகின்றன.

இதில் வெறும் மாமிச உணவு உண்பவர்களின் வழி முறை காணப்படுவதில்லை.  ஒரு கொடூரம் புலப்படுகிறது. இந்தியாவின் பிரத்தியேகமான ஓங்கோல் போன்ற பசு வகைகளை சில மேல் நாடுகளில் வளர்க்கும் ஆலோசனைகள் இருப்பதாக செய்தி வந்துளளது.

பசு மாடுகளைக் காக்கும் கருணையுள்ளம் கொண்ட எவ்வளவோ முஸ்லீம் சகோதரர்கள் உள்ளார்கள்.  வியாபாரத்திற்காக பசுக்களை கொல்பவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம்.

கோ வதையை மறுப்பதற்கு மதத் தொடர்பான காரணம் இல்லை என்று கூறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

கோ வதைத் தடுப்புச் சட்டங்கள்  ஏற்கெனவே இல்லாமல் இல்லை.  ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு  இல்லை.  தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது.

மாமிச உணவை முழுமையாக நிறுத்தினால் நன்மை ஏற்படலாம்.  அஹிம்சை சிறந்ததே.  ஆனால் அந்த கொள்கை  எல்லோராலும் ஏற்க இயலாதது.  அதனால்தான் சிலவற்றுக்கு எல்லை வகுத்தனர்.  இந்த எல்லை முன்பு வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் கூறியபடி இருந்திருக்கலாம்.  பின்னர் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு சொல்லியிருக்கலாம்.

‘மாமிச உணவு உற்பத்தி செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்’ என்பது சிலரின் வாதம்.  பின், மான், புலி, மயில் போன்ற வன விலங்குகளை வேட்டையாடினால் கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் உள்ளனவே?  அவற்றையும் நீக்கி விட்டால் இன்னும் அதிக மாமிசம் உற்பத்தி செய்யலாம் என்று நியாயத்திற்கு எதிராக பேச இயலாது அல்லவா?  அது சட்டத்திற்கு உகந்ததல்ல என்பதால்.

அனைத்து வன விலங்குகளின் வதையையும் எதிர்த்துள்ள சட்டத்தோடு கூட, பழங்காலம் முதல் நம் இந்திய பூமியை கௌரவிக்கும் கோ மாதாவை காப்பாற்றுவதற்கு சட்டம் இயற்றுவதில் எந்த தவறும் இல்லை.  கோ சம்ரட்சணை இந்தியர்களின் கடமை.   நம் நாட்டின் பண்பாட்டினை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் கடமையை உணர்ந்த அனைவரும் இதனை வரவேற்று இந்த கோ வதையை நீக்குவதற்கு உதவ வேண்டும்.

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம்: கட்சியில் இருந்து பாஜக., பிரமுகர் நீக்கம்

Maharashtra Video of BJP leader kissing in moving bus goes 1 - 2026

மும்பை:

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக., பிரமுகர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ரவீந்திர பவாந்தாடே (48). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி நாக்பூரில் இருந்து சந்திராபூர் நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, தன்னுடன் வந்த பெண்ணை பஸ் உள்ளேயே வைத்து முத்தமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிலர் செல்போனில் படமும் எடுத்துள்ளனர். அந்தப் படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு வேலை வாங்கித் தருவதாகவும்ம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார் என்றும், தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாகவும் போலீசில் புகார் அளித்தார். மேலும், பவாந்தாடே அரசியல் ரீதியாக முக்கியப் புள்ளி என்பதால், போலீஸார் வழக்கைப் பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவாந்தாடேவை கைது செய்துள்ளதாகவும், 6ஆம்தேதி வரை காவலில் வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவீந்திர பவாந்தாடே, பள்ளியில் ஆசிரியராகவும் உள்ளார்.

