December 7, 2025, 12:29 AM
25.6 C
Chennai
Home Blog Page 10

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!

railway news - 2025
#image_title

பொங்கல் பயண முன்பதிவு இன்று துவங்கியது.துவங்கிய சில நிமிடங்களில் பல ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர் பலர்.

தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று (நவம்பர் 10) முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.

60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு

தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2026 ம் வருடம் – ஜனவரி 15 வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை

நவம்பர் 14 —– ஜனவரி 13- 2026 —- செவ்வாய்

நவம்பர் 15 —– ஜனவரி 14-2026 —– புதன் – போகிப் பண்டிகை

நவம்பர் 16 —– ஜனவரி 15-2026 — வியாழன் – பொங்கல்

நவம்பர் 17 — ஜனவரி 16-2026 — வெள்ளிக்கிழமை — மாட்டுப்பொங்கல்

நவம்பர் 18 — ஜனவரி 17-2026 — சனிக்கிழமை — உழவர் திருநாள்

நவம்பர் 19 — ஜனவரி 18-2026 — ஞாயிறு

நவம்பர் 20 — ஜனவரி 19-2026 — திங்கள்

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கிப்போதே முன் பதிவு செய்து பயணிக்க தயாராகுங்கள்.

தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா?

election voting - 2025

தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

படி1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்

தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://elections.tn.gov.in/index.aspx க்குச் செல்லவும்.

“Special Intensive Revision – 2002/2005” என்பதை கிளிக் செய்யவும். ( https://elections.tn.gov.in/SIR_2026.aspx )

https://elections.tn.gov.in/ElectoralRolls.aspx

இப்போது, “Search your name in electoral roll” (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) https://electoralsearch.eci.gov.in/ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 2: தேடல் விருப்பங்கள்

உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்:
EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை)
விவரங்கள் மூலம் தேடுதல்
மொபைல் எண் மூலம் தேடுதல்

விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல்
உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.
உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும்.
மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து ‘தமிழ்நாடு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும்.
“Search” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்
உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம்.
“Search by details” என்பதைக் கிளிக் செய்யவும்.
மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்:
உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்)
பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி)
பாலினம்
மாவட்டம் மற்றும் தொகுதி
Captcha குறியீட்டை நிரப்பி, “Search” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல்
உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும்.
“Search by Mobile” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
Captcha குறியீட்டை நிரப்பி, “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.
அந்த OTP எண்ணை உள்ளிட்டு, “Search” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும்.

  • Adv Surya Suresh

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான் (2)!

artificial intelligence - 2025
#image_title

பிரிட்ஜோப் காப்ராவின் நேர்காணல் தொடர்ச்சி
— கார்லோ பிஸ்ஸாட்டி —

— தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார் —

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்….

ஓபன் மேகஸினில் வந்த அவருடைய நேர்காணலில் இருந்து… இரண்டாம் பகுதி!

முதல் பகுதி படிக்க... மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான்!


bridge cobra - 2025

கேள்வி : நம்முடைய மனதில் , நீங்கள் வடிவியலின் சிறை (Prison of geometry) என்று, சொல்லுகின்ற அழிவு திட்டங்கள் எப்படி வந்து சேர்கின்றன? அந்த கணத்தை விளக்க முடியுமா ?

பதில் : 1970 களில் தாவோ ஆப் பிஸிக்ஸ் வெளியானது. 1960 இல் தோன்றிய மாற்று கலாச்சாரம் என்ற உலகளாவிய வலை பின்னலில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அதுதான் 1970 களில் புதுயுக இயக்கத்துக்கு வழிகோலியது . உலகை பற்றிய புதிய பார்வை, புதிய ஆன்மீகம், புதிய மதிப்பீடுகள், புதிய வாழ்க்கை முறைகள், பாலின விடுதலை, போதை மருந்துகள் என்று லட்சியபூர்வமான இயக்கங்கள் தோன்ற வழி வகுத்தது. அவற்றிற்கு அரசியல் நோக்கம்/ பரிமாணம் இல்லை.

1980 களில் பசுமை/ சூழலியல் இயக்கங்கள் மூலம் அரசியல் பரிமாணம் ஏற்பட்டது. 1983 இல் ஜெர்மானிய பசுமைக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதன் பிறகு அந்த இயக்கம் உலகமெங்கும் பரவியது. 1986 இல் கோர்ப்பச்சேவின் செயல்களால் 1980 களின் இறுதியில் புதுயுக இயக்கங்கள் திருப்புமுனையை சந்தித்தன. சமுதாயத்தை முற்றிலும் வேறு விதமாக வடிவமைப்பதற்கான எல்லா விஷயங்களும் எங்களுக்கு கிடைத்தன.

அப்போதுதான் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. அது உலகின் பல பகுதிகளுடனான தொடர்பை, இணைப்பை அதிகரித்தது. ஆனால் ,அதே வேளையில், பணம் பண்ண வேண்டும் என்கின்ற புது வகையான முதலாளித்துவத்தை உலகில் உருவாக்கியது. பணம் சம்பாதிப்பதா அல்லது ஆரோக்கியம் , சமூக நீதி, பொருளாதார சமத்துவம் போன்ற மனித விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்ற தேர்வு முன்வந்தபோது செல்வம் சேர்ப்பதற்கே முன்னுரிமை என்ற முடிவை கணிணிகள் மேற்கொண்டன.

எனவே புதுவகையான உலகியல் உருவானது. ‘உலகமயமாக்கல்’ என்பது அந்த மாயச் சொல். எல்லோரும் அதை பயன்படுத்த தொடங்கினர். உலகமயமாக்களில் பல நல்ல, பயனுள்ள அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் உள்ள கார்ப்பரேட் மற்றும் பொருளாதார உலகமயமாக்கல் மிகவும் கேடு விளைவிக்க கூடியவை. நான் அங்கம் வகித்த மாற்று கலாச்சார இயக்கங்களுக்கு புதிய உலகமயமாக்களை எதிர்கொள்ள ஒரு தசாப்த்திற்கும் மேலான காலம் தேவைப்பட்டது. 1990 களில் இறுதியில் சியாட்டிலில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை எதிர்த்து உலக சிவில் சமுதாயம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தான் நாங்கள் 1980 களில் இருந்த நிலைக்கு மீண்டும் வந்தோம்.

