Home Blog Page 271

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம்!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடான, திருப் பரங்குன்றம், சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், மாதந்தோறும், திருவிழாக்கள் நடைபெறும்.

இவற்றில், முக்கிய திருவிழாவான, கார்த்திகை தீபத்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 26 ஆம் தேதி, கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, திருப் பரங்குன்றம், மலைமேல் உள்ள, மோட்ச மண்டபத் தூணில், ஐந்தரை அடி உயரம் உள்ள, செப்புக் கொப்பரையில், சிவாச்சாரியர்களால், கார்த்திகை தீபம் தயார் செய்யப்பட்டு, மாலை 6 மணி அளவில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இன்று காலை, உத்ஸவர் சந்நிதியில், சுப்பிரமணிய ஸ்வாமி, தெய்வானை அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 16 வகைத் திரவியங்களால், அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள, தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம், நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரவிழா: அரோஹரா கோசத்துடன் ஆயிரக்கணக்கானபக்தர்கள் சுவாமி தரிசனம்:

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது.

விழாவின் 5 ஆம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமி கோவர்தனாம்பிகையிடம் சக்தி வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலையில் சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி மேலரத வீதி, கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

பின்பு, சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழமுதிர்ச்சோலை – சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்!

pazhamuthircholai murugan soorasamharam - 2026
#image_title

அழகர்கோவில்: மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும்.

இங்கு, மாதந் தோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி மாதம் நடக்கும் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி பெருந் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 13ந் தேதி காலையில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். இதில், தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டுகிடாய், குதிரை, போன்ற வாகனங்களில் எழுந்தருளி சுவாமி மேள தாள இசையுடன், உள்பிரகாரத்திலேயே புறப்பாடு நடந்தது. முக்கிய திருவிழாவாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.

இதில், ராஜகோபுரம் முன்பாக மேளதாளம் முழங்க தீவட்டி சகல பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசுரனையும் சம்ஹாரம் செய்தார்.

பின்னர், தொடர்ந்து ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மாசூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் ,சஷ்டி மண்டபத்தில உற்சவர் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு மஹா தீபாராதனைகளும் நடைபெற்றது.

முன்னதாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது.

தொடர்ந்து , இன்று (ஞாயிற்றுகிழமை) காலையில் 11.15 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்துடன், கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹார விழாவினை பக்தர்கள் காண அழகர்கோவில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவை மதுரை, சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகெங்கை, உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலை ஏறி வந்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு. ராமசாமி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள், செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.

மதுரை கோயில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

soorasamharam madurai temple - 2026
#image_title

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.நேற்று மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, 6 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனம் நிறுவனர் செந்தில் குமார் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.

அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும்(கல்யாண விருந்து) அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன்,கோவில் பணியாளர்கள், பிரதோசம் கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீஸார் பாதுகாப்பு செய்திருந்தனர். தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதல் சுகாதாரம் கூடுதல் தெருவிளக்கு குடிநீர் வசதி செய்து இருந்தனர்.

விசாக நட்சத்திர கோயிலில் கந்த சஷ்டி விழா

மதுரை மாவட்டம் விசா நட்சத்திர ஆலயமான சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீபிரளயநாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சூரசம்காரத்தையொட்டி, அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் ஆகியோர் பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் இளநீர் சந்தனம் திருநீறு தேன் பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாரதனை காட்டப்பட்டு, தேன் கலந்த திணை மாவு பிரசாதமாக வழங்கப்பட்டது. எம். வி. எம் .குழுமச் சேர்மன் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்கத்தலைவர் டாக்டர் எம்.மருது பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி ,கணக்கர் பூபதி, உட்பட ஆலய பணியாளர்கள்  செய்திருந்தனர்.