இதனிடையே, ரவீந்திர பவாந்தாடேவை சில மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக மாநில பா.ஜ.க. கூறியுள்ளது. அவர் கட்சிக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் நேத்தே கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மத வன்முறை: பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு எங்கே?

mamta banarjee kesharinath thripati govern - 2026

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் புனிதத் தலம் ஒன்றைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் தகவல் பதிவு செய்யப்பட்டது. இது வைரலாகப் பரவியதால், பாதுரியா பகுதியில் மதக் கலவரம் ஏற்பட்டது. இரு வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை மூண்டது. எனவே அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.

இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. இதையடுத்து, கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. எனவே, 4 கம்பெனி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் (400 வீரர்கள்) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மாநில போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மற்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், மாநிலத்தில் நிலவும் நிலைமை குறித்து முழு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என எழுத்து பூர்வமாக கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். பதற்றம் நிறைந்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்துகொண்டார். மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் இருவரும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் குறித்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஒருவரை கீழே தள்ளி கல்லைக் காலில் போட்டு கொடூரச் செயலில் ஈடுபடும் ஒருவர் குறித்த வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது.

“பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா”

19832546 477316755954735 1852932577 n - 2026

“பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா”

(ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை. இது
தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று
சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்)

நன்றி-இன்றைய குமுதம் லைஃப்-சீதா முரளி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கோ தர்சனம் கோடி ஜன்ம சாபல்யம் என்பது சாஸ்திர
விதி. அதாவது கார்த்தால கண்விழிச்சு எழுந்ததும்,
பசுவைப் பார்த்தா, பல ஜன்மத்துப் பாவமும்
விலகிவிடும் என்பது ஐதிகம்.

மகாபெரியவாளுக்கு கோமாதாக்கள் மேல் அலாதி
ப்ரியம் உண்டு. கோ சம்ரக்ஷ்ணம் பண்றதைப்பத்தி
அவர் பேசாத நாளே கிடையாதுன்னு கூட சொல்லலாம்.
மடத்துல இருக்கிற சமயங்கள்ல தினமும் கார்த்தால
அவர் தரிசனம் பண்ணறது கோமாதாவைத்தான்.
அதேமாதிரி பல சமயம் பசுக்கள் பராமரிக்கப்படற
கொட்டகைலபோய் அமர்ந்துண்டுடுவார்.

ஒரு சமயம் மடத்துக் கொட்டில்ல இருந்த பசுக்கள்ல
ஒண்ணு நிறைமாத கர்ப்பமா இருந்தது. பேறுகாலம்
நெருங்கிட்டதால, பசு வேதனைப்பட்டுக்கொண்டே
இருந்தது. குறிப்பிட்ட நாள் கடந்தும் எதனாலயோ
அந்தப் பசுவால் கன்றை ஈன்றெடுக்க முடியலை.
மூச்சு இரைக்க முணகலும்,கத்தலுமா
அவஸ்தைப்பட்டது பசு.மடத்துப் பசுக்களைப்
பார்த்துக்கற கால்நடை மருத்துவர் வந்தார். அவர்
முகத்துல ஒரு கேள்விக்குறி எழுந்தது. இருந்தாலும்
வெளீல காட்டிக்காம, மேலும் சில கால்நடை
மருத்துவர்களை வரவழைச்சார்.ரொம்பவே அனுபவம்
உள்ளவர்களான அந்த டாக்டர்களும் பரிசோதனை
பண்ணினாங்க.

ஒருத்தர் ரெண்டுபேர் இல்லை. மொத்தம் ஆறுபேர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துட்டு, பசு ஏன்
இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தை
கண்டுபிடிச்சா. அது என்னன்னா, கன்றுக்குட்டி,பசுவோட
வயிற்றுக்குள்ள இறந்து போயிருந்தது. அதை வெளியே
எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும்.அந்த ஆறு
டாக்டர்களும் ஊர்ஜிதமாக இந்த விஷயத்தைச்
சொன்னார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டதும் மடத்தோட நிர்வாகிகளுக்கு
அதிர்ச்சி.பரமபவித்ரமான மடத்துக்குள்ளே இப்படி ஒரு
சம்பவம் நடந்திருக்கு அப்படிங்கற திகைப்பு..
அதுமட்டுமல்லாம, இந்த விஷயத்தை மகாபெரியவாகிட்டே
எப்படிப் போய்ச் சொல்வது? யார் போய் சொல்றதுன்னு ஒரே
குழப்பம் எல்லாருக்கும்.