தாவோ ஆப் பிசிக்ஸ் உருவாக்கிய , நான் அங்கம் வகித்த இயக்கம், எதிர்காலத்தைப் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியது என்று சொல்லலாம். ‘மற்றொரு உலகம் சாத்தியம்தான்’ என்ற கோஷத்துடன் உலக சமுதாய அமைப்பின் சார்பில் சர்வதேச அளவில் பல மாநாடுகள் நடத்தப்பட்டன. அது ஒரு உலக கண்ணோட்டம். அந்த உலக கண்ணோட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இதுவொரு மரபின் தொடர்ச்சி எனலாம்.

கேள்வி : திட்டமிட்ட ரீதியிலான உங்கள் கண்ணோட்டத்தின்படி பர்மெனிடேஸூக்கும் ஹெராக்களிட்டஸூக்கும் இடையேயான முரண்பாடு – இருப்பது × விழைவு – விஷயத்தில் ஆசிய தத்துவங்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமா ?
( இருவரும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகள். ஒருவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது ஒன்றுதான் என்றார். மற்றவர் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றார். – மொழிபெயர்ப்பாளர்)

பதில் : தாவோ ஆப் பிசிக்ஸில் ஹெராக்ளிட்டஸை நான் கிரேக்க தாவோயிஸ்ட் என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் அவரிடம் அந்த கருத்துக்கள் வலுவாக இருந்தன. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் அடியில் ஒரு வழிமுறை உள்ளது. அந்த வழிமுறைகளின் மூலமாகத்தான் அந்த கட்டமைப்பே வெளிப்படுகிறது. எனவே அந்த இயக்க விசை பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

நவீன அறிவியலையும் கீழைய ஆன்மீகத்தையும் இணைக்கின்ற இரண்டு பெரிய அம்சங்களை என்னுடைய நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஒன்று, எல்லா பொருள்களும் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டு, உலகின் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பு. இரண்டும் வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டங்கள். வாழ்க்கையை ஒரு வழிமுறை. வாழ்க்கை ஒரு வலை பின்னல். நீங்கள் பர்மெனிடெஸ் மற்றும் ஹெராக்ளிட்டஸ் என்று சொன்ன போது இருப்பு, விருப்பு என்ற சுவாரஸ்யமான சிந்தனை என் மனதில் எழுந்தது.

திட்டமிட்ட ரீதியில் வாழ்க்கையை பார்த்தோமானால் வளர்ச்சிதை மாற்றமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பதை பார்க்கலாம். சக்தியின் தொடர் ஓட்டம் மூலமாகவும் வேதிப்பொருள்களின் வினைத் தொகுப்பின் மூலமாகவும் பொருள்களின் வலை பின்னலும் வளர்சிதை மாற்றமும் நிகழ்கின்றன. இரண்டு அம்சங்கள் இதில் உள்ளன. ஒன்று, தொடர்ச்சியான ஓட்டம். இரண்டு, வலை பின்னல் . வலைப் பின்னல் தான் கட்டமைப்பு. சக்தி ஓட்டம் தான் வழிமுறை. ஒருவகையில் தொன்மையான இருப்பு , விருப்பு என்ற இரட்டையை இது பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த இரண்டின் இணைப்புதான் வளர்ச்சிதை மாற்றத்துக்கு வழிகோலுகிறது . இந்த கோணத்தில் யோசிக்கும் போது இதுபற்றி மேலும் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.

கேள்வி : இந்த கருத்தை மேலும் விரிவாக்கி நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது செயற்கை நுண்ணறிவு – ஏ ஐ – வந்துள்ளது. இது உலக அளவில் வேறொரு வகையான வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்ட தொழிற்புரட்சியை கடந்து நாம் புதிய தொழில்நுட்பமான அல்கரிதம், சர்வர்கள், இப்போது ஏ ஐ க்கு வந்துள்ளோம். ஏ ஐ என்பது இன்னொரு கருத்தியல் சிறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது மனித சமுதாயத்தை, மனிதனின் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு என்று கருதுகிறீர்களா ?

பதில் : இரண்டுமாகவும் அது இருக்கலாம். எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து அது சிறையாகவும் மாறலாம். இப்போது அது பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது, உற்பத்தி வழிமுறைகளை நெறிப்படுத்துவது அதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பதை பார்க்கும்போது, அது மேலும் அதிக பணம் பண்ணுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதார லாபத்தில் கவனத்தைக் குவிப்பது ஆபத்தானது.

எல்லா உயிரினங்களின் வாழ்க்கையிலும் உள்ள இயற்கையான அறிவிலிருந்து வேறுபட்டது இந்த ஏ ஐ என்கின்ற செயற்கை நுண்ணறிவு. வாழும் அறிவு என்பது எல்லா வாழ்க்கை முறையிலும், உயிரினங்களிலும், உள்ளது. அது (சொல்ல முடியாத ஆனால்) உணர்வதையும், உயிரின் இயல்பையும், ஒழுங்கையும் கொண்டது. இந்த உலகில் இருப்பதையும், சுற்றி வருவதையும், உயிர் பிழைத்து இருப்பதையும், மேலும் வளர்ச்சியை , மாற்றத்தை அடைவதையும் தனது முக்கிய தன்மையாக கொண்டுள்ளது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

ஏ ஐ யின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும்போது அது நம்முடைய இயல்பான அறிவு செயல்பாட்டில் , வாழும் முறையில் குறுக்கிடும் அபாயம் உள்ளது. சற்றே சிந்தித்துப் பாருங்கள், இப்போது நாம் சமுதாயத்தில் ஆரோக்கியத்தை விட பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் இல்லை, ஆனால் பெரும்பாலான நேரங்களில் பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பணம் சம்பாதிப்பதற்காக, அதிக பணம் சம்பாதிப்பதற்காக இயற்கை சூழலை நாம் அழிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் நம் வாழ்க்கையே இயற்கை சூழலைச் சார்ந்து தான் இருக்கிறது. வெளியில் இருந்து நம்மை பார்த்தீர்களானால், நம்முடைய நாகரீகமே மனித நலனை விட பணம் சம்பாதிப்பதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பதாக, அதற்காக இயற்கை சூழலியலையே அழிப்பதாக இருப்பதை காணலாம் . இது மிகவும் அறிவார்ந்த செயலாக, நாகரீகமாக கருத முடியாது. எனவே வாழும் அறிவுக்கு செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே மோதல் இருக்கிறது.