சுற்றுலாவை மேம்படுத்த ரோந்துப் பணியில் சீன போலீஸ்: தாய்லாந்தில் கிளம்பிய கடும் எதிர்ப்பு!

chinese police in thailand - 2026
#image_title

ஆசிய அண்டை நாட்டிலிருந்து வரும் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக, சில பிரபலமான சுற்றுலாத் தலங்களில், சீன காவல்துறையினரை ஈடுபடுத்தும் திட்டத்தை தாய்லாந்து ஆலோசித்து வருகிறது. ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கொண்டிருந்தது தாய்லாந்து. ஆனால் கோவிட் பரவலுக்குப் பின், நாட்டின் மிக முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலா வருமானம் பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில், சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் ஒரு வழியாக, சீன போலீஸுடனான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், மூத்த காவல்துறை மற்றும் சுற்றுலா அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விவாதித்தார்.

தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் ஆளுநர் தபானி கியாட்பைபூல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன காவல்துறையை தாய்லாந்திற்கு கொண்டு வருவதற்கான ரோந்து திட்டம் குறித்து சீன தூதரகத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

“தாய்லாந்து எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது என்பதை இது காண்பிக்கும். இது சீன சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான பெரும் ஊக்கமாக இருக்கும். இதேபோன்ற திட்டம் கடந்த காலத்தில் இத்தாலியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது” என்று தபானி கூறினார்.

ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட மனித உரிமைக் குழுவான சேஃப்கார்ட் டிஃபண்டர்ஸ் அறிக்கைகளின்படி, அதிக எண்ணிக்கையிலான இரகசிய சீன காவல் நிலையங்கள் என்று அழைக்கப்படுபவை இந்த ஐரோப்பிய நாட்டில் தான் உள்ளது என்றும், 53 வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 102 இது போன்ற சீனாவின் ரகசியக் காவல் நிலையங்களைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளது.

ஆனால், தாய்லாந்தின் இந்த திட்டத்தை, அந்நாட்டின் இணைய பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக சாடியுள்ளனர். பெரும்பாலானவர்கள், வெளிநாடுகளில் உள்ள சீன எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து இரகசிய நடவடிக்கைகளுக்கு மற்றொரு இடமாக தாய்லாந்து மாறும் என்று கவலைகளைத் தெரிவித்தனர்.

ஆனால், இந்த சர்ச்சைக்கு பதிலளித்த தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே, தாய்லாந்தில் செயல்படும் சீன மாஃபியா குழுக்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் இது என்றும், தாய்லாந்தின் சுதந்திரம் அல்லது இறையாண்மையுடன் எந்தத் தொடர்பும் இதில் இல்லை என்றும் கூறினார்.

“சீன மாஃபியா குழுக்கள் தங்கள் நாட்டின் சொந்த காவல்துறையைப் பற்றி அச்சம் கொள்கிறார்கள். மேலும் சீன சுற்றுலாப் பயணிகள், தங்களை பாதுகாப்பாக கவனித்துக்கொள்வதற்காக சீன காவல்துறையினர் இருக்கும் போது பாதுகாப்பாக உணருவார்கள்” என்றார் சாய்.

உள்ளூர் சுற்றுலாத் துறையை மீட்டு எடுப்பதற்கான ஒரு திட்டமாகவும் அதன் முக்கியமான அம்சமாகவும் இது அரசால் கூறப் படுகிறது. சீன சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை பகிர்ந்து கொண்டதாலும், பாதுகாப்பற்ற சூழல் பயணிகளைத் தடுத்துள்ளதாலும், சீன பயணிகளைக் கவரும் வகையில் தாய்லாந்தின் அண்மைக் காலத்திய முயற்சியே சீன காவல்துறையினரை பணி அமர்த்தல் எனும் திட்டம். ஆனால் இது கொண்ட நோக்கத்தை விட்டு, வேறு திசையில் சென்றுவிடும் பேரபாயம் இருக்கிறது என்பதையே அந்நாட்டின் இணையதள பயனர்கள் காரசாரமாக அறிவுரையாகக் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை சீனப் பயணிகளின் வருகை மொத்தம் 2.8 மில்லியனாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் முழு ஆண்டு இலக்கான 4 மில்லியனிலிருந்து 4.4 மில்லியன் என்ற அளவு எட்ட முடியவில்லை என்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, செப்டம்பரில், தாய்லாந்து நிர்வாகம் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை ஐந்து மாத காலத்திற்கு தள்ளுபடி செய்தது. இந்த விசா தேவை விலக்கு, இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மே வரை நீட்டிக்கப்பட்டது.