இருந்தாலும் இந்த முக்யமான விஷயத்தை அவர்கிட்டே
சொல்லாமல் இருக்க முடியாது. அதானால தயங்கித்
தயங்கி மெதுவாப்போய் ஆசார்யாளிடம் விஷயத்தைச்
சொன்னார்கள்.

சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பரமாசார்யா,
மெதுவா தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார்.கீழே பலகையைப் போடச்
சொன்னார்.பசுவுக்கு நேரா அமர்ந்தார்.கண்களை மூடிண்டு
தியானத்துல அமர்ந்தார்.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்தவர்
வேற எந்தப் பக்கமும் கவனத்தை திசை திருப்பாம, பரிதாபமா
வேதனைப்பட்டுண்டு இருந்த அந்தப் பசுவையே உத்துப்
பார்க்க ஆரம்பிச்சார்.

எல்லாரும் பரபரப்பா ஏதோ நடக்கப்போறதுன்னு பார்த்துக்
கொண்டு இருந்தார்கள். மகானோட பார்வை,பசுவைத் தவிர
வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள்
இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன
டாக்டர்கள் ஒரு பக்கம் நின்று, மகானையும்,பசுவையும்
மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.கிட்டத்தட்ட
அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இப்படியும்,அப்படியுமாக
நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு சட்டுன்னு
ஓர் இடத்தில் நின்றது.

அதேசமயம், அதோட வயித்துல இருந்து மெதுவா,மெதுவா
கன்றுக்குட்டி வெளியே வர ஆரம்பிச்சுது. ஒண்ணு ரெண்டு
நிமிஷத்துக்குள்ளே,அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது.
அதுமட்டுமல்லாம, வெளியே வந்து விழுந்த கன்று அதற்கே
உரிய துள்ளலுடன் எழுந்து நின்று, கொஞ்சம் தள்ளாடி தடுமாறி
பிறகு நேரா நின்னு, தாய் மடியைத் தேடி, முட்டி,முட்டி பால்
குடிக்க ஆரம்பிச்சது.தாய்ப்பசு சந்தோஷமா கன்னுக்குட்டியை
நக்கிக் குடுத்தது.

நடந்தை எல்லாரும் ஆச்சரியமா பார்த்துண்டு இருந்த அதே
சமயம், ஆறு டாக்டர்களுக்கும் அதிர்ச்சி. இது எப்படி நடந்தது?
எப்படி உயிர் வந்தது? அறிவியலுக்கும் தெரியாத
ஆச்சரியத்தோட பார்த்துக் கொண்டிருந்த சமயத்துல,
இதெல்லாம் ஒரு ஆச்சரியமும் கிடையாதுங்கற மாதிரி,
மெதுவா எழுந்தார். பரமாசார்யா. பசுமாட்டை நெருங்கினார்.
வாஞ்சையோட அதோட கழுத்தில நன்றாகத் தடவிக்
கொடுத்தார். பிறகு எதுவுமே நடக்காத மாதிரி அவர் பாட்டுக்கு
உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை.
இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று
சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்.

சிலர் மடத்தோட சிப்பந்திகள்கிட்டே எப்படி இந்த அதிசயம்
நிகழ்ந்ததுன்னு கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்;

“ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான்.
மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல்
மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட
எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு.
இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு
கிடைச்சிருக்கு!” என்பதுதான்.