கேள்வி : இன்றுள்ள எண்ம புரட்சி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஒளியில் தாவோ ஆப் பிசிக்ஸை மீண்டும் எழுவதுவாக இருந்தால் அதில் எதை அப்படியே தக்க வைத்திருப்பீர்கள்? எதை மாற்றி எழுத முனைவீர்கள் ?

பதில் : எதற்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது என்பது மாறிவிடும். அந்த நூலில் பூட்ஸ்ட்ரேப் (Bootstrap) கொள்கையின் மீது கவனத்தை ஈர்த்திருந்தேன். அது இயற்பியலில் இப்போது பின்னகர்ந்து விட்டது. இப்போது சரக்கோட்பாடு (Sting Theory) என்ற நேர்த்தியான அதே வேளையில் சிக்கலான கோட்பாடு இயற்பியலின் மையமாக உள்ளது. அது பற்றிய விவாதத்தை முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புகிறேன்.

ஆனால் கீழைய ஆன்மீகம் மற்றும் அதன் இணைகளை பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டேன். இப்போதும் அந்த நூலை புரட்டிப் பார்க்கும்போது அதில் உள்ள அஸ்வகோஷ் , நாகார்ஜுனரின் மேற்கோள்களின் அழகு என்னை ஈர்க்கிறது. அவை காலத்தை மீறி நிற்பவை.

அந்த நூலின் கடைசி பாராவை இன்று ஏறத்தாழ ஒரு கோட்பாடாகவே படிக்க முடியும். ‘ உலகத்தைப் பற்றிய இயற்பியலின் பார்வை இன்று நம்முடைய நவீன சமுதாயத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணலாம். இயற்கையில் ஒத்திசைவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் இருப்பதை பார்க்கலாம். அது நம்முடைய சமுதாயத்தில் இன்று பிரதிபலிக்கவில்லை. அந்த சமநிலையை கொண்டு வர வேண்டுமென்றால் சமூக, பொருளாதார கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் தேவை. வார்த்தையின் உண்மையான பொருளில் சொல்ல வேண்டுமென்றால் , கலாச்சார புரட்சி ஏற்பட வேண்டும்.’ என்னை பொறுத்தவரையில் தாவோ ஆப் பிஸிக்ஸின் உண்மையான தொடர்ச்சி அதுதான்.

நன்றி : ஓப்பன் மேகஸீன்

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான்!

artificial intelligence - 2025
#image_title

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ ஐ யின் குறுக்கீடு ஒரு அபாயம்தான்

பிரிட்ஜோப் காப்ராவின் நேர்காணல்
— கார்லோ பிஸ்ஸாட்டி —
— தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார் —

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

bridge cobra - 2025

கேள்வி : மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையேயான விவாதத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இன்றும் நிலைத்திருப்பது எப்படி ?

பதில் : அந்த புத்தகத்தை படித்துவிட்டு மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களை சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். இயற்பியல் உலகில் எந்திரத்தனமான உலகியல் பார்வை மாறி முழுமையானதாகவும் சூழலியல் சார்ந்ததாகவும் மாறி விட்டிருந்ததே அந்த உணர்வுபூர்வமான எதிர் வினைக்கு காரணம். அது இப்பொழுது அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டு வருகிறது.

‘ நான் நீண்ட காலமாக நினைத்திருந்ததை ஆனால் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் இருந்ததை நீங்கள் சரியாக சொல்லி இருந்தீர்கள்’ என்றும் ‘இந்த புத்தகம் என் வாழ்க்கையை மாற்றி விட்டது’ என்றும் மக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கிறேன். வாழ்க்கையை பற்றிய சீரான பார்வை என்று நான் சொல்லும் புதிய உலக கண்ணோட்டத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

உலகை பற்றிய இந்த ஒருங்கிணைந்த பார்வை உருவாகி வருவதும், கிழக்கத்திய தத்துவங்கள் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்பு ஆகியவை இந்த நூல் நீடித்திருப்பதற்கு காரணம்.

கேள்வி : தாவோ ஆப் பிசிக்ஸ் நூல் மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மீகத்தை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதே. ஆசிய தத்துவங்களை மேற்கத்திய அறிவியல் முறைகள்படி விளக்க முடியாவிட்டால் அவற்றின் சாரம் குறைந்து விடுவது மட்டுமின்றி அவற்றை கற்றுக் கொள்வதும் கடினமாகி விடும் இல்லையா ?

பதில் : தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமே விளக்க வேண்டும் என்றால் நீங்கள் சொல்லியது போல் அது கடினமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் தாவோ ஆப் பிசிக்ஸ் நூலை எழுதியபோது அறிவுபூர்வமாக மட்டுமன்றி உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அதில் ஈடுபட்டேன். அதனால்தான் அந்த நூலுக்கு மக்கள் பெருமளவில் உணர்வுபூர்வமாக பதில் வினையாற்றினர்.

இயற்பியலுக்கும் கிழக்கத்திய ஆன்மீகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பற்றி விவாதித்த போது அது பற்றி மிக ஆழமான நிலையில் அவற்றை நான் அனுபவித்தேன். எனவே அது வெறும் கொள்கை அளவிலான அலசல் அல்ல. மேலும் இது மக்களை விலகிச் செல்ல செய்யும் என்றோ அல்லது அவர்களால் புரிந்து கொள்வது கடினமாகிவிடும் என்றோ நான் கருதவில்லை.

ஆன்மீக மரபுகளை அனுபவத்தால் மட்டுமே விளக்க முடியும் என்பது அதன் சாரத்தை குறைப்பதற்கு மாறாக ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் ஆக்கி விடுகிறது. பொதுவான கலாச்சார பயணத்தில் இதுவொரு இயல்பான செயல்பாடு.

1960 அல்லது 1970 களில் நீங்கள் ஒரு கம்பெனி வேலையில் இருந்து கொண்டு , எனக்கு யோகா வகுப்பு அல்லது தியான வகுப்பு அல்லது கீகோங் வகுப்பு இருக்கிறது. அதனால் கம்பெனியில் நடக்கும் கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னால், சிரித்துக்கொண்டே உங்களை வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள். இன்று அப்படியல்ல . அதுவொரு வழக்கமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவது இப்பொழுது மிகவும் விரிவானதாக ஆகியுள்ளது.