கோயில் துறையிலயே கோபுர சின்னத்தை தூக்கிய அரசு! என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?!

hrnce logo and tiruchendur darshan fare issue - 2026
#image_title

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கட்டண விவகாரம் அநியாயத்துக்கு பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்ற சூழலில், அறநிலையத்துறை தனது கோயில் ரசீதுகளில் மசூதி படம் லோகோ வைத்து, பழைய கோயில் கோபுர சின்னத்தை காணாமல் போகச் செய்திருப்பது மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில், திண்டல் முருகன் கோயில் சூரசம்ஹார விழா அழைப்பிதழில் மசூதி முத்திரையும், இன்றைய தமிழக அரசு நிர்வாகத்துக்கு தொடர்பே இல்லாத கருணாநிதியின் 100வது பிறந்தநாள் முத்திரையும் அச்சடித்து வெளியிட்டுள்ளது சேகர்பாபுவின் அறநிலையத்துறை!

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தரிசன டிக்கெட்டுகள், கோயில் பூஜைக்கான ரசீதுகள் இவற்றில் மசூதி லோகோ இடம்பெற்றதால், இது என்ன ஹிந்து சமய அறநிலையத்துறையா இல்லை வேறெதுவுமா என்று மக்கள் கொதித்துப் போனார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டி கோயில்கள் பலவற்றை இடித்துக் கொண்டு வரும் தமிழக மாநில திமுக., அரசு, தங்கள் கொள்கை நாத்திகம் என்பதையும், தாங்கள் இந்து மத சார்பற்ற அரசு என்றும் கூறிக் கொண்டு கோயில்களை மட்டும் குறிபார்த்து இடிப்பதை பலரும் எதிர்த்துக் குரல் எழுப்பியே வருகின்றனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அழைப்பிதழில் கோபுர சின்னத்தை நீக்கி விட்டு கலைஞர் நூற்றாண்டு விழா சின்னம் இடம்பெற்றிருப்பது, அதிகார துஷ்பிரயோகம் என்று இந்துமுன்னணி, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து வெளியிட்டார்.

தமிழகம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிறந்த ஆன்மீக பூமி. தமிழகத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் வருங்கால சந்ததிகளுக்காக தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக வானுயர்ந்த ஆலயங்களை கட்டிவிட்டு சென்றார்கள்.அப்படி கட்டிச்சென்ற ஆலயங்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாடுகளை காத்து நிற்கிறது.

அதனால் தான் பாரத தேசத்தில் எங்கும் இல்லா அளவிற்கு வானுயர்ந்த ஆலயம் நிறைந்த மண்ணாக தமிழகம் விளங்குகிறது. அதன்படியே தமிழகத்தின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தின் கோபுரம் நம் முன்னோர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தை காத்து நிற்கும் ஆலயங்களின் கலை நயத்தையும் இன்னும் வெளிநாட்டினர் கூட வியந்து பார்க்கின்றனர் இப்படி உலக சிறப்புமிக்க நம் பண்பாட்டினை அழிக்கும் நோக்கத்தோடு தற்போதைய திராவிட மாடல் திமுக அரசு நமது கோபுரத்துடன் கூடிய தமிழக அரசு சின்னத்தை மாற்ற முயற்சித்து வருகிறது.

