நெல்லை: தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்கள் பலவற்றில் மிகவும் சிறப்புடைய தாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ்வது திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். பாடல் பெற்ற தலம். புராதனமான தலம். மன்னர்கள் பலர் திருப்பணிகள் செய்த பிரமாண்ட தலம். திருநெல்வேலி ஊரே, நெல்லையப்பரை மையமாகக் கொண்டே திகழ்கிறது.
விவசாயத்துக்கும் நெல்லையப்பருக்கும் பெரும் தொடர்பு உண்டு. நெல்லுக்கு வேலியிட்ட பிரான், மழையில் இருந்து விவசாயியின் விதை நெல்லைக் காத்த பிரான் என்றெல்லாம் வணங்கப் பட்டாலும், இங்கே விளைந்து கதிர் அறுத்து நெல்லை மரக்காலில் இட்டு அளக்கும் போது, நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் முதல் மரக்கால் நெல் அளக்கப்படும். தாமிரபரணி நதி நீர் விவசாயத்துக்கு மட்டுமேயாக இருந்த காலங்களில் செழிப்புடன் இருந்த நெல்லை மாவட்டம் இப்போது தடுமாறுகிறது. பயிர் செழிக்கத் தந்த நெல்லையப்பருக்கு பயபக்தியுடன் நெல்லை திருப்பி அளித்த விவசாயிகளுக்கு இன்று நெருக்கடி. காரணம், ஆலயத்தை அவலமாக வைத்திருப்பது என்று குற்றம் சாட்டுகின்றனர் பக்த சபையினர்.
இந்தக் கோயிலுக்கு இறையிலி நிலங்கள் பல உண்டு. குறிப்பாக ஆபரணங்கள். அருகில் இருக்கும் மற்ற புகழ்பெற்ற தலங்களிலும் உத்ஸவருக்கு நகைகள் அணிவிக்கிறார்கள். பொதுவான விழாக்காலங்களில் உத்ஸவ விக்ரஹங்களுக்கு நகைகள் அணிவித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால், எல்லா வசதிகளும் இருந்தும், வெகு காலமாகவே நெல்லையப்பர் காந்திமதி அம்மன் சுவாமிகளுக்கு நகைகள் அணிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்கள் பக்தர்கள்.
இது குறித்து பக்தர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்…
திக்கெலாம் புகழும் திருநெல்வேலியுறை செல்வர்…. ஆனால் அவருக்கு அணிவிப்பதோ ஒற்றை பவள மாலை!
ஐந்து கோடி பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடந்தது நெல்லையருக்காகவா ? இல்லை திருடுவதற்காகவா?
தங்கமும் வைரமும் இழைத்த நகைகள் இருக்கின்றனவா அல்லது திருடப்பட்டுவிட்டதா?
1992ல் இருந்து நகைகளை அம்மையப்பரும் அணிந்து காணவில்லை, அவர்களுக்கு அணிவித்து பக்தர்களும் கண்டதில்லை.
அறநிலையத் துறை திருடித் தின்னத்தான் நகைகளை சாற்றவில்லையா?
முன்னாள் டிரஸ்டி செல்லையா பிள்ளை சாற்றிய சுவாமி வெள்ளி அங்கியோ, கைங்கர்ய சபா செய்த தஙகக் காசு மாலை மற்றும் அம்பாள் வெள்ளி அங்கியோ என… எந்த ஆபரணமும் சாற்றப்படாதது ஏன்?
உள் கோவில் திருவிழாவான வசந்த திருவிழாவிற்கும் நகை சாற்றாதது ஏன்?
கோடீஸ்வரி காந்திமதி அம்மா இப்படி ஒற்றைச் சங்கிலியுடன் வருவது ஏன்?
உண்மையான நகைகள் இருக்கிறதா இல்லை திருடப்பட்டுவிட்டதா?
1974ல் பொதுமக்களிடம் கணக்கு காண்பிக்கப்பட்டதைப் போல் ஏன் இன்று செய்யப்படவில்லை..? அறநிலையத் துறையின் திருட்டு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமா? – என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள் பக்தர்கள்.