கேள்வி : ஆனால் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசிய தத்துவ பயிற்சிகளான யோகா மற்றும் தியானத்தை பலரும் உலகியல் லாபங்களுக்காக – தியானம் பயிலும் மேனேஜர்கள் மேலும் திறமையானவர்களாக, யோகாசனம் செய்யும் மக்கள் மேலும் போட்டியில் நிலைத்து நிற்க என்று உலகியல் லாபங்களுக்காக – பயில்வதாக தெரிகிறது. தாவோ ஆப் பிஸிக்ஸ் நூலை படித்த வாசகர்கள் பலரும் ஆன்மீகத்தின் பயன்பாட்டுத் தன்மையை அந்த நூல் சிதைக்கிறது என்று கருதுகிறார்கள். இதை நீங்கள் ஏற்கிறீர்களா? இந்த தவறான புரிதல் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லையா ?

பதில் : அமெரிக்காவில் உள்ள சில வலதுசாரி குழுக்கள் இந்த புதுயுக கருத்துக்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மைதான். அதே வேளையில் சூழலியல் மாற்றங்கள் தொடர்பான அருணோதய இயக்கம், விடியலுக்கு வெள்ளிக்கிழமை போன்ற பெரிய இளைஞர்களின் இயக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் செனட்டார் பர்னி சாண்டர்ஸின் பணிகள் ஆக்குபை அமைப்பின் தாக்கம் போன்றவை எல்லாம் உலகில் எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று மக்களை கருதச் செய்கின்றன. அவர்கள் இந்த பூவுலகின் அழகை பாதுகாக்க விரும்புகிறார்கள். இங்குள்ள வாழ்வனைத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் பிளவுவாத சக்திகளின் எழுச்சி, குறுகிய தேச நலன் சார்ந்த செயல்பாடுகள், வன்முறை, போர் ஆகியவற்றின் வேகமான எழுச்சிகளால் மேற் சொன்ன மாற்று இயக்கங்கள் வலிமை பெற முடியாமல் ஆகி வருகின்றன. இது மிகவும் வலி தரக்கூடிய விஷயமாக இன்று இருந்தாலும் இது கடந்து போகும், இது மாற்றத்திற்கான காலம் என்றே எனக்கு தெரிகிறது. இவை சுழற்சி வட்டங்கள் போல். நாம் இதிலிருந்து வெளியேறி விடுவோம். குறுகிய கால அரசியல் செயல்களை விட மாற்றத்திற்கான பரிணாம வளர்ச்சியின் செயல்பாடுகள் வலிமையானவை.

கேள்வி : முன்னெப்போதையும் விட இப்போது குவாண்டம் இயற்பியலை அதிகமாக கற்கிறார்கள். ஆனாலும் சமுதாயத்தில் நியூட்டனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் இன்னமும் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வகையில் இணைந்து விடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏன் அது பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தவில்லை ?

பதில் : நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு நீங்கள் மருந்து, மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை பாருங்கள். அவை மனித உடலை ஒரு இயந்திரமாக பார்க்கின்றன. நோய் என்றால் அந்த இயந்திரத்தின் ஏதோ ஒரு பாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளது. அதை வேதி பொருள்களை கொண்டு மாற்ற வேண்டும், சரி செய்ய வேண்டும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும். இப்போது ஆரோக்கியம் தொடர்பான ஒருங்கிணைந்த முழுமையான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டமே வலுவாக உள்ளது.

அதேபோல் நீங்கள் நிர்வாகங்களை பாருங்கள். மேனேஜர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு இயந்திரமாக பார்ப்பதும், அதை நுட்பமாக மேம்படுத்த முயல்வதையும் பார்க்கலாம். இந்த மனப்பான்மை நீண்ட காலமாக இருப்பதால் அது வலிமையாக இருக்கிறது. இயந்திரமாக பார்க்கும் மாதிரியில் ஏராளமாக நிதியும் அறிவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இதை மாற்ற முனைவது கடுமையான எதிர்ப்பை கிளப்புகிறது.

இப்போதுள்ள எரிசக்தி நிறுவனங்கள் இந்த உலகையே அழிக்கின்ற வர்த்தக மாதிரிகளை பின்பற்றும் விகாரமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த மோசமான நிலை தொடர காரணம் அவர்கள் அதில் ஏராளமாக முதலீடு செய்துள்ளது தான். அவர்கள் தங்கள் முதலீட்டை இழக்க விரும்பவில்லை.

இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டத்தில் இருந்து மாறி சீரான, சரியான உலக பார்வைக்கு மாறுவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் சுலபமாகவும் இலகுவாகவும் நிகழ்ந்து விடாது. என் வாழ்க்கையில் அறிவியல் புரட்சிகளை பார்த்திருக்கிறேன். அதற்கு பழமையான உலக பார்வையின் அடிப்படையில் எதிர்வினைகளும் எதிர்ப்பு இயக்கங்களும் எதிர்த்தாக்குதல்களும் நடந்துள்ளன.

நம்முடைய உலக பண்பாட்டில் பரிணாம மாற்றம் ஏற்படுவதை தற்காலிக மற்றும் குறுகிய கால அரசியல் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆனால் இந்த மாற்றத்திற்கான வழி கடினமானது. அது சுலபமான பயணம் அல்ல. கரடு முரடான, கூரான கற்கள் நிரம்பிய சாலையது….

தொடர்ச்சிமனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான் (2)!

காலம் காலமாக காங்கிரஸ் கிளப்பும் ஆர்எஸ்எஸ்., மீதான அவதூறுகள்; மோகன் பாகவத் ‘பளிச்’ பதில்!

mohan bhagavat rss leader - 2025

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சர்சங்கசாலக் (தலைவர்) மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் கஸ்வா-இ-ஹிந்தை எதிர்க்கிறார்கள், ஆனால் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளின் ஒரு பிரிவை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறினார்.

பெங்களூரில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 100 Years of Sangh Journey: New Horizons’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மோகன் பாகவத் பேசினார். இந்த விரிவுரை அமர்வின் போது, ஆர்.எஸ்.எஸ் குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…

நாட்டில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ அல்லது கஸ்வா-இ-ஹிந்தை (இந்தியாவிற்கு எதிரான புனிதப் போர் என்று கூறப்படுவது) அங்கீகரிக்கவில்லை, ஆனால் சமூகத்தில் கணிசமான ‘கட்டர்பந்திகள்’ (அடிப்படைவாதிகள்) உள்ளனர். “நல்லவர்களே, அவர்களை கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து பிரிக்க வேண்டும்,” என்றார்.