அதன் முதற்படியாக இந்து சமய அறநிலை துறையில் கோபுரத்துடன் கூடிய தமிழக சின்னத்தை அழித்துவிட்டு வேறு சினத்தை வைத்துள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை காத்து நிற்கும் ஆலயங்களின் சிறப்புகளை வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்ல விடாமல் அதனை அளித்து மாற்றும் நோக்கத்தோடு செயல்படும் இந்து சமய அறநிலையத்துறைக்கும், திராவிட மாடல் திமுக அரசுக்கும் இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

மேலும் ஈரோடு மாவட்டம் திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா அழைப்பிதழ் ஒருபுறம் கும்பு வடிவ சின்னமும் மறுபுறம் கருணாநிதி நூற்றாண்டு விழா எம்பளம் பதிக்கப்பட்டு அழைப்பிதழ் அடிக்க பட்டுள்ளது கந்த சஷ்டி விழாவிற்கும் திரு கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கும் என்ன சம்பந்தம் ஏற்கனவே திமுக அரசின் அமைச்சர்கள் திமுக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சேகபாபு அவர்களும் ஆ ராஜா அவர்களும் இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்து பேசி வருகின்றனர் இந்துக்கள் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் திரு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா எம்பலம் கோவில் அழைப்பில் அடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. உடனடியாக தமிழக அரசு மீண்டும் கோவில் கோபுரத்துடன் கூடிய முத்திரை பதித்த அழைப்புகளை அடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கின்றது – என்று கருத்து வெளியிட்டார்.

இவற்றின் மூலம், திமுக., நாத்திக அரசு கோயில்களைக் கொள்ளை அடிப்பதிலும், கொள்ளை அடித்த பணத்தை வாக்குக்கு லஞ்சமாகக் கொடுத்து வாக்குகள் பெற்று மோசடியாக ஆட்சிக்கு வந்து அமர்வதிலும் தாங்கள் நிபுணர்களே என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டி வருகிறது!

இந்நிலையில், திருச்செந்தூர் கட்டண உயர்வு விவகாரத்துக்கு எதிராக இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டமும், அப்போது போலீஸார் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, 200க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ததும் பெரும் அளவில் மக்களிடம் சென்றடைந்தது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தைச் சமாளிக்க, கட்டண உயர்வு என்பது வதந்தி என்ற ரீதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் சொல்ல, பதிலுக்கு இந்து முன்னணியினர், கட்டண ரசீதுகளை வெளியிட்டு, எது வதந்தி ? இதோ ஆதாரம் என்று முழங்கினார்கள்.

திருச்செந்தூரில் ஆயிரம் ரெண்டாயிரம் வசூலிக்கவில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என சில 200ரூ அல்லக்கைகள் வதந்தி பரப்பி வருகிறது. காசுக்காக சொந்த மதத்தையும் தெய்வத்தையும் கோவிலையும் பாழ்படுத்துவதை நியாயப்படுத்தும் அந்த இழி பிறவிகளுக்காக இதோ ஆதாரம்
14.11.23 ல் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ 2000/- வசூல்
14.11.23ல் அபிஷேக தரிசன கட்டணம் என்ற பெயரில் ரூ 3000/- வசூல் செய்யப்படுவற்கான ரசீது நகல். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது தெரியாமல் பதிவிடும் சில முட்டாள்களுக்காக… – என்று குறிப்பிட்டு, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் சமூக வலைத்தளங்களில் பதிவுகளைச் செய்திருந்தார்.

இதன் பின்னர், திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தியதில், போலீஸ் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கைது ஆனதால் பரபரப்பு நிலவியது.

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தக் கோரி கோஷம் எழுப்பினர்.

அப்போது, கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. இந்த வீடியோ பதிவுகள் பொதுமக்களிடம் அதிகம் பரவியதால் முருக பக்தர்களிடம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணைத் தூவி சாபம் விட்டுச் சென்றனர். என்றாலும், இந்தக் கட்டண விவகாரத்தில், நெறிமுறைகளை மீறி, ரசீது எதுவும் இல்லாமல், அதிகாரிகளே ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தனர் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்த போதும், நடந்த சம்பவங்களுக்கு வீடியோ பதிவுகள் சாட்சியாகின.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரமே, ஒரு கலாசாரச் சின்னமாக முன்னோர்களால் நிறுவப் பட்டு, அது தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ளது. இதனைச் சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசும் திமுக., ஆட்சியாளர்கள், அரசுச் சின்னத்திலேயே சனாதனம் இடம்பெற்றிருக்கிறதே, அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், கோயில்களும் தெய்வமும் இடம்பெறவேண்டிய அறநிலையத்துறையின் இலச்சினையையே மாற்றி, கோயில் கோபுரத்தை அகற்றி, அதில் மசூதியை வைத்திருக்கிறது தமிழக அரசு என்று குறிப்பிட்டு, இப்போது அண்ணாமலை என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ஆமாம்! என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை!?