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

thamizannai - 2026

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள் அந்த தேசிய எழுச்சிக் காலகட்டத்தில் அத்தகைய பாடல்களைப் புனைந்தனர். வந்தே மாதரம் குறித்து அனாவசியமான சர்ச்சையை உண்டாக்கி அதனை எதிர்க்கும் இஸ்லாமிய மதவெறியர்களின் தரப்பை பல தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆதரிப்பார்கள். திராவிட இயக்க, இடதுசாரி கும்பல்களும் அதற்கு ஒத்து ஊதுவார்கள். ஆனால், அதே போன்ற, சொல்லப் போனால் அதைவிடவும் வெளிப்படையாக (கீழுள்ள குறிப்புகளைப் பார்க்கவும்) இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் எதிர்க்க மாட்டார்களாம், ஏற்பார்களாம்! பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்.

 

2. நீராரும் கடலுடுத்த நில மடந்தை என்பது ’ஸமுத்ர வஸனே தேவி’ என்ற பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பன்றி வேறில்லை. கடலை ஆடையாக உடுத்த பூமி என்ற தொன்மையான படிமம் வேதங்களிலிருந்து தான் வருகிறது. குறிப்பாக, அதர்வவேதத்திலுள்ள பூமி சூக்தம் இதுபோன்ற பற்பல அழகிய உவமைகளையும் போற்றுதல்களையும் பூமியைக் குறித்துக் கூறிச்செல்கிறது.

3. பரதகண்டம் என்ற சொல் புராண காலத்தியது. இன்றும் சுபகாரியங்களுக்கான சங்கல்பங்களில் ‘ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே’ என்று கூறப்படுகிறது. தக்கணம் என்பது தட்சிணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் தான். இந்தியா, தென்னிந்தியா, தமிழகம் ஆகியவற்றைக் குறிக்க முறையே பரதகண்டம், தட்சிணாபதம், திராவிடம் ஆகிய மூன்று புராண சம்ஸ்கிருதச் சொற்களை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். மேலும், திராவிடம் என்பதை இனம் சார்ந்ததாக இல்லாமல், நிலப்பரப்பு சார்ந்ததாக மட்டுமே அவர் கொண்டிருக்கிறார், ‘திராவிட உத்கல பங்கா’ என்று ஜனகணமன பாடலில் வருவது போல.

சீராரும் வதனமெனத் திகழ் பரதக்கண்டமிதில்
தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்..

4. தரித்த நறும் திலகமுமே: பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்பது இந்துப்பண்பாட்டின் ஆதாரமான மங்கலச்சின்னம். மேலும், நமது கவிமரபில், திலகம் என்பது ஒரு பொருளின் உயர்வையும் மேன்மையையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கூறப்படும் சொல்.

புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?

என்று கம்பராமாயணத்தில் வருகிறது (சுந்தர காண்டம், காட்சிப் படலம்). ரகுகுலதிலகன் என்று ராமனைப் புகழ்வார்கள். நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற பிரபல பட்டப் பெயர்களும் கூட இந்த இந்துப் பண்பாட்டு உவமையிலிருந்து தான் வருகின்றன.

5. வாழ்த்துதுமே என்பது ’வந்தே’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஈடான ஒன்று தான். இப்போதைய தமிழில் அது பொதுவான ஒரு சொல்லாக ஆகிவிட்டாலும், தமிழ் இலக்கியங்களில் தெய்வங்களைப் போற்றுவதற்கான ஒரு சொல்லாகவே இருந்துள்ளது. ’மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரிய புராணம்.

6. தமிழ்த்தாயைப் போன்றே தெலுகு தல்லி, கன்னட மாதே ஆகிய கருத்தாக்கங்களும் உள்ளன. உதாரணமாக, புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் குவெம்பு எழுதிய கர்நாடக வாழ்த்துப் பாடல் ‘ஜய பாரத ஜனனிய தனுஜாதே ஜய ஹே கர்நாடக மாதே’ என்று தொடங்குகிறது. பரதகண்டத்தை வதனமாகவும் தமிழ்நாட்டைத் திலகமாகவும் சுந்தரம்பிள்ளை வர்ணித்தது போலவே, பாரதத்தாயின் மகளாக கன்னடத்தாய் விளங்கிறாள் என்று குவெம்பு பாடுகிறார்.