நம் வீடுகளில் ‘சம்ஸ்காரம்’ – பண்பாடு – நடத்தையின் மதிப்பை நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது நமது பொறுப்பு. நாம் தடுமாறிவிட்டோம், அதன் விளைவு ‘லவ் ஜிஹாத்’ வெற்றி. இரண்டாவதாக, அனைவரையும் (அ) ஒற்றை அடைப்புக்குள் வைக்காதீர்கள். 

கஸ்வா-இ-ஹிந்த் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளிகளை இழிவுபடுத்தும்  ஒரு பிரிவும் முஸ்லிம்களிடையே உள்ளது. அவர்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை தொடர்பில் வைத்திருக்க வேண்டும். 

கணிசமான அடிப்படைவாதிகள் இருந்தாலும், ‘லவ் ஜிஹாத்’ அல்லது இதுபோன்ற பிற நிகழ்வுகள் வெளிப்படும் போதெல்லாம், முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரே அடைப்புக்குள் வைக்கிறோம். அது நல்லதல்ல. நாங்கள் இந்துக்கள், நாங்கள் அப்படி நினைக்கவில்லை. முழு சமூகத்தையும் குறை கூறினால் அடிப்படைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

“‘சம நீதி’ (சமரசக் கொள்கை) அவசியம். நாம் நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, ‘தண்ட் நீதி’ (தண்டனை கொள்கை) அவசியம்.  நல்லவர்கள், கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து நாம் பிரிக்கப்பட வேண்டும்.  நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும். அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். நாம் அனைவரையும் சமமாக நடத்த முடியாது. வெவ்வேறு மக்களுக்கு சிகிச்சை வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் இதைச் செய்ய வேண்டும்… என்றார். 

சிறுபான்மையினருக்கான சமூக நலத் திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த் அவர்   “சங்கத்தில் தனிப்பட்ட வகையில் பிராமணருக்கு அனுமதி இல்லை. சங்கத்தில் வேறு எந்த சாதியினருக்கும் அனுமதி இல்லை. முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை… கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை.  சைவர்களுக்கு அனுமதி இல்லை… ஹிந்துவுக்கு மட்டுமே அனுமதி. வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம்கள்… கிறிஸ்தவர்கள் சங்கத்திற்கு வரலாம்… உங்கள் சிறப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், நீங்கள் ‘ஷாகா’விற்குள் வரும்போது, ​​நீங்கள் ‘பாரத மாதாவின்’ மகனாக வருகிறீர்கள்… பரந்த இந்து சமூகத்தின் உறுப்பினராக வருகிறீர்கள்” என்றார் அவர.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில்,  ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தையும்  அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த  மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ்., தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்., அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்.,ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. எங்கள் ‘குரு தக்ஷிணா’வுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கங்கள் எங்களை அங்கீகரித்துள்ளன. பதிவு செய்யப்படாததற்கு பல விஷயங்கள் உள்ளன. சனாதன தர்மம்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ஸில் காவிக் கொடியே குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நாங்கள், வாக்கு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்க மாட்டோம். சமூகத்தை ஒற்றுமைப்படுத்த சங்கம் பாடுபடுகிறது. அரசியல் இயற்கையிலேயே பிரிவினையை ஏற்படுத்தும். இதனால், அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம். 

நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். குறிப்பாக, நாம் ஒரு சக்தியாக இருப்பதால், சரியான கொள்கையை ஆதரிக்க எங்கள் ஆற்றலை பயன்படுத்துவோம். தனிநபரையோ, கட்சியையோ இல்லை. கொள்கையை மட்டும் ஆதரிப்போம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்பினோம். இதனால், கோயில் கட்டுவதற்கு ஆதரவானவர்களை ஆர்எஸ்எஸ்., உறுப்பினர்கள் ஆதரித்தனர். பாஜக.,தான் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருந்தால் அக்கட்சிக்கு தொண்டர்கள் வாக்களித்து ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்.

எங்களுக்கு எந்தவொரு கட்சி மீதும் தனிப்பாசம் ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ்., கட்சி என ஏதும் இல்லை. எந்தக் கட்சியும் எங்களுடையது அல்ல. அனைத்து கட்சிகளும் பாரதிய கட்சிகள் என்பதால், எங்களுடையது. நாங்கள் ராஷ்ட்ர நீதியை ஆதரிக்கிறோம். ராஜநீதியை அல்ல. மக்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் உரிமை. ஆனால், நாங்கள் பெருமைப்படும் ராஷ்ட்ர நீதிக்கு ஆதரவாக எங்களது கொள்கையை செலுத்துவோம்… என்று தெளிவுபடுத்தினார்.

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சமீபத்திய குரல் குறித்து பகவத் கூறினார்: “நாங்கள் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. எங்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் உள்ளன… விமர்சனம் எங்களை மேலும் பிரபலமாக்குகிறது. நாங்கள் இப்போதுதான் கர்நாடகாவில் (அதை) பார்த்திருக்கிறோம். அவர்கள் மேலும் கேள்விகளை எழுப்ப நாங்கள் ஊக்குவிப்போம்.” என்றார்.

கோவாவில் நடந்த அயர்ன்மேன் போட்டியில் பங்கேற்று அண்ணாமலை அசத்தல்; பிரதமர் மோடி பாராட்டு!

annamalai in goa iron man event - 2025

கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று, இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளார். 

கோவாவில் அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு.சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது இந்தப் போட்டி.

இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். இதில் அவர், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் 55:20 நிமிடங்களில் கடந்தார். தொடர்ந்து 90 கி.மீ., தொலைவு சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களை எடுத்துக் கொண்டு, இலக்கை எட்டினார் அண்ணாமலை.

இந்தப் போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலை தனது சமூகத் தளப் பக்கங்களிலும் இவற்றைக் குறிப்பிட்டு, உடல் திறன் குறித்த தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். 

பாஜக எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ளார். இருவரும் இணைந்து இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளனர். அவர்கள் பங்கேற்ற படங்களையும் சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஃபிட் இண்டியா குறித்த தனது எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது கட்சியின் இளைய உறுப்பினர்கள் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இதில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். 

பிரதமரின் பதிவினைப் பகிர்ந்து அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவிக்கும் வ்கையில்,  என் அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐயா, #FitIndia இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. 

உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதத்திற்கான பகிரப்பட்ட நோக்கத்தில் அனைத்து தரப்பு குடிமக்களையும் ஒன்றிணைக்கிறது. உங்கள் நீடித்த உத்வேகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஐயா, இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்கு எங்கள் சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். – என்று குறிப்பிட்டிருந்தார்.