‘சர்வாதிகாரி’ சீன அதிபரின் பொருந்தாப் பொய்கள்!

joe biden and xi jinping - 2026
#image_title

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று ஒரு சொலவடை நம் நாட்டில் உண்டு. இங்குள்ள லோக்கல் அரசியல்வாதிகளே பொருந்தாப் பொய்களை உண்மைகளென சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், அவர்களுக்கு அப்பனாக இருக்கக் கூடிய சீனக் கம்யூனிஸ்ட் தலைவர், உண்மைகளையா பேசிவிடப் போகிறார்?! அப்படி ஒரு பின்னணிச் சூழலை இன்று உலகுக்குக் காட்டியிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

“சீனா ஒரு போதும் போரையோ மோதலையோ துாண்டவில்லை; இதுவரை வெளிநாட்டு நிலங்களை ஒரு அங்குலம் கூட நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை,” என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியது இன்று பேசுபொருளாகி இருக்கிறது.

ஆசிய- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு அமெரிக்காவில் நேற்று முடிவடைந்தது. இதில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்…

“சீனாவில் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து 70 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக எந்த நாட்டுடனும் எந்தவிதமான மோதலையோ, போரையோ தூண்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் இதுவரை ஒரு அங்குலம் கூட எந்தவொரு வெளிநாட்டு நிலத்தையும் எங்கள் நாடு ஆக்கிரமித்தது இல்லை,” என்றார்.

அவரது கூற்று உண்மையா என்பது குறித்து சீனாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு வெளியில் சொன்னால் சீன அதிபரின் கருத்தை உண்மை என ஏற்கலாம்.

கடந்த 2020 – கொரோனா கால கட்டத்தில், கொரோனா பரவலுக்குக் காரணம் சீனா என்று உலகமே கடுப்பில் இருந்த போது, இந்திய எல்லை அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவலில் ஈடுபட்டு, அதைத் தடுக்க முற்பட்டதால், இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. என்றாலும், சீனா வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அதில் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டது. ஒருவேளை இந்தியா தரப்பில் சீன ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இரு தரப்பு மோதல் ஏற்பட்டிருந்தால், சீனா இப்படியா அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கும்?! அதிலிருந்தே சீன அதிபரின் கூற்று பெரும் பொய் எனத் தெரிகிறதல்லவா?

இந்தியப் பகுதிகளில் அத்துமீறி சீன வீரர்கள் ஊடுருவியதுதான் இந்த மோதலுக்குக் காரணம். இதனால் இரு தரப்பிக்கும் இடையே போர் மேகம் சூழும் அபாயம் ஏற்பட்டது. இதை அடுத்தே இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. சீன வீரர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழையாமல் இருந்தால், இந்தச் சண்டை ஏற்பட்டே இருக்காதே! ஆனால் சண்டை நடந்தது உண்மை, தன் தரப்பு வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை என்றுதானே சீனாவும் கூறியது.

நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு நேர்மறையான கருத்துகளை சீன அதிபர் தற்போது கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தைவான், கொரியா, மங்கோலியா என அண்டை நாடுகளிலும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் எந்த வெளிநாட்டு நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை என ஜி ஜின்பிங் நெஞ்சறிந்தே பொய் சொல்லியிருக்கிறார்.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சர்வாதிகாரி’ என விமர்சித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ”சீன அதிபர் மீதான இந்த வகையான பேச்சு மிகவும் தவறானது. இது பொறுப்பற்ற முறையில் அரசியலைக் கையாள்வதைக் காட்டுகிறது. இதை சீனா எதிர்க்கிறது. சீனா – அமெரிக்க உறவுகளில் முரண்பாட்டை விதைப்பதற்கும், அந்த உறவை சிதைப்பதற்கும் தவறான நோக்கங்களுடன் சிலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இது எப்போதும் வெற்றி பெறாது,” என்று குறிப்பிட்டார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்கா சென்ற நிலையில், அவரை “சர்வாதிகாரி” என்று ஜோ பைடன் விமர்சித்ததை சீனா அமெரிக்க எதிர்ப்பு அரசியலாக்கியது.

சீன அதிபரை சந்தித்த சூடு அடங்குவதற்குள், அவர் ஒரு சர்வாதிகாரி என்று ஜோ பைடன் விமர்சித்தார். இது இப்போது சீனாவின் கையால், சர்வதேச அரசியலில் பேசுப்பொருளாகி உள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே நட்புடன் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம், சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்துப் பேசினார். இவை எல்லாம், இரு நாட்டு உறவை மேலும் கசப்பாக்கியது.

ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம், அமெரிக்கா மற்றும் சீனாவை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தின.

இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற (APEC) ஏபெக் பொருளாதார உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, கலிபோர்னியா சென்ற ஜி ஜின்பிங், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அசாதாரண சூழல், தைவான் பிரச்னை, காலநிலை மாற்றம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாட்டு ராணுவ உறவுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், கலிபோர்னியாவில் அந்நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய ஜி ஜின்பிங், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், அதனை அமெரிக்காவும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார். அதாவது நாங்கள் செய்யும் குற்றச் செயல்களை நீ கண்டுகொள்ளக்கூடாது, உன் குற்றச் செயல்களை நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம் என்ற இருதரப்பு புரிந்துணர்வை பொதுப்படையாக வெளிப்படுத்தினார்.

முன்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், “அவர் ஒரு சர்வாதிகாரி|” என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போதைய சீன அதிபருடனான சந்திப்பு குறித்து ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த போது, “சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத் தான் கருதுகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், “ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி” என்று மீண்டும் உறுதிபடக் கூறினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, சீன அரசாங்கம் முற்றிலும் மாறுபட்டது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் சீன அதிபரை ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டுவதும், அதற்கு பதிலளிக்கும் விதத்தில், நாங்கள் சர்வாதிகாரித்தனம் செய்யவில்லை, அண்டை நாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றெல்லாம் நெஞ்சறிந்து சீன அதிபர் பொய் சொல்லுவதும் அமெரிக்க மண்ணில் இப்போது கேலிக்குரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.


ஆளுநருக்கு எதிரான மசோதா: அதிமுக., பாஜக., வெளிநடப்பு; ஸ்டாலின் தீர்மானம் ‘குரலில்’ நிறைவேற்றம்!

tn secretariat - 2026
#image_title

ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய பத்து தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக., பாஜக., உறுப்பினர்கள் வெளிநடப்புக்குப் பின், குரல் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை, தமிழ்நாடு சட்டசபை சிறப்புக்கூட்டம் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு சட்டசபை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த பங்காரு அடிகளாருக்கும், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.

அதன் பின் ஸ்டாலின் பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் என்று கூரினார்.

இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை என்று பேசிய ஸ்டாலின், சில இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும்… என்று கூறி, சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்:

  • சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு.

ஆளுநர் பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநர்கள் மாறுவார்கள், நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம்… என்று பதிலளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தனித்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

மசோதாக்களில் உள்ள சட்ட சிக்கல்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அமைச்சர் கூறவேண்டிய கருத்துகளை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையை கூட்டியது ஏன்..? என்று, அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

“ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு, “மசோதா நிலுவையில் இருப்பதாக அர்த்தம் இல்லை, அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அர்த்தம்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.

“ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என்று, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அப்போது, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளீர்களா…?”- என்று பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். “நிச்சயமாக உண்மையாக மாநில சுயாட்சி கொள்கையோடு வழக்கு தொடர்வோம்; மீதமுள்ள சட்ட முன்வடிவுகள் குறித்தும் வழக்கு விசாரணையில் எடுத்துக் கூறுவோம்” என்று மாநில முதல்வர் ஸ்டாலின் கூறியதை அடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநரின் செயல்பாடு, பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில், அதிமுக வெளிநடப்பில் ஈடுபட்டதால், ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக., ஆதரவு உறுப்பினர்களுடன் ஆளும் கட்சியின் தீர்மானமாக நிறைவேறியது.

மக்கள் பிரச்னையை திசை திருப்ப ஆளுநரைப் பற்றி பேசுகின்றனர்: நயினார் நாகேந்திரன்

ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்த பாஜக., சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மக்கள் பிரச்னையைத் திசை திருப்ப ஆளுநரைக் கையில் எடுக்கின்றனர் திமுக., வினர் என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மறைக்கவே ஆளுநரை விமர்சனம் செய்கின்றனர். அனைத்து குடும்பப் பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் எனக் கூறினர். ஆனால், எத்தனை பேருக்கு கொடுத்துள்ளனர். பாதி பேருக்கு கொடுக்கவில்லை. மக்கள் பிரச்னையை கவனிக்காமல் ஆளுநர் பிரச்னையை கையில் எடுக்கின்றனர். முதல்வருக்கு வேந்தர் பதவி என்ற கோரிக்கை தேவையான ஒன்றா? மக்கள் பிரச்னை பற்றி பேசாமல் தேவையின்றி ஆளுநர் குறித்து பேசுகின்றனர்… என்று கூறினார்.

யாதவ மகாசபை தேவநாதன் அலுவலகத்தின் வெளியே பேனர் அகற்றம்: இந்து முன்னணி கண்டனம்!

devanathan yadav poster - 2026
#image_title

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையின் அத்துமீறல்.. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் அவர்களின் அலுவலுகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் நள்ளிரவில் அகற்றம் செய்யப் பட்டதை, வன்மையாகக் கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

நேற்று நள்ளிரவிற்கு மேல் திருட்டு தனமாக தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் அவர் வைத்திருந்த பதாகையை காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றுவது அநாகரிகமான செயல். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறை திமுகவினரின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது வேதனையான உண்மை.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் அவர்கள் ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளி திரிந்தார். பல அநாகரிகமான செயல்களை செய்தபோதும் காவல்துறையில் கழக காக்கா கூட்டத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் திமுகவினர் உயர் காவல்துறை அதிகாரிகளை கூட தங்கள் வேலைக்காரர்கள் போல டீ, சிகரெட் வாங்கி வரும் வேலைக்காரர்களாக நடத்தினார்.

இத்தகைய அராஜக போக்கால் வெறுப்படைந்த காவல்துறையில் இருந்த நேர்மையான சுயமரியாதை உள்ள அதிகாரிகள் எமெர்ஜென்சி காலத்தில் தங்கள் வெறுப்புணர்வை ஸ்டாலின் உள்பட திமுகவினர் மீது தீர்த்துக் கொண்டனர் என்ற செய்தி அப்போது வெளிவந்தது.

இன்று திமுகவுக்கு எதிராக கருத்திடுப வர்கள் மீது போடு வழக்கு என்ற முறைகேடான உத்தரவுக்கு அடிபணிந்து, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும் நிலையில் நிர்பந்திக்கப்படுகிறது. இது ஜனநாயக விரோதமான,கருத்துரிமைக்கு எதிரான திமுகவின் பாசிசம்.

டாக்டர் தேவநாதன் அவர்கள் வைத்திருந்த பதாகையில் கடவுள் இல்லை என்பவன் முட்டாள் என்றும்
ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி என
பொதுவாகத் தான் வைத்திருந்தார். அது பல ஆண்டுகளாக இருந்தும் உள்ளது. அதனை நள்ளிரவில் வந்து அகற்றியது சட்டவிரோதமான செயல். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் திமுகவினர் காவல்துறையை தவறாக நிர்பந்தப் படுத்தி காவல் துறையினரின் கண்ணியத்தை சீர்குலைக்கிறார்கள்.