7. பாடலின் முழுவடிவத்தில் கீழ்க்கண்ட பகுதியும் சேர்ந்தே உள்ளது. அரசு ஏற்றுக்கொண்ட வடிவத்தில் இவ்வரிகள் நீக்கப் பட்டுள்ளன.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

வேதாந்த தத்துவத்தில் பிரம்மத்தின் இயல்பாகக் குறிப்பிடும் சிறப்புத் தன்மையை தமிழின் மேல் ஏற்றிப் பாடுவதாக முதல் இரண்டு அடிகள் அமைந்துள்ளன. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடரும் அத்வைதியுமான சுந்தரம்பிள்ளை இத்தகைய ஒரு உவமையைக் கையாண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் உதரத்திலே உதித்தன என்ற கருத்தை இந்த மொழிகளைப் பேசுபவர்களிடம் போய் அப்படியே கூறினால் அது நிராகரிப்புக்கு உள்ளாகும். மொழியியல் ரீதியாகவும் அந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதன்று. ”கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் தமிழின் மகள்கள். அவர்கள் மூன்று பேரையும் பழங்காலத்தில் சில சமூகங்களில் இருந்த வழக்கப்படி சம்ஸ்கிருதம் என்ற ஒரே ஆண்மகனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டார்கள்” என்று ஏ.கே.ராமானுஜன் கூறிய உவமை இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 1f642 - 2026

ஆரியம் போல் உலகவழக்கொழிந்து என்று எழுதியிருப்பது, அறிஞரான சுந்தரம்பிள்ளையும் கால்டுவெல் உருவாக்கிய ஆதாரமற்ற திராவிட இனவாதத்திற்கும் மொழிக் காழ்ப்புணர்வுக் கொள்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. உண்மையில், ஆரியம் என்று இங்கு சுட்டப்படும் சம்ஸ்கிருத மொழி உலகவழக்கு என்று சொல்லப் படும் பாமரர்களின் பேச்சு வழக்குத் தளத்தில் எப்போதுமே இயங்கியதில்லை என்னும்போது, அது எப்படி அழிந்தொழியும்? பல சம்ஸ்கிருத நாடகங்களிலேயே கூட, இடையிடையே வரும் உரையாடல்கள் பிராகிருதம், அபப்ரம்சம் முதலான பேச்சு மொழிகளிலும், கவிதைகள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளதை நாம் காணமுடியும். அந்தப் பேச்சு மொழிகளும் இன்றைய வட இந்திய மொழிகளும் எல்லாம் கூட சம்ஸ்கிருதத்தின் வடிவங்களே. உண்மையில், சுந்தரம்பிள்ளை இந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. கீதையும் உபநிஷதங்களும் சாகுந்தலமும் மேற்கத்திய அறிஞர்களால் பயிலப் பட்டுக் கொண்டிருந்தன. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை. ஒரு மாபெரும் நகைமுரணாக, அவரது பெயரிலும், அவர் எழுதிய இந்தப் பாட்டிலுமே சுந்தரம், நீர், வதனம், பரதகண்டம், தக்கணம், திராவிடம், திலகம், வாசனை, உலகம், திசை, பரம்(பொருள்), உதரம், உதித்தே என்று இத்தனை சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. மேலும், இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழும் பெருமதங்களின் (இந்துமதம், பௌத்தம், ஜைனம்) ஆதார நூல்களை உள்ளடக்கிய ஒரு மொழி சிதைந்து ஒழிந்தது என்று சுந்தரம்பிள்ளை கருதியிருந்தால் அது அபத்தமானது. எனவே, அன்றைய தமிழ்நாடு அரசு, இந்த வரிகளை நீக்கிவிட்டு மற்ற வரிகளை மட்டும் அதிகாரபூர்வ வாழ்த்துப் பாடலாக வரையறை செய்தது மிகச் சரியான முடிவு.

8. அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்கு உருவம் கொடுத்து சிலை அமைத்தபோது, அதற்காக ஸ்தபதிகள் தேர்ந்தெடுத்தது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தைத் தான்.

அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப் போதுமினி திருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே.