சபரிமலை சிறப்பு ரயில்கள்; நாந்தெட் – கொல்லத்துக்கு ராஜபாளையம் வழியாக!

railway news - 2025
#image_title

மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் முதல் ஜனவரி வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மகரஜோதி விழாவுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சபரிமலை சீசனை முன்னிஷட்டு கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தென்காசி வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு அறிவித்துள்ளது.இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி நடந்து வருகிறது.

அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் – கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கமாக கொல்லம் – H.S. நாந்தேட் இடையே வருகின்ற 22, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரு மார்க்கமாகவும் 9 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கேரளா ஆந்திரா மஹாராஷ்டிரா வழியாக ஆன்மீக பெருநகரங்களை இணைத்து HSநான்டெட் மஹாராஷ்டிரா-கொல்லம்(கேரளா) சபரிமலை சிறப்பு இரயில்(07111/07112) அறிவித்துள்ளது சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வைகுண்ட ஏகாதேசி, திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் மற்றும் தேர்வு விடுமுறை பயணங்களுக்கு இந்த வண்டியைப் பயன்படுத்தலாம்.

புனலூர் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை இரயில் வழித்தடத்தில் முதன்முறையாக மஹாராஷ்டிரா, திருப்பதி மற்றும் தெலங்கானா உட்புற மாநகரங்களை இணைத்து இயக்கப்படுகிறது.

நான்டெட்-கொல்லம்(07111):
இயக்க தேதி
20,27.11.25,
04,11,18,25.12.25 &
01,08,15.01.26 – 9 நடைகள்

நான்டெட் புறப்பாடு: 10.00
காச்சிகுடா(ஹைதெராபாத்) புறப்பாடு: 16.00
திருப்பதி புறப்பாடு: 08.35
திருவண்ணாமலைபுறப்பாடு: 12.42
கொல்லம் வருகை: 03.00

கொல்லம்-நான்டெட்(07112)இயக்க தேதி
22,29.11.25,
06,13,20,27.12.25 &
03,10,17.01.26 – 9 நடைகள்

கொல்லம் புறப்பாடு: 05.40,
திருவண்ணாமலை வருகை: 22.20
திருப்பதி வருகை: 02.40*
காச்சிகுடா(ஹைதெராபாத்) வருகை: 14.30
நான்டெட் வருகை: 21.30

வகுப்புகள்:
ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏ/சி, General ஆன்மீக நகரங்கள் இணைப்பாக
புனலூர்(சபரிமலை) திருவண்ணாமலை, திருப்பதி, கர்னூல்(ஸ்ரீசைலம் மற்றும் அஹோபிலம் மேடம்), நான்டெட்(ஹஸுர் சாஹிப் குருத்வாரா)

முழு வழித்தடம்: கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, ராஸம்பேட்டா, கடப்பா, ஏர்றகுண்ட்ல, தாடிபத்ரி, குத்தி, தோன், கர்னூல், கடவால், வன்பற்றி ரோடு, மெஹபூப் நகர், ஜாட்செர்லா, ஷாத் நகர், காச்சிகுடா(ஹைதராபாத்), போலாரம், மெட்ச்சல், கம்மாரெட்டி, நிஜாமாபாத், பாசர், தர்மாபாத், முட்கெட், HS நான்டெட். ஆகும்.

இந்த ரயிலுக்கு நல்ல முன்பதிவு இருந்தால் மேலும் பெங்களூர் சென்னையில் இருந்து சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வந்தே மாதரம் 150: வங்கத்தில் இருந்து பாரத தேசத்துக்கு…!

vandemadaram 150a - 2025

வந்தே மாதரம் பாடலின் ஓரிரு சொற்களை மாற்றியமைத்து, தேசம் முழுமைக்கும் வலம் வர வைத்தவர் ரவீந்திரநாத் டாகுர். அவரே வங்கத்தில் மட்டும் சுருங்கிக் கிடந்த இந்த மந்திரத்தை தேசிய எழுச்சிக்குக் காரணி ஆக்கினார். 

பங்கிம் சந்திரரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் சரணத்தில், பிரிவுபடாத வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, பங்கிம் சந்திரர், ஸப்த கோடி கண்ட கலகல நினாதகராலே… நிசப்த கோடி புஜைர் த்ருத கர கரவாலே…. கே போலே, மா துமி அபலே என்று எழுதியிருந்தார். அதாவது ஏழு கோடி சிரங்கள் தரை பணிந்து உனைப் போற்றுதலும், ஈரேழு கோடித் தோள்கள் கரம் உயர்த்தி உனைப் பாடுதலும் எனும் பொருளில் எழுதியிருந்தார்.

1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் முதன்முறையாக அவரே வந்தே மாதரத்தைப் பாடினார். மாநாட்டுக்கான கீதத்தை வடிவமைத்த டாகுர், தம் மாகாணத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதத்தை ஓரிரு வரிகளில் திருத்தம் செய்து பாடினார்! ஏழு கோடி என்பதை பாரத தேசத்தின் முழுமைக்குமான மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு கோடி கோடி கண்ட கல கல நினாத கராலே.. கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே… என்று மாற்றினார். கே போலோ, மா துமி அபலே என்பதை எடுத்தார். இன்னும் சிற்சில மாற்றங்களுடன்… வந்தே மாதரம் காங்கிரஸ் அவையில் டாகுராலேயே பாடப் பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பும் பேரெழுச்சியும்தான், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஜீவனுள்ள போராட்டமாக மாற்றி, இந்தத் தாய் நாட்டை வணங்குகின்ற, ‘தாயை வணங்குவோம்’ எனும் கோஷத்துடன் வந்தே மாதரம் எனும் சக்திமிகு மந்திரமாய் உருப்பெற்றது.

1896 செப்.28ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் டாகுரால் பாடப்பட்ட பின்னர் 1905ல் கவிஞர் சரளா தேவி சௌதுராணி பனாரஸ் காங்கிரஸ் அமர்வில் தேசியப் பாடலாக இதனைப் பாடினார். லாகூரிலிருந்து, லாலா லஜ்பத் ராய் வந்தே மாதரம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். 1905ல் ஹிராலால் சென் தயாரித்த முதல் அரசியல் படத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

இந்தப் பாடல், பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தேசியக் கொடியில் குறியீடாக வந்தேமாதரம் என்ற எழுத்துகள் சேர்க்கப்பட்டன. அதுவே இந்த மந்திரச் சொல்லின் மரியாதையை உணர்த்தும்!