காவல்துறை ஈரல் கெட்டு விட்டது என எதிர்கட்சியாக திமுக இருந்த போது அதன் தலைவர் கருணாநிதி கூறிப்பிட்டார்.

இன்று ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆளும் கட்சியான திமுகவிற்கு விசுவாசம் என்ற விஷம் காவல்துறையில் பரவி அதன் ஈரல் கெட்டு, சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாமல் சீரழிந்து விட்டது என்பதை கண்கூடாக காண்கிறோம். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட கௌரவமான தமிழக காவல்துறை திமுகவின் வட்ட செயலாளர் அளவில் வேலை செய்கிறது என்று பொதுமக்கள் பேசும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே காவல்துறை தனது நிலையை உணர்ந்து இனி இதுபோன்ற அநாகரிகமான சட்ட விரோத முறைகேடான செயல்களுக்கு துணைபோகக்கூடாது என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விடியல் ஆட்சி; டரியல் ஆச்சி! ஆடியில் மனு கொடுத்தால் ஐப்பசியில் செடி!

1746440 mkstalin - 2026

விடியல் ஆட்சியில் ஆடியில் மனுக் கொடுத்தால் ஐப்பசியில் மிளகாய் செடி வழங்கும் தோட்டக்கலைத்துறை : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

மிளகாய் செடி வழங்கிடக் கோரி ஆடி மாதம் மனுக் கொடுத்தால் ஐப்பசி 15ஆம் தேதி செடிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்குகின்றனர். இதனால் பயிர்கள் பருவம் தவறி வளராமல் முற்றிலும் சேதமடைந்து விட்டது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண் அதிகாரி நாச்சியராம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு :
மதுரை மாவட்டத்தில் உள்ள கிருதுமால் நதியிலிருந்து 46 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். தற்போது நீர்வரத்து பாதையில் தூர்வார வேண்டும் என விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

பின்பு, பேசிய ஆட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசுத்துறை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமும் தூர் வாரலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த காலங்களில் விவசாயிகள், மிளகாய் நாற்று கேட்டால், 45 நாட்கள் வளர்த்த செடிகளை வழங்குவார்கள். இதனால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், தற்போது, கேட்டதை விட குறைவாகவும், 20 நாள் மட்டுமே வளர்ந்து செடிகளை வழங்குகின்றனர். அவை வளர்வதே இல்லை. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை இந்த ஆண்டு சந்தித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் விளைச்சளை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், தோட்டக் கலைத்துறையில் உள்ள புதிய அலுவலர்கள், ஏனோ, தானோ என வேலை செய்கின்றனர். தரமற்ற செடிகளை வழங்குகின்றனர்.

விதையாக வழங்கினால் கூட விவசாயிகள் வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது பருவம் தவறி விட்டது. இனி செடிகள் வழங்கியும் பலனில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய விவசாயி ஒருவர், மிளகாய்ச் செடி வேண்டுமென ஆடி மாதம் மனு வழங்கினேன். ஆனால், ஐப்பசி 15ம் தேதி செடிகளை வழங்கினர். அதை நிலத்தல் ஊன்றும் போதே உடைந்து விட்டது. ஒரு செடிகூட வளரவில்லை. இதனால், எனக்கு பெரிய நஷ்டம் என்றார்.

பின்பு, பேசிய ஆட்சியர், இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் 95 மெ.டன் மட்டுமே நடந்துள்ளது. எனவே, கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விஜயமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.

மானாவாரிப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை சரிவர நிறுவனங்கள் வழங்குவதில்லை. செயற்கைகோள் மூலம் பயிர்களை ஆய்வு செய்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், நன்கு பயிர்கள் வளர்ந்து இடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.

அப்போது பேசிய ஆட்சியர், இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் நடத்தி கோரிக்கை சரி செய்யப்படும் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி அனைத்து விவசாயிகளும் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.