என்று சரசுவதி அந்தாதி செந்தமிழ்ப் பாவை என்றே கலைமகளைக் குறிப்பிடுகிறது.

இங்ஙனம் இந்துப்பண்பாட்டுக் கூறுகளின் சிறந்த வெளிப்பாடாக அமைந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பிழையின்றிக் கற்றுக் கொண்டு அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் பாடி மகிழ்வோம்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம்.

கட்டுரை: ஜடாயு, பெங்களூர்

 

பான் எண் ஆதார் எண் இணைப்பு: யாருக்கெல்லாம் விலக்கு?

ஆதார் எண் – பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்
ஆதார் எண் – பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்

பான்‌ எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஜூலை மாதம் முதல் கட்டாயம் என வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் யாருக்கெல்லாம் விலக்கு என்ற பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு பின், 7 கோடியே 36 லட்சம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சுமார் 30 கோடி பான் எண் இருக்கும் நிலையில், இதுவரை அதில் நான்கில் ஒரு பகுதியினர்தான் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரிச்சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் யாருக்கு எல்லாம் ஆதார், பான் இணைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,

1. என்ஆர்ஐ
2. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்
3. 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள்
4. ஜம்மு & காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள்
– ஆகியோருக்கு ஆதார் எண் பான் எண் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மரபுகளை மீறி இறங்கிவந்து மோடியை கட்டித் தழுவி வரவேற்ற இஸ்ரேல் அதிபர்

modi israel president - 2026

டெல் அவிவ்:

இந்தியப் பிரதமர் மோடியின் பயணத்தை இஸ்ரேலியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அணுகியிருக்கின்றனர் என்பதை அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு எடுத்துக் காட்டுகிறது. நேற்று இஸ்ரேல் சென்று இறங்கிய மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, அவரைக் கட்டி தழுவி வரவேற்பளித்தார். மரபுகளை மீறி அவர் இறங்கி வந்ததுபோல், இஸ்ரேல் அதிபரும் இன்று இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை மீறி, நேரடியாக வந்து கட்டித் தழுவி வரவேற்றார்.

இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். வழக்கமான மரபுகளை மீறிய வகையில் பென் குரியான் விமான நிலையத்துக்கே நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இரு கரங்களை கூப்பியவாறு ‘தங்களது வரவு நல்வரவாகுக…’ என்று இந்தி மொழியில் கூறி மோடியை அன்புடன் வரவேற்றார். இந்தியா-இஸ்ரேல் இடையிலான கூட்டுறவுக்கு வானத்தை கூட எல்லையாக வைத்து அளவீடு செய்ய முடியாது என குறிப்பிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, உலகின் மிகப்பெரிய தலைவராக விளங்கும் மோடியுடன் இணைந்து நாம் இன்னும் அதிகம் சாதிக்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவரது வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம்’ என்று தெரிவித்தார். தீவிரவாதம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேதன்யாகுவுடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், எனது நண்பர் நேதன்யாகுவுடன் இணைந்து இஸ்ரேல் – இந்தியா இடையிலான நட்புறவுகளை எந்தெந்த துறைகளில் பலப்படுத்துவது என்பது தொடர்பாக விவாதிப்போம் என்று குறிப்பிட்டார்.

இன்று, இஸ்ரேல் அதிபரின் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை வழக்கமான மரபுகளை மீறிய வகையில் அதிபர் ரியுவென் ரிவ்லின், அவரது கார் நின்ற இடத்தின் அருகே சென்று கட்டித்தழுவி வரவேற்றார். முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை நினைவுகூர்ந்த ரிவ்லின், அங்கு பல சிறப்புக்குரிய இடங்களை கண்டுகளித்த நினைவலைகளை மோடியுடன் பகிர்ந்து கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார். இஸ்ரேலுடன் அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து இணைந்து செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தங்கள் நாட்டு அதிபர் மரபுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவி வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவதை பெரும்பாலான மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வு இங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியும் தம் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.