“வந்தே மாதரம்” என்பது மக்கள் உள்ளங்களில் வெறும் பாடலாகப் புகவில்லை; தேசபக்தி, பக்தி மற்றும் பாரதீயர்கள் தங்கள் தாய்நாட்டுடனான வலுவான உணர்ச்சிப் பிணைப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இதனைக் கண்டனர். 

இந்தப் பாடலின் வரிகள் தாய்நாட்டுக்கு அஞ்சலி செலுத்துகின்றன. பாரதத்தை தெய்வீகத் தாயின் உருவமாகச் சித்திரித்து, அதன் அழகு, வலிமை, கம்பீரத்தை மகிமைப்படுத்தின. தொடக்கத்தில் டாகுரால்  இசையமைக்கப்பட்டு, மக்களின் உணர்வுகளைப் பேசும் ஒரு மெல்லிசையாக வலம் வந்தது. பின் பல வகைகளாகவும் விளக்கங்களாகவும் பரிணமித்து, இறுதியில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புணர்வின் அடையாளமாக மாறியது.

பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24, 1950 அன்று, நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய வந்தே மாதரம் பாடலை ஜன கண மன பாடலுடன் சமமாக மதிக்க வேண்டும் என்றும், அதற்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சபையில் ஒரு பிரகடனத்தை முன்வைத்தார். எனவே தேசியவாதத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறிய இந்தப் பாடல், அன்று இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டு, தேசிய கீதத்துடன் சமமான அந்தஸ்தைப் பகிர்ந்து கொண்டது.

வந்தேமாதர கீதத்தின் சுருக்கப்பட்ட பல்லவி இன்றும் காலை வேளைகளில் வானொலியில் இசைக்கக் கேட்கலாம். இன்றும், தேசிய நிகழ்வுகளில், வந்தே மாதர கீதம், நம் கலாச்சாரம் மற்றும் தேசிய வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து பாடப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள், அரசு விழாக்கள், பள்ளிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உட்பட தேசிய நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. மகாகவி பாரதி வந்தேமாதர கீதத்தின் தமிழாக்கமாக இரு வடிவங்களை அளித்தார். இதன் பெருமையை இந்த 150ம் ஆண்டில் மேலும் வளர்க்கச் செய்வோம்!

150ஆம் ஆண்டில்… பாரதத்தின் மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்’! 

vandemadaram 150a - 2025

நம் தேசத்தின் சுதந்திர உணர்ச்சிக்கும் ஒற்றுமை உணர்வுக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாக  அமைந்தது ‘வந்தே மாதரம்’ என்ற ஒற்றைச் சொல். எனவே இது நம் தேசத்தின் தாரக மந்திரமாக மாறிப்போனது.  இந்த மந்திரத்தை நமக்கு அளித்த ரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. இந்த மந்திர சொல் அமைந்த கீதமே நம் தேசிய கீதமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கீதம் பிறந்த 150வது ஆண்டை இப்போது கொண்டாடுகிறோம். 

கடந்த மாத மன் கிபாத் – மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வினை  நாட்டு மக்களிடம் நினைவூட்டினார். 

பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம் எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது.  வந்தேமாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்!!  இயல்பான வகையிலே இது நமக்கு பாரத அன்னையின் தாய்மையை உணரச் செய்கிறது.  இதுதான் பாரத அன்னையின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது.  கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டு மக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது. தேசபக்தி, பாரத அன்னையிடம் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும்.  பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இதனை இயற்றினார்.  வந்தேமாதரம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது.  மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா: என்று வேதங்கள் முழங்கி, பாரதீய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.  பங்கிம் சந்திரர், வந்தேமாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.

நவம்பர் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உத்ஸவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டிருந்தாலும், 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டாகுர் முதன்முறையாக இதனைப் பாடினார். வந்தேமாதரம் பாடலில் கோடிக்கணக்கான நாட்டுமக்கள் எப்போதுமே தேசபக்தியின் எல்லையில்லா உணர்வுத் திவலைகளை உணர்ந்தார்கள்.  நமது தலைமுறைகள் வந்தேமாதரத்தின் சொற்களிலே பாரதத்தின் உயிர்ப்புடைய, மகத்தான ரூபத்தைக் கண்டிருக்கிறார்கள். சுஜலாம், சுஃபலாம், மலயஜ சீதளாம், சஸ்ய சியாமளாம், மாதரம். வந்தே மாதரம்.

நாம் இப்படிப்பட்ட பாரத தேசத்தைப் படைக்க வேண்டும்.   நமது முயற்சிகளில் என்றைக்குமே கருத்தூக்கமாக வந்தே மாதரம் இருந்துவரும்.  அந்த வகையிலே நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க வேண்டும்.  வரவிருக்கும் தலைமுறையினருக்காக இந்தக் கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.  இனிவரும் காலங்களில் வந்தேமாதரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இருக்கும், தேசத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும்.  நாட்டுமக்களான நாம் அனைவரும் வந்தேமாதரம் என்ற இந்த பெருமைமிகு பாடலின் பொருட்டு, உள்ளெழுச்சியோடு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  உங்களுடைய ஆலோசனைகளை #VandeMatram150 என்பதிலே அனுப்புங்கள். நாம் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை வரலாற்று பூர்வமானதாக ஆக்கும் பணியில் ஈடுபடுவோம்.

– பிரதமரின் இந்த அறைகூவலே வந்தே மாதர கீதத்தின் தன்னெழுச்சியை நமக்குப் புரியவைத்துவிடும்! 

ஆங்கிலேயன் விளையாடிய கிரிக்கெட் மைதானமும் வந்தேமாதர தோற்றமும்!

vandemadaram 150a - 2025

வந்தே மாதர கீதத்தின் தோற்றமே சுவாரஸ்யமான பின்னணியில் நிகழ்ந்ததுதான்! குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வே இதன் தோற்றுவாயாக இருந்தது என்பது ஆச்சரியமான வரலாறு.  

அப்போது பெர்ஹாம்பூரில் நியமிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்ட உதவி ஆட்சியரான பங்கிம் சந்திரர் ஒரு பல்லக்கில் தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது பல்லக்கை சுமந்து சென்றவர்கள், அங்கிருந்த கிரிக்கெட் மைதானத்தின் உள் வழியே சென்று சாலையை அடைவார்கள் என்று அவருக்குத் தெரியாது. அதே நேரம், மைதானத்தில் பிரிட்டிஷ் வீரர்கள் கர்னல் டஃபின் தலைமையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தப் பல்லக்கால் விளையாட்டு தடைப்பட்டது. இது ஒரு மோதலுக்குக் காரணமானது.

கோபத்தில் கர்னல் டஃபின் பல்லக்கை நிறுத்தி, பங்கிம் சந்திரரை கீழே இழுத்து, அவரை அடித்து விட்டார். இந்த விரும்பத்தகாத நிகழ்வு, புகழ்பெற்ற சிலருக்கு முன்பு நடந்ததால் பங்கிம் சந்திரர் பெரிதும் அவமானப்பட்டதை உணர்ந்தார். முதல்வர் ராபர்ட் ஹேண்ட், ரெவரெண்ட் பார்லோ, நீதிபதி பென்பிரிட்ஜ், லால்கோலாவின் ராஜா ஜோகிந்திர நாராயண் ராய், துர்காசரண் பட்டாச்சார்யா, பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர் மற்றும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் அங்கே இருந்தனர்.  

1873 டிச.16 – மறுநாளே பங்கிம் சந்திரர் கர்னலுக்கு எதிராக முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மாவட்ட நீதிபதி விண்டர் சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்தார். பலரும் அச்சத்தால் அந்த மோதலை மறுத்தனர். ஆனால்  முதல்வர் ராபர்ட் ஹேண்ட் மோதலை ஒப்புக் கொண்டார். ராஜா ஜோகிந்திர நாராயண் ராயும் துர்காசரண் பட்டாச்சார்யாவும் பங்கிம் சந்திரரை ஆதரித்தனர். எனினும் நீதிபதி சாட்சியத்தை முரண்படச் செய்தார். இதனால் நீதிமன்றம் அடுத்த விசாரணையை 1874 ஜனவரி 12க்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் உள்ளூர்வாசிகள், ஐரோப்பியர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அதனால் தனி அறையில் விசாரணையைத் தொடர நீதிபதி அழைத்தார். அங்கே வழக்கை வாபஸ் பெறுமாறு நிர்பந்திக்கப் பட்டார் பங்கிம் சந்திரர். ஆனால் அவரோ குறைந்த பட்சம் அனைவர் முன்பும் கர்னல் மன்னிப்பு கோரினால் வாபஸ் பெறுவதாகக் கூறினார்.  இதன்படி திறந்த நீதிமன்றத்தின் முன் கர்னல் டஃபின் மன்னிப்பு கேட்டார். 

1874 ஜன.15ல் அமிர்தபஜார் பத்ரிகையில் இது செய்தியாக வெளியானது. அதில், “கர்னலும் பங்கிம் சந்திரரும் பரஸ்பரம் அறிந்திராத அன்னியர்கள். கர்னல் அவரை அவமதித்தபோது அவர் யார் என்று கர்னலுக்குத் தெரியாது. பின்னர் பங்கிம் சந்திரரின் நிலைப்பாடு குறித்து அறிந்து கர்னல் டஃபின் தனது வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். உள்ளூர்வாசிகள் மற்றும் ஐரோப்பியர்கள் என சுமார் 1000 பேர் கூடியிருந்த திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.” என்றது செய்தி. 

விஷயம் அத்துடன் முடியவில்லை. கர்னல் டஃபின் மன்னிப்புக் கேட்க கைகளைக் கூப்பிய போதெல்லாம், அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் கைதட்டிச் சிரித்து கத்தத் தொடங்கினர். இப்போது கர்னல் தாம் அவமானப்பட்டதாக உணர்ந்தார். அது உடனிருந்த ஐரோப்பியர்களை கோபப்படுத்தியது. பங்கிம் சந்திரரை தீர்த்துக் கட்டும் செயலில் அவர்கள் இறங்கினார்கள். ராஜா ஜோகிந்திர நாராயண் ராய்க்கு இந்த ரகசியத் தகவல் கிடைத்ததும், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் பங்கிம் சந்திரரை அவர் லால்கோலாவுக்கு அழைத்தார்.

மன்னரின் அழைப்பை ஏற்று அவரும் லால்கோலாவுக்குச் சென்றார். அங்கே ஹிந்துக் கோயில்களால் சூழப்பட்ட விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஜகதாத்ரி, துர்கா, காளி – மூன்று வடிவங்களில் தெய்வங்களைப் பார்த்த பிறகு, ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். எனினும் விரக்தி குறையவில்லை. பிரிட்டிஷ் அட்டூழியங்களுக்கு எதிராக வங்காளத்தை இந்தியாவின் பிற பகுதிகளுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து யோசித்தார். அவர் மனத்தில் ஒரு மந்திரம் உருப்பெற்றது. 

லால்கோலாவில் ‘மாகி பூர்ணிமா’ (முழு நிலவு) இரவு, பங்கிம் சந்திரர் 13 எழுத்துகள் கொண்ட ‘வந்தே மாதரம்’ சொற்றொடரை உருவாக்கினார். பின்னாளில் அந்த மந்திரம் பூர்வீக மக்களின் ரத்தத்தை உசுப்பேற்றியது. ஆங்கிலேயரின் ரத்தத்தையும் கொதிக்க வைத்தது. 

இந்தப் பாடலுடன், ஆனந்தமடம் நாவலின் ஒரு பகுதி முதன்முதலில் 1881ல் வங்கதர்ஷன் பத்திரிகையில் (தொகுதி 7) வெளியிடப்பட்டது. அவரது காவிய நாவலான ஆனந்தமடம் ஏப்ரல் 1882இல் முழுதாக வெளியிடப்பட்டது. இந்த நாவல் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சன்னியாசி கிளர்ச்சியின் போது, பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு எதிரான சுதந்திரப் போராளிகளின் முயற்சிகளை சித்திரித்தது. அதன் பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். நாவலின் கணிசமான பகுதியை மாற்றுமாறு வற்புறுத்தினர். தொல்லையைத் தாங்க முடியாத அவர் 1885-86ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் உருவாக்கிய மந்திரச் சொல்லான ‘வந்தே மாதரம்’, அடுத்த எழுபது ஆண்டுகள் பாரதத்தை ஆண்டது. ஆங்கிலேயரை விருப்ப ஓய்வு பெறச் செய்து நாட்டை விட்டே விரட்டி அடித்தது.